நபி இஸ்ஹாக் (அலை) மற்றும் ரிப்கா அம்மையாருக்கு இரட்டை ஆண் பிள்ளைகளை அல்லாஹ் அருளினான். மூத்தவர் ஈசு, இளையவர் யாகூப். இஸ்ஹாக் (அலை) அவர்களுக்கு மூத்த மகன் மீது பிரியம் அதிகம்.
நபி இஸ்ஹாக் (அலை) அவர்களுக்கு நாளடைவில் கண் பார்வை மங்கி விடுகிறது. ஒருநாள் இஸ்ஹாக் நபி தனது மூத்த மகன் ஈசுவை அழைத்து, தனக்குப் பிரியப்பட்ட உணவை கொண்டு வரும்படி கேட்கிறார்கள். ஈசுவும் அந்த உணவைக் கொண்டு வர வெளியில் சென்று விடுகிறார்கள். இஸ்ஹாக் (அலை) அவர்களின் மனைவி இளைய மகன் யாகூப்பிடமும் இஸ்ஹாக் பிரியம் காட்ட வேண்டும், இளைய மகனுக்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக அண்ணன் ஈசுவுடைய சட்டையை யாகூப்புக்கு அணிவித்து இஸ்ஹாக் (அலை) அவர்களுக்குப் பிடித்த உணவை இளையவர் யாகூப்பிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். உணவை கொண்டுவந்தது யார் என்று அறிந்து கொள்ள இஸ்ஹாக் (அலை), “நீ யார்” என்று கேட்க, “நான் உங்கள் மகன்” என்று பதிலளிக்கிறார் யாகூப் (அலை). உணவருந்திய பிறகு அந்த மகனுக்காக முழுமனதாக மிகவும் உருக்கமாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள் இஸ்ஹாக் (அலை).
இது முடிந்த பிறகு மூத்த மகன் ஈசுவும் தந்தைக்கு உணவு எடுத்து வருகிறார். அதற்கு இஸ்ஹாக் (அலை), “நீ ஏற்கெனவே வந்து உணவு தந்தாயே நானும் உனக்குப் பிரார்த்தித்தேனே” என்று நினைவுபடுத்துகிறார்கள். விஷயத்தை விளங்கிக் கொண்ட ஈசுவுக்குத் தம்பி யாகூப் (அலை) மீது மிகுந்த கோபம். அந்தக் கோபம் நாளடைவில் வெறுப்பாக மாறி கொலை மிரட்டல் வரை சென்றுவிட்டதால் தாய் ரிப்காவின் வேண்டுகோளுக்கிணங்க யாகூப் (அலை) அவர்கள் ரிப்கா அம்மையாரின் சகோதரர் இருக்கும் இடத்திற்கு இரவோடு இரவாகச் சென்றுவிட சொல்கிறார்கள். ஈசுவின் கோபம் தணியும் வரை தனது சகோதரர் லபானுடனே இருக்கும்படி தாய் ரிப்கா மகன் யாகூப்பை கேட்டுக் கொண்டார்கள்.
யாகூப் (அலை) அவர்களை ‘இஸ்ராயில்’ என்ற பெயர் கொண்டும் திருமறையில் குறிப்பிட்டுள்ளது. யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் (அலை) அவர்களை வைத்துத்தான் தொடங்கியது என்பதும் இதன் காரணம்.
திருக்குர்ஆன் 6:84, 2:83
Leave A Comment