குறையேதுமில்லை


புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்
புகையாத அடுப்பை புகைவதாக சொல்லி
வீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்

மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்
மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லி
மடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்

அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்
அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்று
அணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்

உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று
உலுக்கி பெறுகின்றாய்
உகந்ததை தரவே செய்கின்றேன்
உள்ளம் ஒன்றாமல்

எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்
உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்
பிடிக்காமல் போனாலும்

சொல்லத்தான் செய்கிறோம்
ஒன்றாய் வாழ்கிறோமென்று

By | 2009-08-31T11:31:00+00:00 August 31st, 2009|கவிதை|27 Comments

27 Comments

 1. ஷைலஜா August 31, 2009 at 12:28 pm - Reply

  கவிதையைவிட தலைப்பு உலுக்கிவிட்டது ஜெசிலா… அருமை.

 2. ☀நான் ஆதவன்☀ August 31, 2009 at 6:00 pm - Reply

  கவிதைக்கு பொருத்தமான படம். எங்க புடிச்சீங்க படத்தை?

 3. ராஜா | KVR August 31, 2009 at 6:00 pm - Reply

  பல பெண்களின் உணர்வுகளை அப்பட்டமா சொல்லி இருக்கிங்க

 4. நல்ல கவிதை…

  மடிக்கணினியைப் பற்றி கூறியது மிகவும் ஏதார்த்தம்.

 5. மிஸஸ்.தேவ் August 31, 2009 at 6:02 pm - Reply

  //சொல்லத்தான் செய்கிறோம்
  ஒன்றாய் வாழ்கிறோமென்று//

  ஒன்றி வாழா விட்டாலும் ஒன்றாக வாழ்வதும் கூட பெண்களுக்கான வாழ்வியல் நியாயமோ என்னவோ?நிச்சயம் பலர் இப்படியே.கவிதை நல்லா இருக்குங்க ஜெஸிலா .

 6. கோமதி அரசு August 31, 2009 at 6:03 pm - Reply

  தன் விருப்புகளை மதிக்காத வாழ்க்கை துணையுடன் இணைந்து வாழும் பெண்ணின் மனக்குமறல் கவிதை அருமை.

 7. கோபிநாத் August 31, 2009 at 6:04 pm - Reply

  படத்தை பார்த்து கவிதை எழுதினிங்களா!!?

  அந்த அளவுக்கு தலைப்பு, படம், கவிதை எல்லாமே நல்லாயிருக்கு 😉

 8. PITTHAN September 1, 2009 at 7:16 am - Reply

  நல்ல ஆழமான கருதுக்கள், பொண்களை புரிந்துகொள்ளாத ஆண்கள் விட்டுக்கொடுத்து வாழாதவர்கள், வாழ்க்கையில் மட்டும் அல்ல எதிலும் முன்னெற முடியாது.பொண் ஒரு சக்தி என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

 9. R.Gopi September 1, 2009 at 7:17 am - Reply

  //புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்
  புகையாத அடுப்பை புகைவதாக சொல்லி
  வீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்//

  என்ன, இம்புட்டு சோகம்??

  //மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்
  மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லி
  மடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்//

  சோக‌மும், ஏமாற்ற‌மும் மிக‌ ந‌ன்றாக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு இருக்கிற‌து…

  //அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்
  அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்று
  அணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்//

  த‌ன‌க்கு ம‌ட்டுமே பிடித்த‌தை அனைவ‌ரும் விரும்ப‌ வேண்டும் என்ப‌து ஆதிக்க‌ நிலை… அதை ந‌ன்றாக‌ எழுதி இருக்கிறீர்க‌ள் ஜெஸிலா…

  //எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்
  உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்
  பிடிக்காமல் போனாலும்

  சொல்லத்தான் செய்கிறோம்
  ஒன்றாய் வாழ்கிறோமென்று//

  ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு…

  வாழ்த்துக்க‌ள் ஜெஸிலா… இரு ம‌ன‌ம் ஒன்றுப‌ட்டு வாழும்போது தான், அங்கு ம‌கிழ்ச்சி, குடியேறுகிற‌து… அந்த‌ நிலை அனைத்து குடும்ப‌ங்க‌ளிலும் வ‌ரும் நாள், சந்தோஷ‌ம் பொங்கும்… உற்சாக‌ நாள்….

 10. அகமது சுபைர் September 1, 2009 at 7:17 am - Reply

  வார்த்தைகளில் சிலம்பம் ஆடாமல் மெல்லிய இசை போல வருடிச்சென்ற கவிதை இறுதி வரிகளில் பேரிரைச்சலாய் முடிகிறது..

  நல்ல கவிதை..

  நானும் இப்படித்தான் இருப்பேனோ? அப்டின்ற பயம் வருது..

  வாழ்த்துகள் (என்னையும் சிந்திக்க வச்சுட்டீங்க!)

