தலையெழுத்தை மாற்ற முடியுமா?

எது எதில்தான் பெண்ணுக்குப் பெருமை என்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு. பெண் என்று நான் குறிப்பிடுவது பொதுப்படையாத்தாங்க அப்புறம் என்னைத்தான் குறிப்பிட்டாய் என்று கிளம்பிடாதீங்க தாய்க்குலங்களே.

ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணை எல்லாக் காலங்களிலும் சார்ந்தவளாகிறாள். சார்ந்தவளாகிறாளா அல்லது சார்ந்தவளாக்கப்படுகிறாளா என்பது புதிராகவே உள்ளது. இதில் எந்த நாட்டுப் பெண்களும் விதிவிலக்கல்ல. பிறந்தவுடன் தந்தையை, தந்தையில்லாமல் போனால் குடும்பத்தில் உள்ள ஆண்களை அதாவது அண்ணன்- தம்பி / மாமன் -மச்சான் என்று யாராவது, திருமணத்திற்குப் பிறகு கணவனை, கடைசி காலத்தில் பிள்ளையை. அதுவும் ஆண் பிள்ளை இல்லாத, கணவன் இல்லாத பெண்ணாகப் போனால் மருமகனைச் சார்ந்தவள் என்று ஆகிவிடுகிறது.

பெண் பெருமை என்று ஆரம்பித்துவிட்டு எங்கேயோ வந்துவிட்டேன். அதான் பெண்ணைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் இப்படித்தான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடியும். பெண்ணுக்குப் பெருமை அவள் பெயருக்கு முன்னால் தந்தையின் முதல் எழுத்தை காணாமலாக்கிவிட்டு திருமணத்திற்குப் பிறகு கணவனின் முதல் எழுத்தைப் போட்டுக் கொள்வதாம். இப்படியும் சில பெண்கள்.

இப்படித்தான் என் அக்கா ‘S’-இல் தொடங்கும் என் தந்தையின் முதல் எழுத்தை நீக்கிவிட்டு திருமணத்திற்கு பிறகு கணவனின் பெயரில் ‘C.N.’ என்று மாற்றிக் கொண்டாள். பாஸ்போர்ட்டில் அவள் பெயர் கணவனின் பெயருக்குப் பிறகுதான் அவள் பெயர் வரும். மருத்துவ பரிசோதனை, ஓட்டுனர் உரிமம் என்று எந்த இடத்திற்குச் சென்றாலும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரை வைத்துத்தான் அழைப்பார்கள். அவளை எப்படி அழைப்பார்கள் தெரியுமா? ‘காடரலி’ என்று ‘ஸ்டைலாக’ அழைப்பார்கள் காரணம் அவள் கணவனின் பெயர் காதர் அலி நஜிமுதீன் (Cader Aly Nagemudeen). அவளுக்கே தன்னை அழைக்கிறார்கள் என்று தெரியாமல் உட்கார்ந்திருப்பாள். இப்போது அவள் பெயரே மறைந்து கொண்டும், மற்ற பெயரில் விளித்தால்தான் திரும்புவேன் என்ற நிலைக்கும் வந்தாச்சு. அக்கா இப்படியென்றால் அம்மா அதற்கும் மேல். அம்மாவின் பெயரை யாராவது கேட்டால் திருமதி. சாகுல் அமீது என்பார்கள். ஒருநாள் நான் கேட்டேவிட்டேன். ஏன் இப்படி என்று? இவர்கள் உண்மையான காரணம் சொன்னார்களா அல்லது எனக்காக, நான் சண்டைக்கு வருவேன் என்று காரணம் சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொன்ன காரணம் அவர்கள் பெயர் அவர்களுக்கே பிடிக்கவில்லையாம். அப்படியே அவர்கள் பெயர் சொன்னாலும் உங்க பெயரைச் சொல்லுங்க என்று கேட்பார்கள் ஏனெனில் அம்மாவின் பெயர் ‘ஷாஜகான்’ மகள் ஒரு ஆணைப் போல் தைரியமானவளாக இருக்கட்டும் என்று தாத்தா வைத்த பெயர் அப்படி.

சில பத்தாம்பசலிகள் கணவனின் பெயரை வாயால் சொல்லி விடுவதும் குற்றம் என்று இன்றைய சூழலிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவாவது இப்போது கொஞ்சம் மறைந்து வருகிறது என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இன்னாரின் திருமதி என்றும் தந்தை பெயரை நீக்கிக் கணவர் பெயரின் முதல் எழுத்தை ‘இன்னிஷியலாக’ சூட்டிக் கொள்வது கொஞ்சம் அதிகமாகப் படுகிறது எனக்கு. மொத்த அடையாளத்தையும் மறைத்து, மாற்றிக் கொள்வது அதிகம்தானே? நீ நீயாக இரு, உனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள் என்று சொல்வதில் தவறிருக்கா என்ன?

தந்தையுடைய முதல் எழுத்தைப் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் எப்போதிலிருந்து வந்தது, ஏன் வந்தது? மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே பெயரில் பலரிருந்தால் பெயர் குழப்பம் வராமலிருக்க இப்படி சேர்த்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இது உண்மை காரணமாக இருக்க முடியாது இரட்டைப் பெயர் கொண்டவர்களுக்குமா பெயர் குழப்பம் வரும் அப்படிப் பார்த்தால் தாய் தன் கற்பை நிரூபிக்கவே குழந்தையின் பெயருக்கு தந்தையின் முதல் எழுத்தை வைக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. என் நண்பர் ஒருவர் தன் தாயின் பெயரின் முதல் எழுத்தை ‘இனிஷியலாகவும்’ தன் தந்தையின் பெயரை பெயருக்குப் பின்னாலும் போட்டுக் கொள்வார் – வ. முரளி சண்முகவேலன் என்று. தாய் தந்தை இருவருமே தன் பெயரில் வைத்துக் கொள்ள இப்படிச் செய்யலாம். அப்படியே நடைமுறையுமாக்கலாம் அல்லது தன் பெயரை மட்டுமே எழுதலாம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடப்பது சாத்தியமா?

