சக பயணிகள்


எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென்பதற்காக உரைநடையாக எழுதப்பட்டது. பகிர்ந்துக் கொள்ள பதிக்கிறேன். [** கவியரங்கில் பாடிய கவிதைக்காக ஜெஸிலாவுக்கு 10,000 ரூபாய் பணமுடிப்பும், மேத்தா விருதும் வழங்கப்படும் என சென்னை குளத்தூரில் பெண்கள் கல்லூரி நடத்தும் சேது குமணன் அறிவித்தார். ‘விருதிற்காக மகிழ்வதாகவும் பணத்தை கவிஞர்கள் பேரவைக்கே அன்பளிப்பாக வழங்குவதாகவும்’ மேடையில் ஜெஸிலா அறிவித்தார். – அப்படின்னு ஆசிப் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள்] இதுதான் அந்த பரிசுப் பெற்ற கவிதை.
————————
விரகம் எழுப்பிய இரவுகளில்
மூடிய அறையின்
மெட்டியொலியும்
சக தோழியின் கடைசி மழலையின்
அழும் குரலும்
மறுநாள் வரை மண்டைக்குள் குடைந்து
உள்ளங்கை வியர்வைக்குள்
எண்ணங்களை அசைப் போட்டு
பயணச்சீட்டை கசக்கும்
நம்பிக்கையற்ற முப்பது

தாய்மைப் பெற தவமிருந்து
வரம் கிடைக்காமல் போனதற்கு
காரணம் இவள் இல்லை
என்று சான்று தந்தும்
இவள் இளமையையெல்லாம்
அள்ளித் தின்ற பிறகு
இவளை ஒதுக்கி வைத்து
அவன் புது மாப்பிள்ளையாகிப் போனான்
புது பொண்டாட்டியும்
‘மலடி’யென இவளைப் போலவே
பெயரெடுப்பாளென
ஏளனச் சிரிப்பில் வேடிக்கை பார்த்தாலும்
பயண மிகுதியில் விட்டுச் சென்ற
ஒற்றைச் செருப்பாய் தன்னை உணரும்
ஓடாய் தேய்ந்தவள்

ஓடிப் போன கணவன் தந்த
ஒற்றைப் பிள்ளையை வீதியில் விட்டு
தனக்கென வாழ்வதற்காக
புது தாம்பத்தியத்தில் காலூன்றாமல்
பிள்ளை வளர்ப்பில்
அகம் மகிழ்ந்து
அவனுக்காக
தொண்டைக்குழியில் ஈரம் வற்ற
காய்கறிகளைக் கூவி விற்று
பிள்ளையின் எதிர்காலத்திற்காக
தமது நிகழ்காலத்தை மறக்கும்
கண்ணியத் தாய்

சீழ் வடியும் புண்ணில்
ஈபோல மொய்க்கும்
பணியிடத்து நிர்வாகிகள்
வறுமையை
உடுத்தும் ஆடையிலும்
எதிர்பார்க்கும்
சபலப் பார்வைகள்
சல்லடையாய் உடம்பை துளைக்கும்
நகைச்சுவை என்ற பெயரில்
கேட்கவே கூசும் சொற்களையும்
செவிமடுத்து வெளிவந்தால்.
பேருந்திலும்
கூடையிலிருந்து விழும் தக்காளி போல
மேலே விழுந்து உரசும்
பயண மன்மதன்களின்
நசுக்கல்கள்
வேறு வழியில்லாமல்
வலியோடு
இவற்றை
தாங்கிக் கொள்ளும்
பொறுமைசாலி-

கொட்டிக் கொடுத்து
கரை சேர்த்து
வாழும் முன்னே
வண்ணமிழந்து
மூளியாக முடக்கி விட்டு
‘கைம்பெண்’ என்றெழுதி
பொட்டு வைத்துக் கொண்டு
துருப்பிடித்த பிடிமானமும் தராமல்
அமங்கலியென ஒதுக்கி வைக்கப்படும்
சமூகக் கட்டுக்குள் அடைபட்டவள்-

ஒரே இடத்தில் நின்று
சிறகடித்துச் சுழலும்
மின்விசிறியைப் போல
கருவுற்ற களிப்பையும்
மனதில் அடக்கி
பக்குவமாக இருந்து
மாதங்கள் பல சுமந்து
பெற்றெடுத்தாள்
கண்ணிலும் காட்டாமல்
கள்ளிப் பாலுக்கு
கருகத் தந்த பெண்சிசுவை
கண்ணுக்குள்ளே வைத்து
கன்னங்களைக் கண்ணீரால்
தினம் கழுவி
மனதை கல்லாக்கி
கணவன் வீடு திரும்பும்
கதியற்ற மருமகள்