 11. சின்ன அம்மிணி September 1, 2009 at 7:17 am - Reply

  //கோபிநாத் சொன்னது…

  படத்தை பார்த்து கவிதை எழுதினிங்களா!!?//

  கோபி சொன்னது சரியா இருக்கு.
  ஆனா விட்டுக்கொடுத்தல்தான் வாழ்க்கையேன்னு பலருக்கு ஆகிப்போச்சு.

 12. கலையரசன் September 1, 2009 at 7:18 am - Reply

  ஜெசிலாக்கா….எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற கவிதையில், இயல்பான வரிகளும், உண்மையான வார்த்தைகளும் இரண்டறக் கலந்து இதயத்தில் இறங்குகின்றன…வலியாய்..

 13. ஜெஸிலா September 1, 2009 at 7:51 am - Reply

  நன்றி ஷைலஜா. அனுசரித்து போவது பெண்களுக்கு பழகிய ஒன்றுதானே அதான் தலைப்பு இயல்பா இருக்கு 🙂

  ஆதவன் படத்தை எங்கு பிடிச்சேன்னு சொல்ல மாட்டேனே :-). நானே காபிரைட் பிரச்சனை வருமோன்னு பயந்துக்கிட்டு இருக்கேன் 🙂

  நன்றி ராஜா.

  நன்றி செந்தில்.

  வாழ்வியல் நியாயம் சரி, அதென்ன மிஸஸ் தேவ்? உங்களுக்கு உங்க பெத்தவங்க பெயர் வைக்கவில்லையா? ஏன் பெண்கள் சுயமுகத்தை இப்படி இழக்குறீங்கன்னு புரியலை 🙁

 14. ஜெஸிலா September 1, 2009 at 7:58 am - Reply

  நன்றி கோமதி.

  படத்தை பார்த்து கவிதை எழுதவில்லை கோபி. கவிதைக்கு படத்தை தேடியெடுத்தேன்.

  எல்லா ஆண்களும் அப்படியல்ல சுபைர். நீங்க எந்த வகை என்று எனக்கு தெரியாது சுபைர்.

  ஆமா சின்ன அம்மணி விட்டுக்கொடுப்பது நல்ல விஷயம் ஆனால் அது இருதரப்பிலிருந்தும் இருக்க வேண்டும்.

  இது பித்தன்னா? இல்ல பித்தான்னா? பித்தான் என்பது பிரஞ்சில் ஒரு கெட்ட வார்த்தை :-). நன்றி உங்கள் கருத்துக்கு.

  சோகமில்லை கோபி யதார்த்தம்.

  நன்றி கலையரசன்.

 15. haran September 1, 2009 at 10:09 am - Reply

  சோகமும், இயலாமையும் ஒவ்வொரு வார்த்தையிலும், அவைகளின் இடைவெளிகளிலும்.

  இந்த சாபம் சில ஆண்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நல்லவர்களாய் (அளவிற்கதிகமாய்) இருப்பது, பொதுவாகக் கோழைத்தனமாகவும், ஏமாளித்தனமாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது.

  // உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று
  உலுக்கி பெறுகின்றாய்
  உகந்ததை தரவே செய்கின்றேன்
  உள்ளம் ஒன்றாமல் //

  இந்த வரிகளைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்கள் பிடித்தன.

 16. RAD MADHAV September 2, 2009 at 7:16 am - Reply

  நல்ல கவிதை டீச்சர்….
  கவிதையில் மெல்லிய சோகம் மயிலிறகு போல் தென்றல் காற்றில் ஊசலாடுகின்றது….
  வாழ்த்துக்கள்….

 17. கீழை ராஸா September 2, 2009 at 10:38 am - Reply

  இது உங்களுக்கு கிறுக்கலா…முதல்லே உங்க வலைப்பூ பெயரை மாற்றுங்க…இல்லே இது போன்ற படைப்புகளை இதிலே போடாதீங்க…

  படித்து விட்டு ஒரு நிமிடம் அமைதியாகி விட்டேன்…வேறெதுவும் சொல்வதற்கில்லை…

 18. சுல்தான் September 2, 2009 at 10:39 am - Reply

  இத்தனை வலிகள் இருந்தும் 'குறையேதுமில்லை' என்ற தலைப்பு அற்புதமாய் பொருந்தி வருகிற அழகுக் கவிதை ஜெஸீலா.

  வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வேறு வேறு விதமாக இருக்கும். நாம் குறை சொல்லும் அவருடைய பார்வையில் பார்த்தால் அதன் உண்மைகள் புரியலாம். எனினும் நான் மட்டும் ஏன் அவ்வாறு பார்க்க வேண்டும்? அவரும் பார்த்தாலென்ன? என்ற கேள்விக்கு….