51 Comments

  1. அபி அப்பா April 4, 2007 at 5:39 am - Reply

    மாற்ற முடியாது:-)) நான் தான் பஸ்ட்டு என்பதை:-))

  2. அய்யனார் April 4, 2007 at 6:28 am - Reply

    அபி அப்பா கலக்கிட்டீங்க 🙂 சாயந்திரம் முடிஞ்சா போன் பண்ணுங்க போன் பன்னுங்க 🙂

  3. அபி அப்பா April 4, 2007 at 7:39 am - Reply

    //அய்யனார் said…
    அபி அப்பா கலக்கிட்டீங்க 🙂 சாயந்திரம் முடிஞ்சா போன் பண்ணுங்க போன் பன்னுங்க 🙂 //

    சரிங்க அய்யனார், போன் பண்ணுகிறேன், காலைல என்னா நாஸ்டா?

    அய்யா அய்யனார், ஜெஸீலாக்கா ஒரு சீரியஸ் பதிவு போட்டிருக்காங்க, அதுக்கு பதில சொல்லுப்பா, அத விட்டுட்டு சேட்டிங் விளையாட்டு வெளயாடிகிட்டு இருக்கியே:-))

  4. ஜெஸிலா April 4, 2007 at 7:42 am - Reply

    //அய்யா அய்யனார், ஜெஸீலாக்கா ஒரு சீரியஸ் பதிவு போட்டிருக்காங்க, அதுக்கு பதில சொல்லுப்பா,// பெண்கள் விஷயம்னாலே ஆண்களுக்கு கேலி கிண்டல்தானே 😉 ஆமா என்ன அபி அப்பா எல்லோரும் அக்கா சொக்கான்னு கூப்பிட்டுக்கிட்டு? ‘ஜெஸிலா’ என்றே கூப்பிடுங்க நான் கோபிச்சுக்க மாட்டேன்.

  5. அபி அப்பா April 4, 2007 at 7:50 am - Reply

    ஜஸீலாக்கா, இந்த பதிவுக்கெல்லாம் விவாதம் செய்யும் அளவு நாமக்கு மேல் மாடி காலி, அதனால அமரிக்காவில தூங்கிகிட்டு இருந்த கொத்ஸ் சிங்கத்த சொறிஞ்சு விட்டேன், கொஞ்ச நேரத்துல வரும் விவாதிக்க:-))

  6. ஜெஸிலா April 4, 2007 at 7:56 am - Reply

    //ஜஸீலாக்கா,//மறுபடியூ அக்காவா ;-(

    //இந்த பதிவுக்கெல்லாம் விவாதம் செய்யும் அளவு நாமக்கு மேல் மாடி காலி, // பரவாயில்லையே உண்மையெல்லாம் ஒத்துக்குறீங்களே பரந்த மனசுதான் 😉

    //அதனால அமரிக்காவில தூங்கிகிட்டு இருந்த கொத்ஸ் சிங்கத்த சொறிஞ்சு விட்டேன், கொஞ்ச நேரத்துல வரும் விவாதிக்க:-)) // அமெரிக்காவுல இப்ப நடுசாமமாயிருக்காது?

  7. அபி அப்பா April 4, 2007 at 8:17 am - Reply

    //ஆமா என்ன அபி அப்பா எல்லோரும் அக்கா சொக்கான்னு கூப்பிட்டுக்கிட்டு? ‘ஜெஸிலா’ என்றே கூப்பிடுங்க நான் கோபிச்சுக்க மாட்டேன். //

    என் பதிவுகளில் கூட நான் யாரையும் தலையில் அடிப்பது போல் டபார்ன்னு பேர் சொல்லி கூப்பிட மாட்டேன், கோபிதம்பி, வெட்டி தம்பி, சென்ஷிதம்பி இப்படிதான் சொல்வேன்…அதனாலதான்:)

  8. அபி அப்பா April 4, 2007 at 8:29 am - Reply

    நான் வேனா திருமதி.ரியாஸ் அகமதுன்னு கூப்பிடவா?……ஸாரி பதிவே அந்த பிரச்சனைதானா? சரி விவாதத்தை துவங்கி வச்சாச்சு:-))

  9. வெறும் உள்ளேன் ஐயாதான், சாரி அம்மாதான். இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் என் தலைக்கு ஆபத்து.
    வர்ட்டா.

  10. குசும்பன் April 4, 2007 at 8:39 am - Reply

    அட எந்த ஊர்லங்க இன்னும் கணவன் பெயரை சொல்ல தயங்கும் பெண்கள், இருக்கிறார்கள்.

  11. ஜெஸிலா April 4, 2007 at 8:50 am - Reply

    //அட எந்த ஊர்லங்க இன்னும் கணவன் பெயரை சொல்ல தயங்கும் பெண்கள், இருக்கிறார்கள். // கிராமத்து பெண்கள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள். நகரத்தில் வாழும் சில பழங்காலத்து பழக்கமுள்ள அம்மனிகளும் அப்படியேதான் இருக்கிறார்கள்.

    //இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் என் தலைக்கு ஆபத்து.
    வர்ட்டா. // கொத்தனார், ஆபத்து என்று பயப்படும் அளவுக்கு வந்துவிட்டதால் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு 😉

    //என் பதிவுகளில் கூட நான் யாரையும் தலையில் அடிப்பது போல் டபார்ன்னு பேர் சொல்லி கூப்பிட மாட்டேன், // அப்படி யாராவது உங்களை கூப்பிட்டுடக் கூடாதுன்னே அபி அப்பான்னு பாதுகாப்பா வச்சிக்கிட்டீங்களாக்கும். 😉

    //சரி விவாதத்தை துவங்கி வச்சாச்சு:-)) // அதான் பதிவு போடும் போதே துவங்கியாச்சே விவாதிக்கத்தான் ஆளில்லை.

  12. Fast Bowler April 4, 2007 at 8:51 am - Reply

    // அபி அப்பா said…
    மாற்ற முடியாது:-)) நான் தான் பஸ்ட்டு என்பதை:-))
    //

    இல்ல இல்ல. நான் தான் ஃபாஸ்ட்டு.

