அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை விட்டுவிட்டவர்களாக, தம் மூதாதையர்களான இப்ராஹிம், இஸ்ஹாக், யாகூப் ஆகியோர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களாக, உறுதியான நம்பிக்கையுடன் சிறையில் இருந்தார்கள் யூசுப் (அலை).
இருட்டான சிறைச்சாலை. எது பகல் எது இரவு என்றே தெரியாத அளவுக்குச் சூரியனின் கதிர்க்கீற்று காணாதவர்களாகச் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தாலும், இறைவன் மீதான நம்பிக்கையிலிருந்து யூசுப் (அலை) விலகவில்லை. பாழ்கிணற்றில் கிடந்த தமக்கு இறைவன் செய்த உதவியை நினைத்துக் கொண்டார்கள். தீய இழிச்செயலைவிட சிறைச்சாலை மேல் என்று தாம் பிரார்த்தித்ததையும் யோசித்துப் பார்த்தார்கள். தவறு செய்யாத குற்றமற்ற தமக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்தார்கள்.
சிறைச்சாலையில் இருக்கும் மற்ற சிறைக் கைதிகளுக்கும் ஏக இறைவன் கொள்கையைப் பற்றிப் போதித்தார்கள். அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பது தகுமானதல்ல என்பதைப் புரிய வைத்தார்கள்.
யூசுப்புடன் இரண்டு கைதிகள் ஒரே அறையில் இருந்தார்கள். இருவருமே அரசவையில் வேலை செய்து, அரசரின் அதிருப்தியின் காரணமாகச் சிறைக்கு வந்தவர்கள். ஒருவர் அரசருக்கு மது ஊற்றிக் கொடுப்பவர். மற்றவர் ரொட்டி வாட்டுபவர். இரண்டு பேருக்கும் யூசுப் நபியின் ஞானத்தின் மீது ஈர்ப்பும் மரியாதையும் இருந்தது.
ஓர் இரவு அந்த இரண்டு கைதிகளுமே விசித்திரக் கனவு கண்டார்கள். யூசுப்பின் ஞானத்தின் மீது நம்பிக்கையுடையவர்களாக அவர்கள் யூசுப்பிடம் தங்களின் கனவுகளுக்கான விளக்கத்தைக் குறித்துக் கேட்டார்கள். ஒருவர் தாம் திராட்சை மது பிழிவதாகக் கனவு கண்டதாகச் சொன்னார். மற்றவர், தம் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டதாக விளக்கினார்.
யூசுப் (அலை), அந்தக் கைதிகளிடம் “வெவ்வேறு பல தெய்வங்களை வழிபடுவது நல்லதா? அல்லது யாவற்றையும் படைத்து ஆள்கின்ற ஒருவனான இறைவனை நம்புவது நல்லதா? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் உங்கள் மூதாதையரின் கற்பனையால் விளைந்த தெய்வங்கள். வெறும் கற்பனைப் பெயர்கள் கொண்ட யாதொரு ஆதாரத்தையும் அர்த்தத்தையும் தராதவை. அல்லாஹ் ஒருவனே வழிபாட்டிற்குரியவன், அவனை அன்றி வேறெவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் அவனை வணங்குவதையே அவன் விரும்புகிறான்” என்று சொல்லிவிட்டு, அவர்களின் கனவுகளுக்கான விளக்கத்தை விவரித்தார்கள்.
திராட்சை மது பிழிவதாகக் கனவு கண்டவர் விரைவில் விடுதலையாகி வழக்கம் போல் அவருடைய பணியிடத்தில் தம் முதலாளிக்கு மதுரசம் ஊற்றிக் கொடுப்பார் என்றும், மற்றவர் சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும் என்றும் விளக்கினார். அவருடைய வாக்குப்படி விரைவிலேயே முதலாமவர் குற்றமற்றவர் என்று விசாரனையில் தீர்ப்பாகி விடுதலை செய்யப்பட்டார். இரண்டாமவர் அரசரைக் கொல்ல முயற்சித்தார் என்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை அடைந்தவரிடம் யூசுப் (அலை) “என்னைப் பற்றி உன் எஜமானரிடம் சொல்வீராக” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவரோ விடுதலையாகிய மகிழ்ச்சியில் தம் எஜமானிடம் இதைப் பற்றிக் கூற மறந்துவிட்டார் அல்லது ஷைத்தான் அவரை மறக்கடித்துவிட்டான். இதன் காரணமாக யூசுப் (அலை) மேலும் சில ஆண்டுகள் சிறையிலேயே கழிக்க வேண்டியவராகிவிட்டார்கள்.
சிறையில் இருந்தாலும் அவர்கள் தம் நம்பிக்கையைக் கைவிடவில்லை. இறைத்தூதராகவே இருந்தாலும் இறைவனின் சோதனைகளிலிருந்து அவர்கள் தப்புபவர்களில்லை.
திருக்குர்ஆன் 12:36-42
Leave A Comment