  சரியான பார்வை பார்க்க முதலில் நம்மை பழக்கப் படுத்திக் கொள்வோம். எல்லாம் மாறும் என்ற நன் நம்பிக்ககையில். நான் சொல்வது பெண்களுக்கானது மட்டுமன்று ஆண்களுக்காகவும்தான்.

 19. ஜெஸிலா September 2, 2009 at 10:48 am - Reply

  //இந்த சாபம் சில ஆண்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.// உண்மைதான் ஹரன். நன்றி.

  நன்றி மாதவ்.//மெல்லிய சோகம் மயிலிறகு போல் தென்றல் காற்றில் ஊசலாடுகின்றது….// ஆஹா கவித கவித 🙂

  பலருக்கு சொன்னதை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன். கீழைராஸா, நமக்கு நன்றாக இருப்பது பலருக்கும் கிறுக்கலாக தோன்றலாம் அதனால் பாதுகாப்பு உணர்வோடு கிறுக்கல்கள் என்று வைத்துக் கொண்டேன் 🙂

  குறைகளையே சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்க்கையின் நிறைகளை கவனிக்காமல் போய்விடக் கூடுமென்பதால் பல பெண்கள் எத்தனை இன்னல்களிலிருந்தாலும் ‘குறையேதுமில்லை’ என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். நன்றி சுல்தான் ஐயா.

 20. 🙁

  உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று
  உலுக்கி பெறுகின்றாய்
  உகந்ததை தரவே செய்கின்றேன்
  உள்ளம் ஒன்றாமல் //

  இதை விட நாகரிகமாய் சொல்லத்தான் முடியுமா?

  அடுக்கடுக்கான வார்த்தைகளில் அடிச்சு துவைச்சிட்டீங்க.

 21. குசும்பன் September 5, 2009 at 10:44 am - Reply

  //வாழ்த்துகள் (என்னையும் சிந்திக்க வச்சுட்டீங்க!)//

  வாழ்த்துக்கள் ஜெஸிலா!

  (சுபைரையும் சிந்திக்க வைக்கமுடிந்தற்காக:))) , எத்தனை கஷ்டமான ஒன்றை உங்கள் கவிதை செய்து முடித்திருக்கிறது)

 22. அகமது சுபைர் September 7, 2009 at 8:18 am - Reply

  //(சுபைரையும் சிந்திக்க வைக்கமுடிந்தற்காக:))) , எத்தனை கஷ்டமான ஒன்றை உங்கள் கவிதை செய்து முடித்திருக்கிறது)//

  குசும்பா,

  இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொல்லிட்டேன்.

 23. குறையேதுமில்லை கவிமூர்த்தி ஜெசிலா
  உங்கள் கவிதை அருமை அருமை

  வாழ்த்துக்கள்

 24. ரஸனைகளும், மனதின் அலைவரிசைகளிம் ஒத்து போவது அபூர்வமாக நிகழ்வது தான். விட்டு கொடுத்தல் இரண்டு பக்கமும் இருந்தால் வழ்வில் குறையேதுமில்லை.
  ஆனால் விட்டு கொடுப்பதே வாழ்க்கையானால்…

  சேனலை மாற்ற இது என்ன தொலைக்காட்சியா?

  தவறு இரண்டு பக்கமும் இருக்கலாம். ஒரே ஒரு நாளாவது நல்லவனாக/நல்லவளாக இருக்கும் முடிவுடன் தன் பக்கம் என்ன குறை என சிந்திப்பது தான் சரியான ஆரம்பம்.

  இத்தனை தூரம் சிந்திக்க தூண்டியது உங்கள் கவிதையின் வெற்றி!

  ஒ.நூருல் அமீன்

 25. crown September 13, 2010 at 8:55 am - Reply

  விட்டுக்கொடுப்பதும்,பிரியத்தை பிட்டுக்கொடுப்பதும் தான் உன்மை இல்லறம் இங்கோ மனைவியின் நிலையோ எஞ்சிய நாளுக்காய் மாரடிக்கவேண்டிய ,தாலிக்காய் ஒத்துழைக்கவேண்டிய சூழ்னிலை விலைமாதரின் மனனிலையும்,அதைவிட கிழ்னிலை உதாசினமும் …ரணத்தை மனதில் சுமந்து கொண்டு ஊருக்காய் இந்த வாழ்கை பாவம் அந்த பெண்.

 26. கவிதை உணர்வுபூர்வமாக இருக்கிறது.எதிர் வரும் காலங்களில் உங்கள் வலைத்தளத்தை இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நான் தயாரிக்கும் 'தூவானம்' கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். வாழ்த்துக்கள் சகோதரி

 27. Jazeela Banu April 1, 2013 at 10:39 am - Reply

  ஒரு கவிதைக்கு மூன்ற் வருடத்திற்கு பிறகு பின்னூட்டம். நன்றி கவிஞர் அஸ்மின். உங்கள் தூவானம் வான் உயர வாழ்த்துகள்.

Leave A Comment