முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்

நபி முஹம்மது (ஸல்), ‘முஸ்லிம்களின் அடிப்படையே சகோதரத்துவம்தான்’ என்று வலியுறுத்தியதோடு அவர்களுக்கு நற்பண்புகள் போதித்து நல்வழியில் நடத்தினார்கள். மக்கள் நபிகளாரிடம் “இஸ்லாத்தில் சிறந்தது எது” என்று கேட்ட போது, “பசித்தோருக்கு உணவளிப்பதும், அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்” என்றார்கள் நபிகள் நாயகம்.

மற்றொரு தருணத்தில் இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் மக்கள் கேட்டனர் “ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய வேண்டுமென்று.” நபிகள் நாயகம் (ஸல்) தந்த பதில் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இறைத்தூதர்(ஸல்) சொன்ன பதில் “தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!” என்று.

உறவினர்களிடம் மட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) மக்களிடம் அண்டை வீட்டாருடன் இணக்கமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்கள். “எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் இறைநம்பிக்கையாளனே அல்ல” என்று உறுதியாகச் சொன்னார்கள் நபி முஹம்மது (ஸல்).

நபிகளார் சொன்ன அறிவுரைகளும் பொன்மொழிகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை. அண்டை வீட்டார் குறித்து நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தது எந்த அளவிற்கென்றால், ‘அண்டை வீட்டாரை வாரிசாக்கி விடுவாரோ’ என்று நபிகளாரே நினைக்கும் அளவிற்கு அறிவுறுத்தினாராம் வானவர் ஜிப்ரீல் (அலை).

இறைத்தூதர் (ஸல்) சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து கவனித்து மக்கள் செயல்படத் தொடங்கியதால் மக்களிடையே இனவெறி ஒழிந்தது. நிறம், குலம், கோத்திரம், ஏழை பணக்காரர் வேற்றுமைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.

இஸ்லாமை அடிப்படையாக வைத்து நட்பை ஏற்படுத்தியதோடு “முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர். பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை முழுமையான இறைநம்பிக்கையாளராக மாட்டார்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடந்தமையால் அங்கு பாகுபாடு கடந்து இணக்கம் மலர்ந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வழிநடத்திய விஷயங்கள் அத்தனையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்ல விஷயங்களாக இருந்ததால் மக்களிடையே மாற்றங்கள் நிகழ அது முக்கியக் காரணமாக இருந்தது.
“இறை நம்பிக்கையாளர்கள் ஒரே மனிதனைப் போன்றவர்கள். அவனது கண்ணுக்கு வலி ஏற்பட்டால் உடல் முழுவதும் வேதனைப்படுகின்றன, அவனுக்குத் தலைவலி வந்தால் உடல் உறுப்புகள் மொத்தமும் ஸ்தம்பித்துவிடுகின்றன உறங்காமல் விழித்திருக்கின்றன. அப்படியான இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் துணை நிற்கும் விஷயத்தில் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களை ஒன்றோடொன்றுக் கோர்த்துக் காண்பித்து விளக்கினார்கள்.

மக்களும் நபிகளாரின் வாக்குகிணங்க பின்னிப் பிணைந்திருந்தனர்.

ஸஹீஹ் புகாரி 1:2:12, 28, 6:79:6236, 2:34:2067, 6:78:6014, 6015, 6016, 1:2:10,13, 2:46:2446, 6:78:6026, ஸஹீஹ் முஸ்லிம் 45:5045

By | 2017-03-25T14:17:18+00:00 February 7th, 2017|0 Comments

Leave A Comment