  13. அய்யனார் April 4, 2007 at 9:12 am - Reply

    அபி அப்பா இதோ வந்துட்டேன்

    ஜெசீலா
    /பிறந்தவுடன் தந்தையை, குடும்பத்தில் உள்ள ஆண்களை யாராவது, திருமணத்திற்குப் பிறகு கணவனை, கடைசி காலத்தில் பிள்ளையை. /
    குடும்பம் அப்படின்னா சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல தோழி சார்ந்து வாழ்வதும் கூடத்தான்.

    அம்மா அக்கா காலத்தை விடுங்க
    ஃபாத்தின் ஜுமானா க்கு ஜெ ஃபாத்தின் ஜீமானா ன்னு வச்சிடுங்க

    அபி அப்பா வெளில மழை பெய்யற மாதிரி இருக்கு சாயங்காலம் கிடேசன் பார்க்ல மங்கலா ஒரு சந்திப்ப போட்டுடுவமா?

  14. அபி அப்பா April 4, 2007 at 9:41 am - Reply

    சரி, யாரும் வராத பட்சத்தில் நானே வருகிரேன் விவாதிக்க,

    என்ன சொல்ல வர்ரீங்க, பெண்கள் முதல் எழுத்தை அப்பா, கணவன் என்று வைத்துப்பதால் அவர்களை குறை சொல்ல வரீங்களா அல்லது எங்க பெயரைதான் முதல்ல போட்டுகனும்ன்னு பெண்கள் ஆண்களால் அடக்கி வைக்கப்படுகிறார்கள் என சொல்ல வர்ரீங்களா?

    இதோ அதுக்கு முன்ன இந்த லிங்ல போய் “பிரசவம்” என்ற டுபுக்கு அவர்களின் கதையை படித்து விட்டு விவாதம் தொடங்கலாம்!

    http://dubukku.blogspot.com/2007_03_01_archive.html

  15. ஜெஸிலா April 4, 2007 at 9:59 am - Reply

    //ஃபாத்தின் ஜுமானா க்கு ஜெ ஃபாத்தின் ஜீமானா ன்னு வச்சிடுங்க
    // நான் அப்படி சொல்லவரவேயில்லை.

    //என்ன சொல்ல வர்ரீங்க, பெண்கள் முதல் எழுத்தை அப்பா, கணவன் என்று வைத்துப்பதால் அவர்களை குறை சொல்ல வரீங்களா அல்லது எங்க பெயரைதான் முதல்ல போட்டுகனும்ன்னு பெண்கள் ஆண்களால் அடக்கி வைக்கப்படுகிறார்கள் என சொல்ல வர்ரீங்களா// டுபுக்குடைய கதையைப் படித்தேன். அந்த கடைசி வரியில் உள்ள அந்த ஆண்மகனின் உணர்வு எத்தனைப்பேருக்குள்ளது? எதற்கு முதல் எழுத்து என்று போட வேண்டும். இந்த பதிவை இன்று பதிந்த காரணமே நேற்று என் மகள் புத்தகத்திற்கு அட்டைப் போட்டு பெயர் எழுதும் போது என் கணவர் வந்து கேட்டார் ஏன் இனிஷியல் போடவில்லை என்று. அதெல்லாம் தேவையில்லை பெயர் எழுதினால் போதும், யாருக்கும் அதே மாதிரி பெயர் இருக்கப் போவதில்லை என்றேன். ‘அப்பா இல்லையா அவளுக்கு’ என்று தொடங்கி, அ’ப்போ அம்மா இருப்பதை எங்க போடுவது’ன்னு என்று என் எதிர்வாதம் தொடர்ந்தது. மொத்தக் குடும்பமுமே அவர்கள் பக்கம்தான். அப்படியே பழகிட்டாங்க மக்கள். ‘என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணுன்னு நினப்பான்னு’ ஆளாளுக்கு கெளப்பிவிட்டாங்க. தனியாக நின்று வாதாடினாலும், நியாயமிருந்தாலும், யாரிடமும் பதிலிருக்காது. எப்பவுமே இப்படித்தான் ;-( இயற்கை நியதி என்கிறார்கள். பெண் கருத்தறிப்பது இயற்கை, அதெப்படி முதல் எழுத்து போடுவது இயற்கையாக முடியும்? என் ஆதங்கத்தை மொத்தமும் பதிவில்தான் போட முடிகிறது ;-( வலைத்தளம்தானே வடிகால் என்னைப் போன்றவர்களுக்கு ;-(

  16. அபி அப்பா April 4, 2007 at 10:42 am - Reply

    டுபுக்கு மனநிலையில்தான் இப்போது உள்ள நாங்கள் எல்லாரும் இருக்கோம். இன்னும் சொல்லப்போனால் டுபுக்குவின் பெரிய ரசிகன் நான். நான் அந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமைக்கு காரணமே எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை என்பதாலே.

    படித்த போதே முடிவெடுத்தாச்சு அடுத்த குழந்தைக்கு என் மனைவியின் பெயரும் இனிஷியல்.

    மற்றபடி திரு. ரியாஸ் அகமது சார் கருத்தில் நான் முற்றிலுமாக வேறுபடுகிறேன்.சார் மன்னிக்கவும்.

  17. ஜெஸிலா April 4, 2007 at 10:46 am - Reply

    //டுபுக்கு மனநிலையில்தான் இப்போது உள்ள நாங்கள் எல்லாரும் இருக்கோம்.// யார் அந்த எல்லோரும் என்று தெரியவில்லை. ஆனால் அந்த மனநிலையில் இருந்தால் சரி.

