இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) சேர்ந்து இறை இல்லம் புதுப்பித்த பிறகு, இப்ராஹிம் (அலை) கன்னான் பகுதியில் சாராவுடன் இருந்த போது அவர்களிடம் ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராபீல் என்ற மூன்று வானவர்களை அனுப்பி வைத்தான் இறைவன். அவர்களை வானவர்கள் என்று அறியாமல் விருந்தாளிகள் என்று எண்ணி இப்ராஹிம் (அலை) அவர்களுக்குப் பலமான விருந்தை ஏற்பாடு செய்து சாப்பிடச் சொன்னார்கள். வந்தவர்கள் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு அவர்கள் மனிதர்கள் இல்லை என்பதை உணர்ந்து பயந்தார்கள் இப்ராஹிம் (அலை). வந்திருந்த வானவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களைப் பயப்பட வேண்டாமென்றும், அவர்கள் இறைவனிடம் இருந்து நற்செய்தி கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி, இப்ராஹிம் (அலை) அவர்களுக்கும் சாரா அம்மையாருக்கும் ஓர் அழகான குழந்தை பிறக்க இருப்பதைப் பற்றி அறிவிக்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு இஸ்ஹாக் என்று பெயரிடுமாறும், அவர் மூலம் பல நபிமார்கள் இவர்களது சந்ததியில் வரப்போவதையும் அறிவிக்கிறார்கள் வானவர்கள்.
இப்ராஹிம் (அலை) மற்றும் சாரா (அலை) இருவருக்குமே வயதாகிவிட்டதால், “இது எப்படிச் சாத்தியம்? முதுமையாகிவிட்ட இந்த நிலையில் குழந்தையை எப்படிப் பெறுவேன்” என்று ஆச்சர்யமாகச் சாரா (அலை) கேட்டார்கள். அதற்கு வானவர்கள் “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி என்ன ஆச்சர்யம்? இறைவன் நினைத்தால் எதுவுமே சாத்தியமாகிவிடும். அவனுடைய அருளும் பாக்கியமும் உங்கள் மீது உண்டாகும். அல்லாஹ் புகழுக்குரியவன், மகிமை வாய்ந்தவன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
இறைவனின் கட்டளைப்படி இஸ்ஹாக் (அலை) பிறக்கிறார். அவரும் தந்தை இப்ராஹிம் (அலை) அவர்களைப் போலவே ஆற்றல் பெற்றவர்களாக மார்க்க நுணுக்கங்களைத் தெரிந்தவர்களாகவும் ஓரிறை கொள்கையைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்பவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
பின்னாட்களில் இஸ்ஹாக் (அலை) தன் சொந்தத்திலிருந்தே ரிப்காவை மனம் முடிக்கிறார்கள். இஸ்ஹாக் (அலை) ரிப்கா இருவருக்கும் மிகவும் வயதாகியும் பிள்ளைச் செல்வம் இல்லை என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்த போது ரிப்கா கருவுற்றார், இறைவன் இரட்டை ஆண் குழந்தையை அருளினான். அவர்களுக்கு ஈசு என்றும், யாகூப் என்றும் பெயரிட்டனர்.
திருக்குர்ஆன் 11:69-73
-ஜெஸிலா பானு, துபாய்
Leave A Comment