இறைவனால் இஸ்ராயீலர்களுக்கு நியமிக்கப்பட்ட அரசர் தாலூத். அவர் யூசுப் (அலை) அவர்களின் சகோதரர் புன்யாமீன் வழி வந்தவராயிருந்தார். உடல்வலிமை மிகுந்தவராகவும், அறிவில் சிறந்தவராகவும் இருந்தாலும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார்.
தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது ஓர் ஆற்றைக் கடக்கவிருப்பதை அறிந்து, மக்களிடம், “வழியில் ஓர் ஆற்றைக் கொண்டு அல்லாஹ் நம்மை சோதிப்பான். யார் அதிலிருந்து நீர் அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர். யார் அதில் ஒரு கையளவு மட்டும் தண்ணீர் அருந்தி தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த ஆற்றைக் கடக்கிறாரோ அவர்தான் என்னைச் சேர்ந்தவர்” என்று கூறினார்.
எப்போதுமே மாறுபடும் இஸ்ராயீலர்கள் இங்கேயும் சொல் கேட்காமல் அந்த ஆற்றிலிருந்து அதிகமாக நீர் அருந்தினார்கள் சிலரைத் தவிர. நீர் அருந்தியவர்கள் “ஜாலூத்துடனும், அவன் படைகளுடன் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறி அங்கேயே உட்கார்ந்துவிட்டனர். இதிலிருந்து இறைநம்பிக்கையாளர்களையும், தமக்கு முழுமையாகக் கட்டுப்படுபவர்களையும் இனம் கண்டுகொண்ட தாலூத் இறைநம்பிக்கையாளர்களுடன் ஆற்றைக் கடந்தார்கள். நம்பமுடியாத பெருங்கூட்டத்தைக் கூட்டிச் செல்வதைவிட நம்பிக்கைக்குரிய சிறிய கூட்டம் மேலானது என்று எண்ணினார்.
இறைநம்பிக்கை கொண்டவர்கள் சிறு கூட்டத்தினராக இருந்தாலும் அல்லாஹ் நாடினால் பெருங்கூட்டத்தாரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் முன்னேறினார்கள்.
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
திருக்குர்ஆன் 2:249
Leave A Comment