    //மற்றபடி திரு. ரியாஸ் அகமது சார் கருத்தில் நான் முற்றிலுமாக வேறுபடுகிறேன்.சார் மன்னிக்கவும்.// கவலப்படாதீங்க நான் எழுதுவத யாருமே எங்க வீட்டுல படிக்கிறதில்ல. நீ பேசுறதையே தாங்க முடியல, இதுல இந்த கருமத்த வேற படிக்கனுமானுவாங்க 😉

  18. அய்யனார் April 4, 2007 at 11:05 am - Reply

    ஜெஸிலா சொந்த தோல்விகளின் வடிகாலாய் நீங்கள் நினைக்குமளவிற்க்கு இதில் பெரிய ஆணாதிக்க உணர்வின் வெளிப்பாடு இருப்பதாக எனக்குப் படவில்லை.இதையே நீங்கள் ஆணாதிக்கம் என்று சொன்னால் அது வெற்று விவாதம் தான்

    இது ஒரு விதமான கட்டமைப்பு குடும்பம் என்கிற மிகச்சிறிய வட்டம்,பாதுகாப்புணர்வின் மேலோக்கத்தினால் நமக்கு நாமே போட்டுக் கொண்ட கோடுகள் அவ்வளவுதான்.

    கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் புது சிந்தனைகள் இதை மாற்றியமைக்கலாம்.

    ஆமாம் இந்த பாரதி புதுமைப் பெண் அப்படின்னு என்னதான் சொல்லியிருக்கார் யாராவது இத பதிவா போடுங்களேன்..அவர் பேர ரொம்ப பயன்படுத்திக்கிறீங்களோ ன்னு ஒரு வருத்தம்

    நான் கண்ணம்மா விலே தேங்கிட்டதால அந்த பக்கம் போகல

    🙂

  19. பொய்யனார் April 4, 2007 at 11:16 am - Reply

    //ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணை எல்லாக் காலங்களிலும் சார்ந்தவளாகிறாள். //

    இப்படி ஸ்டேட்மெண்ட் குடுக்குறீங்க.

    //சார்ந்தவளாகிறாளா அல்லது சார்ந்தவளாக்கப்படுகிறாளா என்பது புதிராகவே உள்ளது.//

    இப்படியும் சொல்றீங்க? மொதல்ல நீங்க ஒரு முடிவுக்கு வாங்க.

  20. ஜெஸிலா April 4, 2007 at 11:27 am - Reply

    //ஜெஸிலா சொந்த தோல்விகளின் வடிகாலாய் நீங்கள் நினைக்குமளவிற்க்கு இதில் பெரிய ஆணாதிக்க உணர்வின் வெளிப்பாடு இருப்பதாக எனக்குப் படவில்லை.இதையே நீங்கள் ஆணாதிக்கம் என்று சொன்னால் அது வெற்று விவாதம் தான்// இதுதான் ஆணாதிக்கம் என்று நான் எங்கும் சொல்லவேயில்லை மாறாக பழமைவாதமாகத்தான் படுகிறது. ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் நீங்கள் சொன்ன //நமக்கு நாமே போட்டுக் கொண்ட கோடுகள் அவ்வளவுதான்.// இது போன்ற கோடுகளை எளிதில் தகர்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவ்வளவுதான்.
    //கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் புது சிந்தனைகள் இதை மாற்றியமைக்கலாம்.// புது சிந்தனை ஆங்காங்கே தடையாகும் போது மாற்றம் வர ரொம்பவே சிரமப்படத்தான் வேண்டியுள்ளது.

    //ஆமாம் இந்த பாரதி புதுமைப் பெண் அப்படின்னு என்னதான் சொல்லியிருக்கார் யாராவது இத பதிவா போடுங்களேன்..அவர் பேர ரொம்ப பயன்படுத்திக்கிறீங்களோ ன்னு ஒரு வருத்தம்..// யப்பா நான் பயன்படுத்தலப்பா வீட்டில கிண்டல் செய்தாங்கன்னு தானே சொன்னேன்.

    //இப்படியும் சொல்றீங்க? மொதல்ல நீங்க ஒரு முடிவுக்கு வாங்க. // பொய்யனாரே, அதான் புதிரா இருக்குன்னு சொல்றோம்ல 😉 ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணை எல்லாக் காலங்களிலும் சார்ந்தவளாகிறாள் என்றாலே சார்ந்தவளாக்கப்படுகிறாள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். காரணம் நம் சமூக அமைப்பு அப்படி 😉 இந்த தலையெழுத்தத்தான் மாற்ற முடியுமான்னு கேள்விக் கேட்டிருக்கேன்.

  21. பொன்ஸ்~~Poorna April 4, 2007 at 12:14 pm - Reply

    நல்ல சிந்தனைங்க ஜெஸிலா. இதே போல் ஒரு சமயம், அப்போது தான் பெண் பார்த்துவிட்டு வந்த நண்பர் ஒருவரிடம் பேசி, அவர் தெறித்து ஓடியது நினைவுக்கு வருது 🙂

    டுபுக்கு கதையின் கருத்து வேற.. அவர் கதை சொல்வது போல், இன்றைக்குத் தமிழகத்தில் தாயார் பெயரையும் இனிஷியலாக போட்டுக் கொள்ளலாம். ஆனா பாருங்க, அம்மா பேரைப் போடுங்க, அப்பா பேரைப் போடுங்க, -வளர்த்து ஆளாக்கினவங்க பேரைப் போடுறோம்னு ஒரு நிறைவாவது இருக்கும். ஆனால், அந்தக் கதை முடிவில் பிறந்த குழந்தை ஒரு பெண்ணாக இருந்தால், கல்யாணத்துக்குப் பின்னர், கஷ்டப்பட்டு வளர்த்த அப்பா, அம்மா எல்லாரையும் மறந்துவிட்டு அந்தப் பெயர்களை மாற்றிக் கொண்டு, அப்படியே “நல்ல” பெண்ணா… குடும்ப அமைப்புங்கிறது அந்த பொண்ணோட பேருலதான் இருக்கு பாருங்க.. சரிவிடுங்க.. இதைப் பேசினால் மறுபடி எல்லாரும் தெறிச்சி ஓடிடப் போறாங்க 🙂

    இந்த வகையில் என் அம்மா தெய்வம் :). அவங்க திருமணத்திற்கு முன்னமே வங்கியில் பணி செய்ததால், கடைசிவரை, இப்ப வரை அவங்க அப்பா பெயரைத் தான் வச்சிருக்காங்க.. மாத்தலை.., ஆரம்பத்தில் எனக்கே தப்பா தெரிஞ்சாலும் இப்போ யோசிக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு..

