இம்மையும் இறுதித் தீர்ப்புநாளும் மறுமையும்

இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று மறுமை வாழ்க்கை. அதாவது உலக வாழ்வு என்பது ஒரு தற்காலிக வாழ்க்கை, அந்த வாழ்வின் முடிவில் ஏற்படும் மரணம் என்பது நிரந்தர மறுமை வாழ்வின் தொடக்கம் என்பதாகும். இம்மையில் அதாவது இந்த உலகத்தில் செய்யும் நன்மைகளுக்கு நற்கூலி மறுமையில் வழங்கப்படும் என்பதும் நம்பிக்கை.

உலக முடிவு நாளுக்குப் பிறகு எல்லா மனிதர்களும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு கேள்வி கணக்கு உண்டு, அவர்கள் பாவங்களை அவர்களே சுமப்பார்கள். நன்மைகள் செய்த நல்லவர்களுக்கு நன்மைகளும் இன்பங்களும் நிலைத்திருக்கும். தீமைகள் மட்டுமே செய்த கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைகளும் தண்டனைகளும் வழங்கப்படும். இறுதிநாள் எப்போது வரும், உயிர்ப்பிக்கும் நாள் எப்போது ஏற்படும் என்று இறைவனைத் தவிர யாருமே அறியமாட்டார்கள் என்பதெல்லாம் அந்த நம்பிக்கையில் அடங்கும்.

ஓரிறைக் கொள்கையைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த நபிகள் இப்ராஹிம் (அலை), இறைவனிடம் இம்மை மறுமை குறித்து கேட்கிறார்கள். அவர்களுக்கு இறைநம்பிக்கை இருந்தாலும் இறந்தவர்களுக்கு இறைவன் எப்படி மீண்டும் உயிர் தந்து எழுப்புகிறான் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலில் இறைவனிடம் கெஞ்சுகிறார்கள்.

“இறைவா, உன்னை உண்மையாக நம்புகிறேன். ஆனால் என் இதயம் அமைதிபெற வேண்டும் என்பதற்காகக் கேட்கிறேன், இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்கு தயவு செய்து காட்டு” எனக் கோருகிறார்கள்.

 

இறைவன் இப்ராஹிம் (அலை) அவர்களை நான்கு பறவைகளைப் பிடித்து, அதனை மீண்டும் அவர்களிடமே திரும்பி வரும்படி பழக்கிக் கொள்ளுமாறும் அதன் பிறகு, அவற்றை அறுத்து அதனுடைய ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டு, அவற்றை அவரிடமே வரச் சொல்லி அல்லாஹ்வின் திருப்பெயரால் அழைத்துப் பார் என்றான். அவ்வாறே செய்த இப்ராஹிம் (அலை), அறுத்து வெவ்வேறு மலைகளில் இருந்த பாகங்கள் ஒன்று சேர்ந்து பறவைகளாக உயிர்பெற்று அவரிடமே வேகமாகப் பறந்து வருவதை சாட்சியாக கண்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன். பேரறிவாளன் என்பதை அறிந்துக் கொண்டார்கள்.

திருக்குர்ஆனில் இறைவன் சொல்கிறான் “யுக முடிவு நாளின் மீது சத்தியம் செய்கின்றேன். குறைகூறிக் கொண்டிருக்கும் உள்ளத்தின் மீதும் சத்தியம் செய்கின்றேன். இறந்து உக்கிப்போன மனிதனின் எலும்புகளை ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அவ்வாறில்லை, அவனுடைய நுனி விரல்களையும் முன்னிருந்தவாறே சீராக்க நாம் ஆற்றலுடையோம்” என்று.

ஒரு மனிதனின் அங்கம் போல் வேறு ஒரு மனிதனின் அங்கம் அமைந்திருந்தாலும், மனித விரல்களின் ரேகைகள் முழுமையாக வேறுபடுவதை உள்ளடக்கியே இவ்வசனத்தில் இறைவன் குறிப்பாக விரல்களையும் முன்பு இருந்ததைப் போலவே சீராக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறான்.

இவ்வுலகத்தில் நல்லவராக வாழ்ந்து இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம்.

திருக்குர்ஆன் 2:260, 75:1-4

– ஜெஸிலா பானு.

By | 2017-03-25T14:21:45+00:00 April 25th, 2016|0 Comments

Leave A Comment