வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை. வெட்கம் என்ற பண்பு இருந்தால்தான் ஒரு மனிதர் தவறான காரியங்களைச் செய்யப்பயப்படுவார். அத்தகைய வெட்கம் சிறிதும் இல்லாதவர்களாகத் திகழ்ந்தார்கள் சோதோம் நகர மக்கள். சாக்கடலின் மேற்கு கரையில் இருந்ததாம் அந்நகரம்.
சோதோம் மக்கள் ஒழுக்கங் கெட்டவர்களாக, தீய குணம் நிறைந்தவர்களாக, வழிப்பறிக் கொள்ளையர்களாக, பயணிகளிடம் திருடிவிட்டு அவர்களைக் கொலை செய்யக் கூடிய கொலைகாரர்களாக, முன் மனித சமூகத்தில் யாருமே செய்யாத இயற்கைக்கு மாறாக ஆணோடு ஆண் உறவு கொள்ளும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களாக, அதுவும் பொது இடங்களில் எல்லாரும் பார்க்கும் வகையில் வெட்கமில்லாமல் புணர்ந்து கொண்டு திரிபவர்களாகவும் எந்த நற்குணங்களும் இல்லாத கொடியவர்களாகவும் இருந்தனர்.
இப்ராஹிம் (அலை) அவர்களின் சகோதரனின் மகன்தான் நபி லூத் (அலை). ஓரிறைக் கொள்கையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ய இப்ராஹிம் (அலை) அவர்கள் நாடு துறந்த போது, அவர்களின் கொள்கையை ஏற்று அவர்களுடன் வெளியேறிவர்தான் நபி லூத் (அலை). லூத்தை இறைவனின் கட்டளைப்படி சோதோம் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் இப்ராஹிம் (அலை). அந்நகரத்திற்கு நபியாக வந்த லூத் (அலை) அந்நகர மக்களின் செய்கைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
மக்களிடம் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அவர்கள் உலகில் எவருமே செய்யாத மானக்கேடான செயலைச் செய்கிறார்கள் என்பதை விளக்கினார்கள். பிறர் பொருளை அபகரிப்பது பாவம், ஆண்கள் ஆண்களிடமே மோகம் கொள்வது தவறு என்று எடுத்துரைத்தார்கள். தான் ஓர் இறைத்தூதனாக வந்திருப்பதைச் சொன்னார்கள்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அவனுக்குப் பயந்து நடந்து கொள்ளவும் வற்புறுத்தினார்கள். லூத்தை அவர் குடும்பத்தார் மட்டுமே ஆதரித்தார்கள் தவிர லூத்தின் மனைவி அவரை ஓர் இறைத்தூதர் என்று நம்பாமல், இழிசெயலில் ஈடுபடுபவர்களுக்குத் துணையாக இருந்தாள். லூத் நபி சொல்வதையெல்லாம் மக்கள் கேட்பதாக இல்லை.
லூத் பிரச்சாரத்தை நிறுத்தாமல் போனாலோ, மக்களின் வழியில் தலையிட்டாலோ அந்த இடத்தைவிட்டு லூத் வெளியேற்றப்படுவார் என்று பயமுறுத்தினார்கள் அந்நகரத்து மக்கள். லூத் (அலை) தமது ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். அவருக்கு வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் தொடர்ந்தது. வருடங்கள் பல சென்றும் மக்கள் மனம் மாறுவதாக இல்லை. “நீர் உண்மையானவர் என்றால் உம் இறைவனின் தண்டனையை எங்களிடம் கொண்டு வா பார்ப்போம்” என்று ஏளனம் செய்தார்கள் தீய மக்கள்.
“என் இறைவனே! தவறு செய்யும் இந்தச் சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற தீய செயலில் இருந்து காப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள் லூத் (அலை).
லூத் (அலை) அவர்களின் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு தமது வானவர்களை அனுப்பி வைத்தான். அந்த வானவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களிடம் நற்செய்தி சொல்லிவிட்டு, சோதோம் நகருக்கு வந்தனர். அவர்கள் முதலில் அங்கு லூத்தின் மகளை ஆற்றங்கரையில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் அந்நகரத்தில் தங்க ஏதேனும் இடம் உள்ளதா என்று விசாரித்தார்கள்.
அந்த வானவர்களின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த மகள், இந்த ஆண் மகன்களுக்கு இந்நகரத்து மக்களால் ஆபத்து வரக்கூடுமென்று அஞ்சி, தான் தன் தந்தையிடம் அவர்களைக் குறித்துக் கூறி இங்கே கூட்டிக் கொண்டு வரும் வரை அந்த இடத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டு விரைந்து சென்றாள்.