  22. அபி அப்பா April 4, 2007 at 12:29 pm - Reply

    //எது எதில்தான் பெண்ணுக்குப் பெருமை என்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு. பெண் என்று நான் குறிப்பிடுவது பொதுப்படையாத்தாங்க அப்புறம் என்னைத்தான் குறிப்பிட்டாய் என்று கிளம்பிடாதீங்க தாய்க்குலங்களே.//

    உஷாராமச்சந்திரன் மேடம், கீதாசாம்பசிவம் மேடம் ஆகியோர் கருத்து என்னன்னு தெரிஞ்சா இன்னும் நல்லா இருக்கும்!

  23. ஜெஸிலா April 4, 2007 at 12:40 pm - Reply

    நன்றி பொன்ஸ். //இதைப் பேசினால் மறுபடி எல்லாரும் தெறிச்சி ஓடிடப் போறாங்க 🙂 // ம்ம் இப்பவும் தெறிச்சிப் ஒடி காணாமப் போய்டாங்க 😉

    என்ன அபி அப்பா பத்த வைக்கிறீங்களா 😉

  24. அபி அப்பா April 4, 2007 at 12:50 pm - Reply

    சே சே…உங்களுக்காக சூடான் புலியை எழுப்பிவிட போனேன், புலி வந்தா தீனி வேண்டாமா? அதுக்குதான்:-))

  25. துளசியக்கா ரசிகர் மன்றம் April 4, 2007 at 1:08 pm - Reply

    அபி அப்பா,
    துளசிகோபாலை விட்டுவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..

    ராமச்சந்திரன் என்பது உஷாவின் அப்பா பெயர்..

  26. நாகை சிவா April 4, 2007 at 1:09 pm - Reply

    //வெறும் உள்ளேன் ஐயாதான், சாரி அம்மாதான். இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் என் தலைக்கு ஆபத்து. வர்ட்டா. //

    ஏன் இந்த சபை அடக்கம்… ஒன்னும் புரியலையே.

    //அதான் பதிவு போடும் போதே துவங்கியாச்சே விவாதிக்கத்தான் ஆளில்லை. //

    நான் இருக்கேனுங்க, இதோ வரேன்.

  27. நாகை சிவா April 4, 2007 at 1:10 pm - Reply

    //சே சே…உங்களுக்காக சூடான் புலியை எழுப்பிவிட போனேன், புலி வந்தா தீனி வேண்டாமா? அதுக்குதான்:-)) //

    தொல்ஸ் என்ன ஒரு பாசம் என் மீது உங்களுக்கு….

    இது உண்மையான பாசமா, இல்ல தனியா இருக்கோம் துணைக்கு ஒருத்தனை பிடிச்சுட்டு வருவோம் என்ற அக்கறையா?

  28. அபி அப்பா April 4, 2007 at 1:16 pm - Reply

    //ராமச்சந்திரன் என்பது உஷாவின் அப்பா பெயர்.. //

    அதுவும் தான் தப்புன்னு இங்க வாதம்:-))

  29. அபி அப்பா April 4, 2007 at 1:17 pm - Reply

    //இது உண்மையான பாசமா, இல்ல தனியா இருக்கோம் துணைக்கு ஒருத்தனை பிடிச்சுட்டு வருவோம் என்ற அக்கறையா//

    முடியல. எவ்வளவு..எவ்வளவு தான் நா மட்டும் வாங்குவது,:-) பகிர்ந்துப்போம்ன்னு தான்:-))

  30. நாகை சிவா April 4, 2007 at 1:29 pm - Reply

    //பெண் பெருமை என்று ஆரம்பித்துவிட்டு எங்கேயோ வந்துவிட்டேன். அதான் பெண்ணைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் இப்படித்தான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடியும். //

    உண்மை தாங்க… இந்த உண்மை சொல்லுறதுக்கு உங்களுக்கு ரொம்ப தைரியம் இருக்கனுங்க…

  31. நாகை சிவா April 4, 2007 at 1:30 pm - Reply

    //ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடப்பது சாத்தியமா? //

    சொல்லுறது எல்லாத்தையும் சொல்லிட்டு அப்படியே ஒரேடியா ஆண்கள் பக்கம் அடிச்சிங்க பாருங்க…. சூப்பருங்க….. இத படித்த பிறகு என்ன சொன்னாலும் அது வீண் தான். இத பாத்து தான் கொத்துஸ் ஒடிப் போயிட்டாரோ….

  32. அபி அப்பா April 4, 2007 at 1:30 pm - Reply

    ////இது உண்மையான பாசமா, இல்ல தனியா இருக்கோம் துணைக்கு ஒருத்தனை பிடிச்சுட்டு வருவோம் என்ற அக்கறையா//

    புலி, தோ கோபிதம்பிய கூட துணைக்கு கூப்பிட்டாச்சு:-))

  33. ஜெஸிலா April 4, 2007 at 1:36 pm - Reply

    துளசியக்கா ரசிகர் மன்றத்திற்கு,
    அப்பாவின் பெயரோ, கணவரின் பெயரோ எதற்கு பெயரில் மற்றொன்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்? பெண்ணுக்கென்று தனி அங்கீகாரம் இருக்க கூடாதா? ஆண்கள் பெயரில் தன் ஊரை அல்லது வேறேதாவது புனைப்பெயரை வைத்து எழுதுவார்களே தவிர மனைவியின் பெயரையோ அல்லது அம்மாவின் பெயரையோ சேர்த்துக் கொள்வாதில்லை (ஒரு சிலரை தவிர- பாத்திமா மைந்தன், முஜீமைந்தன், மர்யம் கபீர் என்று போட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அது எண்ணிக்கையில் மிகவும் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம்).

    //சொல்லுறது எல்லாத்தையும் சொல்லிட்டு அப்படியே ஒரேடியா ஆண்கள் பக்கம் அடிச்சிங்க பாருங்க…. சூப்பருங்க….. இத படித்த பிறகு என்ன சொன்னாலும் அது வீண் தான். இத பாத்து தான் கொத்துஸ் ஒடிப் போயிட்டாரோ…. // ஓடிப் போக என்ன இருக்குங்க? 😉 கருத்து சரின்னா நம்ம தலைமுறையிலிருந்து மாற்ற வழிவகை செய்யலாமா? நடக்குற காரியமா?

