‘பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். உள்ளச்சம் இல்லாதவருக்கு அதைக் கடைப்பிடிப்பது பாரமாக இருக்கும்’ என்ற திருக்குர்ஆனின் இறைவசனத்திற்கேற்ப, யாகூப் (அலை) தன் மகன் யூசுப் (அலை) அவர்களுக்காகப் பிரார்த்தித்தபடி இருந்தார்கள்.
எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லாத அந்தக் காலத்தில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல அவர்கள் ஒட்டகங்களையும் குதிரைகளையுமே பயன்படுத்தி வந்தார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் கூட்டம் கூட்டமாகப் பயணிப்பது வழக்கமாக இருந்தது. பண்டம் மாற்று முறையில் வியாபாரம் செய்து வந்த மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல பல பொருட்களைச் சுமந்து வர வேண்டியிருந்தது. அந்த வியாபாரிகள் சிரியாவிலிருந்து பாலஸ்தீன் வழியாக எகிப்து சென்று கொண்டிருந்தனர். வழித்தடங்கள் சரியாக அமைய முன்னால் செல்லும் ஒட்டக ஓட்டி குரல் கொடுக்க, வரிசையாகக் குரல் சமிக்ஷை செய்தபடியே நகர்ந்து வருவது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது.
யூசுப் (அலை) கிடந்த பாழ்கிணற்றுக்கு அருகே இதே போன்ற வியாபாரக்கூட்டம ஒன்று நெருங்கி வந்தது. அவர்களின் குரல் கேட்டுக் கிணற்றில் இருக்கும் யூசுப் (அலை) விழித்துக் கொண்டார்கள். அவர்கள் கிணற்றுக்கு அருகே வருவார்களா என்று எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். பாலைவனத்தின் அருகே ஒரு கிணற்றைப் பார்த்ததும், வியாபாரிகளில் ஒருவர் தண்ணீர் கிடைக்குமா என்று தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி எட்டிப்பார்க்க, அவருக்கு ஒரு சிறுவன் உள்ளிருப்பது தெரிந்தது “நற்செய்தி! உள்ளே ஒரு சிறுவன் இருக்கிறான்” என்று சொல்லியபடி கயிற்றைக் கிணற்றுக்குள் எறிந்து அதனை யூசுப்பின் இடுப்பில் கட்டிக் கொள்ளச் சொல்லி, அப்படியே அவரைத் தூக்கி வெளியேற்றினார்.
மிக அழகான தோற்றத்தை கொண்ட யூசுப்பை கண்டு அவர்கள் வியந்தார்கள். யூசுப் அந்த வியாபாரிகளுக்கு ஒரு வியாபார பொருளாக மட்டுமே தெரிந்தார். காரணம், அந்த நாளில் செல்வந்தர்களுக்கு அடிமைகள் சேவை செய்வதற்கென இருந்தனர். போர் கைதிகளாகக் கிடைப்பவர்களையும், பெற்றோர்கள் இல்லாத சிறுவர்களையும் அடிமைகளாக வாங்கி- விற்கும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. வசதி இல்லாத பெற்றோர்களும் தமது குழந்தைகளையே அடிமைகளாக விற்றுக் கொண்டிருந்த காலம் அது. அடிமையின் உரிமையாளரே அவரை விடுவித்தால் உண்டு அல்லது தம்மை விடுவித்துக் கொள்ள அதற்கேற்ப அவர் உழைக்க வேண்டும். இப்படியாக யூசுப்பை நல்ல விலைக்கு அடிமையாக விற்றுவிடலாம் என்று வியாபாரி நினைத்தாரே தவிர அவரைக் குறித்து விசாரித்து அவரது குடும்பத்தினருடன் சேர்த்துவிட நினைக்கவில்லை. வியாபாரிகள் யூசுப்பை தம்மோடு எகிப்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
யூசுப்பின் அருமை தெரியாதவர்கள் அவரை ஏலத்தில் வெறும் சொற்பவிலை 20 திர்ஹமுக்கு விற்றனர். அந்த நாட்டின் அமைச்சர் யூசுப்பை வாங்கிக் கொண்டார். யூசுப்பை பார்த்தவுடனே அவர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர், நேர்மையான, ஒழுக்கமான, அறிவான சிறுவன் என்று அவருக்குத் தெரிந்தது. யூசுப்பை அவர் தம்மோடு வீட்டுக்கு அழைத்துச் சென்று, தமது மனைவியிடம் யூசுப்பை நல்லமுறையில் பார்த்துக் கொள்ளச் சொன்னார். “இந்தச் சிறுவன் நமக்கு நன்மையைக் கொண்டு வரலாம். குழந்தை இல்லாத நாம் யூசுப்பை நமது மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்றும் அமைச்சர் தம் மனைவியிடம் சொன்னார்.
நாளை நடக்கப்போவது என்னவென்று தெரியாமல் பாழ்கிணற்றில் கிடந்த யூசுப் (அலை) அவர்களுக்கு இறைவன் தகுந்த வசதியளித்தான். கனவுகளின் பலன்கள் பற்றியும் இறைவன் யூசுப்புக்கு போதிய அறிவைக் கொடுத்தான்.
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். ஆனால் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:45, 12:17-21
Leave A Comment