வீட்டு வேலை செய்வதற்கும்
படுக்கையில் வேசியாய் இருப்பதற்கும்
வரதட்சணையில் வெந்து வதங்குபவளை
பேருந்திலும் தன் முன்
உட்கார அனுமதிக்காமல்
மருமகளின் கால் கடுப்பில் இன்புறும்
முன்னால் மருமகளான
இந்நாள் மாமியார்

பெண்ணியவாதம்
பெண் விடுதலை
இந்த வார்த்தைகளையெல்லாம்
விசித்திரமாகப் பார்த்து
தங்கள் முகத்திரைகளை எடுக்கவும்
பழகிய வட்டத்திலிருந்து வெளிவரவும்
தயங்கும்
பல்முகம் கொண்ட
இதுபோன்ற பெண்கள்தான்
பெரும்பாலும்
பேருந்தில் மட்டுமின்றி
சமூகத்திலும்
என் சக பயணிகள்!

By | 2007-06-19T10:25:00+00:00 June 19th, 2007|கவிதை|26 Comments

26 Comments

  1. தம்பி June 19, 2007 at 11:37 am - Reply

    ஜெஸிலாக்கா,

    இதுக்குதான் பரிசே குடுத்துட்டாங்களே.

    கவிதையேதான்…

  2. அய்யனார் June 19, 2007 at 11:38 am - Reply

    இககவிதைக்காக மேத்தா சிறப்பு விருது பெற்றதையும் சொல்லியிருக்கலாமே

  3. அய்யனார் June 19, 2007 at 11:38 am - Reply

    கவிதை அட்டகாசம்

  4. C.M.HANIFF June 19, 2007 at 11:38 am - Reply

    Neengal solli irupathu unmaitaan, super jazeela 😉

  5. லொடுக்கு June 19, 2007 at 11:39 am - Reply

    நீங்கள் மகளிர் மட்டும் பேருந்தில் பயணிப்பவர் போலிருக்கு. யாரும் ஆம்பளங்களையே காணோம்.

    கவிதை(?) நல்லா இருக்கு. கண்டிப்பா என்கிட்ட இருந்து சுட்டது இல்லை. அபிஅப்பா வேற அவர் எழுதுன கவிதை ஏட்டுல ஒரு பக்கத்தை காணோம்னு சொன்னார். அவரை படிக்க சொல்லி உறுதிப்படுத்தனும். 😉

  6. ஜெஸிலா June 19, 2007 at 11:58 am - Reply

    நன்றி தம்பி ஆனா நீங்க தங்கச்சின்னு வாய் நிறைய அழைச்சாத்தான் நல்லா இருக்கும். இந்த அக்கா நல்லாவே இல்ல ;-(

    அதான் அய்யனார் சொல்ல வேண்டியவங்க எல்லாம் சொல்லிட்டீங்கள வேறு என்ன? நன்றி அய்யனார்.

    நன்றி ஹனீஃப்.

    லொடுக்கு எல்லோரும் பயணிக்கும் பயணிகள்தான் ஆனா ஒரு ஆண் கூட அதப்பத்தி கவலப்படுவதில்ல. அதனால அவங்களையெல்லாம் என் கண்ணுக்கு தெரியலை ;-). அபி அப்பாவுக்கு வாழ்த்துகள், ஆண் குழந்தை பிறந்த செய்தி கிடைக்க பெற்றேன். எங்க போய் வாழ்த்து சொல்வது? யாராவது தெரிவிச்சுடுங்க அல்லது மின்னஞ்சல் தந்தீங்கன்னா தனி மடல் போட்டிடலாம் அவருக்கு.

  7. ப்ரசன்னா June 19, 2007 at 12:02 pm - Reply

    கவிதை நல்லா இருந்தது.

  8. இராம் June 19, 2007 at 1:49 pm - Reply

    ஜெஸிலா’க்கா,

    கவிதை நல்லாயிருக்குங்க…. 🙂

    //இக்கவிதைக்காக மேத்தா சிறப்பு விருது பெற்றதையும் சொல்லியிருக்கலாமே//

    அப்பிடியா!! வாழ்த்துக்கள்….

  9. ஜெஸிலா June 19, 2007 at 1:53 pm - Reply

    மிக்க நன்றி பிரசன்னா.

    //அப்பிடியா!! வாழ்த்துக்கள்…. // மெய்யாலுமே இராம் தம்பி :-). நன்றி.