  34. நாகை சிவா April 4, 2007 at 2:21 pm - Reply

    பழைய காவியங்கள் எல்லாம் படிக்கும் போது அதில் இந்த இன்சியல், தந்தை பெயரை சேர்த்து போடுவது, தாயாரை பெயரை போடுவது இருப்பது மாதிரி எனக்கு தெரியல.

    அதை வைத்து பார்க்கும் போது இது நடுவில் வந்த பழக்கமாக தான் இருக்க வேண்டும்.(நீங்க சொன்னது போலவே) இது ஒருவரை தனிப்பட்ட முறையில் வித்தியாசப்படுத்தி காட்டும் பொருட்டாக தான் இருக்கும் என்பது என் எண்ணம்.

    அதை ஏன் தந்தை பெயரை வைத்து வித்தியாசப்படுத்த வேண்டும், தாய் பெயரை வைத்து வித்தியாசப்படுத்தி இருக்கலாமே என்ற ஒரு கேள்வி எழுகிறது.

    அந்த காலத்தில் அனைத்து மதத்தவர்களும் பல துணைவிகள் கொண்டு இருந்து உள்ளார்கள் என்று தெரிகிறது. அதனால் பெண்களை பெயர் வைத்து ஒருவரை அடையாளப்படுத்துவதை விட ஆண்மகனை வைத்து அடையாளப்படுத்துவது சற்றே எளிதாக இருந்து இருக்கலாம்.

    காலப்போக்கில் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்த இன்சியல் பழக்கம் வந்து இருக்கலாம். தன் தந்தை பெயரையோ, தாயார் பெயரையோ தன் குழந்தைகளுக்கு வைப்பதும் சாதாரணமாக இருந்தது. அதுவும் ஒரு காரணமாக இருந்து இருக்கலாம்.

    இந்த பதிவை நீங்கள் இன்சிய்ல இந்த காலத்தில் தேவையா தேவையில்லை என்று வைத்து இருக்கலாம். நல்ல விவாதமாக இருந்து இருக்கும். நீங்கள் பெண்கள் என்று குறுகிய வட்டத்தில் யோசித்து விட்டீர்கள். அதில் தவறும் இல்லை. பெண்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றாகள்.

    இன்சியல் என்பதை இந்த காலத்திற்கு தேவையில்லாது. வெறும் பெயரை மட்டும் சொல்ல வேண்டியது தானே. ஆனா பாருங்க நம்மில் பல பேருக்கு பெயர் என்னவென்று கேட்டால் நம்ம இன்சியல் சொல்லாம பெயரை மட்டும் சொன்னால் ஒரு முழுமையாக சொன்ன மாதிரி இருக்காது. கேட்டவங்களுக்கும் அப்படி தான். இதைக் குறித்து நீங்க யோசித்து பார்த்தது உண்டா?

    என்னுடைய ராகிங்ல கூட இந்த இன்சியலா ஒரு பிரச்சனை வந்தது.

    அதை பற்றி யாராவது கேட்டால் வந்து சொல்லுறேன்.

    இப்ப ஒரு தீர்வுக்கு வரலாம்.

    இன்சியல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த காலத்திற்கு தேவையில்லை. அதே போல் நம் பெயருக்கு பின்னால் தன் தந்தை பெயரையோ, கண்வன் பெயரையோ சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தால் குடும்ப பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் பிறந்த குடும்பமா, இல்லை புகுந்து குடும்பமா என்ற கேள்வி வரும்.(வந்தால் அதை பற்றி பேசலாம்)

    என் அம்மா என் தந்தையின் பெயரை தான் இன்சியலாக போட்டு உள்ளார்கள். நானே கேட்டு இருக்கேன், ஏம்மா இப்படி என்று அது அப்படி தான் என்றார்கள். என் மாமி அவங்க தந்தையின் பெயரை தான் இன்சியலாக போட்டு உள்ளார்கள், அதற்கு அவர்கள் பதில் எனக்கு மாற்ற வேண்டும் என்று தோணவில்லை. மாற்றலை என்பது தான். என் அக்கா இன்னும் என் தந்தை இன்சியல் தான் உபயோகப்படுகின்றார். உங்க ஊரில் தான் இருக்கிறார். அவர் குழந்தைக்கு அவர் கணவரின் பெயரை தான் இன்சியலாக போட்டு உள்ளார்.

    நான் இதை பற்றி யோசித்து பார்த்தேன், நீங்க பதிவு போடும் முன்பே!
    ஒரு ஆண் பிள்ளைக்கு தன் பெயருடன் தாயார் பெயரை சேர்த்தால் பெயரை வைத்து ஆணா இல்லை பெண்ணா என்று கண்டுப்பிடிப்பது சிரமம். மறுபடியும் ஒரு குழப்பம் ஆரம்பத்தில் இருந்து வரும். அதனால் ஆண் பிள்ளை தந்தை பெயரை போட்டுக் கொள்ளட்டும், பெண்கள் தாய் பெயரை போட்டுக் கொள்ளட்டும் என்பது என் அறிவுக்கு சரியாகப்பட்டது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எனக்கு தெரியல….

  35. நாகை சிவா April 4, 2007 at 2:21 pm - Reply

    //புலி, தோ கோபிதம்பிய கூட துணைக்கு கூப்பிட்டாச்சு:-)) //

    இப்படி ஒடி ஒடி போய் ஆள் பிடிச்சா மட்டும் பத்தாது. கருத்தும் சொல்லனும் தொல்ஸ் சொல்லனும்….

  36. நாகை சிவா April 4, 2007 at 2:22 pm - Reply

    //ஆண்கள் பெயரில் தன் ஊரை அல்லது வேறேதாவது புனைப்பெயரை வைத்து எழுதுவார்களே தவிர மனைவியின் பெயரையோ அல்லது அம்மாவின் பெயரையோ சேர்த்துக் கொள்வாதில்லை //

    இது என்னங்க வம்பா இருக்கு. தன் புனைப் பெயரை தேர்ந்து எடுப்பது அவர் அவர் விருப்பத்தை பொருத்தது.