தன் தந்தை லூத்திடம் தான் இது வரை பார்த்திராத அழகிய இளைஞர்களைக் கண்ட விவரத்தைக் கூறினாள். அந்த மூன்று இளைஞர்கள் வடிவில் வந்த வானவர்களிடம் லூத் (அலை) விரைந்து சென்று அவர்களைக் குறித்து விசாரிக்கிறார்கள். அவர்கள் அதற்கான பதிலை சரியாகத் தராமல், அவர்கள் ‘லூத்தின் விருந்தினர்களாக வரலாமா’ என்று நேரடியாகக் கேட்க, லூத் (அலை) அவர்களுக்குத் தர்ம சங்கடமாகிவிடுகிறது.
தனது ஊர் மக்களைப் பற்றி வந்த விருந்தினர்களிடம் சொல்ல முடியாது. விருந்தினர்களை உபசரிக்கவும் செய்ய வேண்டும் அதே சமயம், இவர்களை ஆண் மோகம் கொண்ட அந்த ஊர் மக்களிடமிருந்து காக்கவும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவர்களை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் வீட்டில் இவருக்கே எதிராளியான மனைவி தீயவர்களிடம் விருந்தினர்கள் குறித்துத் தெரிவித்துவிடுகிறாள். மக்கள் லூத் (அலை) அவர்களின் வீட்டை முற்றுகையிடுகிறார்கள்.
வெட்கமில்லாமல் இப்படிக் கதவைத் தட்டி ஆண்களை அடைய நினைக்கும் ஆண்களைக் குறித்து நபி லூத் (அலை) மிகவும் வெட்கமும் வேதனையும்பட்டார்கள். மக்களிடம் தமது விருந்தினர்களைக் கெட்ட நோக்கத்தோடு நெருங்க வேண்டாம் என்றும் தம்மை அவர்கள் முன்பு கேவலப்படுத்த வேண்டாமென்றும் கேட்டதோடு, இறைவனைப் பயந்து கொள்ளுமாறும், இதற்கு முன் அழிந்தவர்களை நினைவுகூறவும் வலியுறுத்தினார்கள்.
ஆனால் அம்மக்களோ “உலக மக்களைப் பற்றியெல்லாம் பேச வேண்டாமென்று நாங்கள் ஏற்கெனவே உங்களைத் தடுத்திருக்கிறோமே?” என்று ஆவேசமடைந்தவர்களாக வீட்டின் உள்ளே நுழைந்தார்கள்.
“நீங்கள் ஏதேனும் செய்தே தீர வேண்டுமென்று தீர்மானித்தால், இதோ என் மகள்களைத் திருமணம் செய்து கொள்ளலாமே” என்றார்கள் பொறுமையாக லூத் (அலை). அதைக் கோபமாக மறுத்து “எங்களுடைய விருப்பம் என்னவென்று உங்களுக்குத் தெரியாதா” என்று ஆவேசமாகக் கேட்ட மக்கள், அந்த விருந்தாளிகள் எங்கே என்பதாக நோட்டமிட்டார்கள்.
செய்வதறியாது நின்ற லூத் (அலை) அவர்களைப் பார்த்து வானவர்கள், தாங்கள் இறைவனிடமிருந்து வந்த வானவர்கள் என்றும் இந்த மக்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னதோடு லூத் (அலை) அவர்களை அந்த இரவே இறையச்சமுடைய தன் குடும்பத்தினருடன் அவ்வூரை விட்டு வெளியேறிவிடும்படியும், திரும்பியும் பார்த்திட வேண்டாமென்று கூறினார்கள்.
லூத் (அலை) அவர்கள் மீண்டும் இப்ராஹிம் (அலை) அவர்களிடம் வந்தார்கள். இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு நடந்ததைக் கூறும் முன்பாகவே அவர்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பது குறித்து ஆச்சர்யப்பட்டார்கள் லூத் (அலை). இப்ராஹிம் (அலை) அவர்களைப் போல லூத் (அலை) அவர்களும் தன்னுடைய இறுதிக்காலம் வரை ஏக இறைவனின் பக்கம் மக்களை அழைத்த வண்ணம் இருந்தார்கள்.
திருக்குர்ஆன் 26:160-171, 66:10, 29:31-35, 15:51-77, 11:77-83, 7:81-83, 27:56
– ஜெஸிலா பானு
Leave A Comment