  10. ரவிசங்கர் June 20, 2007 at 5:22 am - Reply

    காட்சிகள், பாத்திரங்கள் நல்லா இருக்கு. வரிகளை ரொம்ப ஒடிச்சு எழுதிட்டீங்களோன்னு தோணுது. வசன கவிதைகளில் ஒரு வரிக்கு இன்னும் கூடுதலான வார்த்தைகளைக் கொண்டு கூட எழுதலாம். தொடர்ந்து கவித்துமான தருணங்கள் வாய்க்க வாழ்த்துக்கள்

  11. jaseela June 20, 2007 at 5:22 am - Reply

    nichayam ithu oru kavithaithaan …….pengalin prachanaigalai almost ella konangalilum eduthu kaatti irukkireergal…….nice:)

  12. ranjan June 20, 2007 at 5:47 am - Reply

    மிகவும் நல்லா இருக்கு வரதச்சனையை பற்றி எழுதியிருந்தீர்கள் அதுதான் உன்மை முன்னால் மருமகள் இப்ப மாமியார் அதை யாரும் புறிவது இல்லை

  13. ஜெஸிலா அக்கா,

    வெறுமனே வார்த்தைஜாலம் காட்டாமல், சமூக உணர்வோடு கூடிய சிந்தனைக் கவிதை!!

    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  14. ஜெஸிலா June 20, 2007 at 10:05 am - Reply

    //காட்சிகள், பாத்திரங்கள் நல்லா இருக்கு. வரிகளை ரொம்ப ஒடிச்சு எழுதிட்டீங்களோன்னு தோணுது.// உண்மைதான் ஆனால் மேடையில் வாசிக்கும் போது அப்படி ஒடியும் அளவுக்கில்லை என்று நினைக்கிறேன். கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    //nichayam ithu oru kavithaithaan // அப்படியா? நீங்க சொன்னா சரிதான் 😉 ஜெசிலா, யாராவது இந்த பின்னூட்டத்தை பார்த்தா எனக்கு நானே பி.க. செஞ்சுக்கிட்டேன்னு நினைக்க போறாங்க. பெயரில் பெரிய ஆறுதலே உங்க spelling தான். ஆமா எப்போ நீங்க வலைப்பூ ஆரம்பிக்க போறீங்க?

    மிக்க நன்றி ரஞ்சன் & குட்டி பிசாசு.

  15. ஒடுக்கப்படும் பெண்களைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். சிறப்பு பரிசு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள். ஆனாலும் பரவாயில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.

    பின்குறிப்பு: சீல் வடியும் புண்ணில்

    சீழ் வடியும்

  16. Anonymous June 20, 2007 at 1:53 pm - Reply

    போலிகள் நடமாட்டமா இருக்கே?

  17. ஜெஸிலா June 20, 2007 at 2:31 pm - Reply

    வெளிப்படையான கருத்துக்கு நன்றி சுந்தர். தவறை திருத்திவிட்டேன்.

    அனானி, போலி நடமாட்டமென்று உங்களை நீங்களே சொல்லிக்கிறீங்களா? புரியலையே?

  18. ஜெஸிலா (இப்படி ஒருமையில் அழைக்கலாம்தானே)

    ஒரே ஒரு பொய் சொல்லிக்கொள்ள அனுமதி உண்டாயின் “கவிதை சூப்பர்”

  19. மன்னிக்க உங்களையும் மாட்டி விட்டுட்டேன்..கலந்து கொள்ளுங்கள்..

    http://nilavunanban.blogspot.com/2007/06/blog-post_26.html

  20. Anonymous January 24, 2008 at 6:39 am - Reply

    dear jazeela madam,
    really all your kavitas are
    wonderful,i feel bad that i miss your writings for 2 years .and when i read your courgeousness on amiragam for what u did for your parents more than a son …i respect u.wish a all a sucess,prosperous future.
    zakkir .ksa.

  21. ஜெஸிலா January 24, 2008 at 6:43 am - Reply

    Zakkir, you are flattering me by your comments. 🙂 Thanks anyway.

  22. சுல்தான் January 24, 2008 at 8:46 am - Reply

    உண்மையாக பரிசு பெற தகுதியுடைய கவிதைதான். உணர்ந்து அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.

  23. ஜெஸிலா January 24, 2008 at 8:47 am - Reply

    சுல்தான் பாய், ரொம்ப நன்றிங்க. எப்பவோ வந்த பதிவை இப்ப படிக்கிறீங்களே ::-)

  24. Anonymous January 27, 2008 at 2:44 pm - Reply

    its not flattering, its an apprecition and honouring any how
    ‘u deserved for it.
    barattaum kudatha? kavitaikaha parattiye thiruvennnnnn. zakkir.ksa

  25. Anonymous February 2, 2008 at 1:52 pm - Reply

    S.Ramakrishnan is the dialogue writer of Beema film.

  26. எல்லா வரிகளுமே நல்லாயிருக்கு

Leave A Comment Cancel reply