    துளசியும், உஷாவும் வெறும் துளசியாகவும், உஷாவாகவும் பதிவு செய்து இருக்கலாம், இல்லை வேறு புணைப்பெயரை தேர்ந்து எடுத்து இருக்கலாம். அவர்கள் இப்படி பெயர் போட்டு எழுதுவதால் ஆண்களும் அப்படி பண்ணும் என்று சொல்வது சரியான வாதமா இருக்காது.

  37. நாகை சிவா April 4, 2007 at 2:22 pm - Reply

    //நடக்குற காரியமா? //

    நடந்து கொண்டு இருக்கின்ற காரியம் என்பது என் பதில்.

  38. ஜெஸிலா April 4, 2007 at 2:30 pm - Reply

    விரிவான விளக்கத்திற்கும், முதல் எழுத்தைப் பற்றிய ஆராய்ச்சி கலந்த சிந்தனைக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்.
    //அவர்கள் இப்படி பெயர் போட்டு எழுதுவதால் ஆண்களும் அப்படி பண்ணும் என்று சொல்வது சரியான வாதமா இருக்காது. // அடடா அப்படி சொல்ல வரல, பெரும்பான்மையான பெண்கள் இப்படி செய்றாங்க ஆனால் பரந்த மனதுக்கொண்ட ஆண்கள் 😉 அப்படி செய்வதில்லைனு சுட்டிக்காட்டிருக்கேன் அவ்வளவுதானே தவிர அவர்களும் அம்மா பெயரையோ மனைவி பெயரையோ இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையும் பிரப்பிக்கவில்லை உத்தரவும் போடவில்லை.
    //இந்த பதிவை நீங்கள் இன்சிய்ல இந்த காலத்தில் தேவையா தேவையில்லை என்று வைத்து இருக்கலாம். நல்ல விவாதமாக இருந்து இருக்கும்.// அதுக்கென்ன வர நாட்களில் வேறு ஒரு தலைப்பில் விவாதமேடை அமைச்சாப்போச்சு. என்ன தலைப்பு கொடுக்கலாம் சொல்லுங்க..

  39. நாகை சிவா April 5, 2007 at 3:50 am - Reply

    //அடடா அப்படி சொல்ல வரல, பெரும்பான்மையான பெண்கள் இப்படி செய்றாங்க ஆனால் பரந்த மனதுக்கொண்ட ஆண்கள் 😉 அப்படி செய்வதில்லைனு சுட்டிக்காட்டிருக்கேன் //

    பல பரந்த மனதுக் கொண்ட ஆண்களை என்றுமே உங்கள்(நீங்கள் இல்லை) கண்களுக்கு தெரிவது இல்லை, அதற்கு பெரும்பான்மையானோரின் குறுகிய மனமும் ஒரு காரணமாக இருக்குமோ?

    :-))))) (உங்கள் மாதிரியே நானும் ஸ்மைலி போட்டு இருக்கேன் 😉

  40. நாகை சிவா April 5, 2007 at 3:50 am - Reply

    //அதுக்கென்ன வர நாட்களில் வேறு ஒரு தலைப்பில் விவாதமேடை அமைச்சாப்போச்சு. என்ன தலைப்பு கொடுக்கலாம் சொல்லுங்க.. //

    இன்சியல் – இம்சையா? இல்லை இன்றிமையாததா?

  41. KVR April 5, 2007 at 3:53 am - Reply

    ஒண்ணுமே இல்லாத மேட்டருக்கு ஆயிரம் பேரு மறுமொழி போடுவாங்கன்னு (அதுல பாதி உங்களோடது) இந்தப் பதிவுலேர்ந்து தெரியுது 🙂 (சிரிப்பான் போடலைன்னா சீரியஸா எதோ பேசுறதா நினைச்சுப்பாங்களாம், அதான் ஒரு பாதுகாப்புக்கு).

    பொண்ணா இருந்தாலும் ஆணா இருந்தாலும் அப்பா பேரு குடும்பப் பேருன்னு பாஸ்போர்ட் வாங்க போன கேக்க தான் செய்யிறாங்க. அங்கே மட்டும் எங்கள மாதிரி ஆம்பளைங்க பேரை போட்டுக்கோங்க தாய்க்குலங்களே, மத்த நேரத்திலே எங்களை கொஞ்சம் சுதந்திரமா விடுங்க.

    நமக்கு தெரிஞ்ச நாலஞ்சு தந்தைக்குலங்க, தாய்க்குலங்க கண்ணாலம் கட்டின பொறகு மின்னஞ்சல் முகவரிய கூட மாத்திடுச்சுங்க. புருஷன் பொண்டாட்டி பேர போட்டுக்குறாரு and vice versa. என்னடா மேட்டருன்னு பார்த்தா இதுங்க இதுக்கு முன்னாடி ஆடின ஆட்டமெல்லாம் பழைய மின்னஞ்சல தொறந்தா அவுட்டு ஆகிடுமாம். அத்தால இப்படி. நல்லா இருங்கடே

  42. காட்டாறு April 5, 2007 at 3:54 am - Reply

    ஜெஸிலா, என் பெரியம்மா மகன் அண்ணன், அவர் 2 குழந்தைகளுக்குமே initial, தன்னுடையதும், தன் மனைவியுடையதும் தான் வைத்துள்ளார். இது 20 வருடங்களுக்கு முன்பு. அவர் இப்படி செய்தது பெரும் புரட்சியாக கருதப்பட்டது. அவரோ, இதில் என்ன புரட்சி என்பது போல் இருப்பார். சிலர் கேலிக்கும், கேள்விக்கும் ஆளானார் என்ற உண்மையும் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

  43. Fast Bowler April 5, 2007 at 5:16 am - Reply

    மே.இந்தியா – இந்த இன்ஷியலில் கூட ஏதோ பிரச்சனை இருக்குற மாதிரி தெரியுதே?

  44. ஜெஸிலா April 5, 2007 at 6:15 am - Reply

    //இன்சியல் – இம்சையா? இல்லை இன்றிமையாததா? // சிவா இந்த தலைப்பு வேண்டாம் வேறேதாவது பற்றி விவாதம் வச்சிப்போம்.

    //ஒண்ணுமே இல்லாத மேட்டருக்கு ஆயிரம் பேரு மறுமொழி போடுவாங்கன்னு (அதுல பாதி உங்களோடது)// சிப்பான் போடணும்னு அவசியமில்லை கே.வி.ஆர். நீங்க சொல்வது 100% அக்மார்க் உண்மை. உண்மையை எப்போதுமே ஒத்துக்கணும்பா. வலைப்பூவே பேச்சாடல் நடத்துமிடமாகிப் போச்சு. விவாதம் என்று வரும்போது இப்படி நிகழ்வது புதிதில்லையே – அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

    //பொண்ணா இருந்தாலும் ஆணா இருந்தாலும் அப்பா பேரு குடும்பப் பேருன்னு பாஸ்போர்ட் வாங்க போன கேக்க தான் செய்யிறாங்க. // யார் சொன்னது? எல்லாம் கேட்பார்கள்தான் அதற்குரிய இடத்தில் ஆனால் பெயரில் சேர்த்துக்க சொல்வதில்லை. என் மகள் பாஸ்போர்டில் அவள் பெயர் மட்டும்தான் ‘ஃபாத்தின் ஜுமானா’ என்று இருக்கிறது. நீங்க துபாய் வரும்போது காட்டுறேன்.
    //என்னடா மேட்டருன்னு பார்த்தா இதுங்க இதுக்கு முன்னாடி ஆடின ஆட்டமெல்லாம் பழைய மின்னஞ்சல தொறந்தா அவுட்டு ஆகிடுமாம்.// ஓ இப்படிலாம் வேற இருக்குதா? 😉

  45. ஜெஸிலா April 5, 2007 at 6:16 am - Reply

    //கேலிக்கும், கேள்விக்கும் ஆளானார் என்ற உண்மையும் இங்கு சொல்ல விரும்புகிறேன்.// காட்டாறு இதுதான் இன்றைய நிலை.

    //மே.இந்தியா – இந்த இன்ஷியலில் கூட ஏதோ பிரச்சனை இருக்குற மாதிரி தெரியுதே? // எப்படி ஃபாஸ்ட் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோணுது 😉

  46. ஆணாதிக்கம் பெயரிலும் இருக்கிறது என்பது உண்மைதான்.

    ஆனால் பெண்களால் இதை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. தற்காலத்தில் பெயர்மாற்றம் அவ்வளவு முக்கியத்துவத்தை இழந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

    எனக்கு தெரிந்து சிலர் தங்கள் தந்தையாரின் பெயரையே திருமணத்திற்கு பிறகும் பயன்படுத்துகிறார்கள்.

  47. ஜெஸிலா April 6, 2007 at 6:52 am - Reply

    //ஆணாதிக்கம் பெயரிலும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் பெண்களால் இதை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது.// பெண்கள் முதலில் அது தவறென்று யோசித்தால் தானே மாற்றுவது பற்றி யோசிப்பார்கள். 😉 காலம் பதில் சொல்லும்.

  48. KVR April 12, 2007 at 11:12 am - Reply

    //என் மகள் பாஸ்போர்டில் அவள் பெயர் மட்டும்தான் ‘ஃபாத்தின் ஜுமானா’ என்று இருக்கிறது. நீங்க துபாய் வரும்போது காட்டுறேன்.//

    உங்க பொண்ணோட பேருக்கு அப்படி போட்டுட்டிங்க. யாராவது ஒரு மடையன் அவன் பொண்ணுக்கு “நிலா”ன்னு பேர் வைக்க நினைச்சான்னா அவன் எப்படி பொண்ணோட பாஸ்போர்ட்ல எழுதுறதாம்? (சந்தேகத்த நிவர்த்தி செஞ்சிங்கன்னா வருங்காலத்திலே உபயோகப்படும்)

  49. Anonymous May 1, 2007 at 7:49 am - Reply

    can anyone tell, how to get tamil fonts and how i can type it back?.

  50. ஜெஸிலா May 1, 2007 at 8:03 am - Reply

    //can anyone tell, how to get tamil fonts and how i can type it back?. //
    அனானியாக வந்து கேட்கிறீர்கள் அல்லது தனி மடலில் எல்லா குறிப்பு அனுப்பி தந்திருப்பேன்.

    http://buhari.googlepages.com/ekalappai2.exe ல் ஈகலப்பை இறக்கிக் கொள்ளலாம்.

    http://buhari.googlepages.com/anbudan.html#eKalappai எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது பற்றிய விபரங்களெல்லாம் இருக்கும்.

  51. // ஜெஸிலா said…
    என் மகள் பாஸ்போர்டில் அவள் பெயர் மட்டும்தான் ‘ஃபாத்தின் ஜுமானா’ என்று இருக்கிறது. நீங்க துபாய் வரும்போது காட்டுறேன்.//

    ஜெஸிலா அக்கா, உங்க மகளுக்கு மட்டும் இல்லை. புதியதாக பாஸ்போர்ட் எடுக்கும் அனைவருக்கும் “given Name” மட்டும் போட்டு பாஸ்போர்ட் கொடுக்கின்றார்கள். நீங்கள் ஏதோ சண்டை பிடித்து வாங்கியது போல் உள்ளது உங்கள் விளக்கம்.

    இன்சியல் எல்லாம் ஆணாதிக்கத்தால் அல்லது பெண்ணாதிக்கத்தால் எல்லாம் வரலைங்க. இது உலகமெல்லாம் உள்ள ஒரே தியரிதான் தகப்பனின் இன்சியலைப் போடுவது.

    இஸ்லாம் கூறுவதும் இதே. இஸ்லாம் ஏன் இப்படி கூறுகின்றது எனவும் ஆராய்ந்துப் பாருங்கள் உங்களுக்கே எல்லாம் விளங்கும். (இஸ்லாத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் நான் கூறுகின்றேன்.).

Leave A Comment