நபித்துவத்தின் ஆரம்ப கால கட்டங்கள்

நபி முஹம்மது (ஸல்) ஆரம்பக் காலத்திலேயே எல்லா மக்களிடமும் மிகவும் இணக்கமாக அன்புடன் நடந்து கொள்பவராக இருந்தார்கள். இதன் காரணமாக மக்களிடம் நன்மதிப்பு பெற்று விளங்கினார்கள். மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை வெறுப்பவர்களாக நுண்ணறிவாற்றல் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடைய சமுதாயம் இணைவைக்கும் கொள்கையில் இருந்ததை அவர்கள் மனம் ஏற்கவில்லை. 

அவர்கள் தமது நாற்பது வயதை நெருங்கியபோது, நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய தூக்கத்தில் இறைச்செய்தி கனவுகளாகத் தோன்ற, அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் அந்தக் கனவுகள் தெள்ளத் தெளிவாக இருந்தாலும் அக்கனவுகளின் விளக்கம் புரியாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களது ஆழ்ந்த சிந்தனை காரணமாகத் தனிமையை விரும்பினார்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய மனதைப் புரிந்தவராக மனைவி கதீஜா (ரலி) அவர்களும், நபி (ஸல்) விரும்பிய தனிமையை அவர்களுக்குத் தந்தார்கள். மக்காவைவிட்டுத் தொலைவில் மலைக் குகைகளில் தியானம் செய்பவருக்கு உணவையும் தண்ணீரையும் தேடியெடுத்துக் கொண்டு தந்தார்கள் கதீஜா (ரலி).

பலமுறை நபி (ஸல்) தனக்குத் தேவையான உணவையும் தண்ணீரையும் அவர்களே எடுத்துக் கொண்டு மலை குகைக்குச் சென்றுவிடுவார்கள். அப்படியாக ஒரு ரமதான் மாதத்தில் மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள நூர் மலையில் ஹிரா குகைக்குச் சென்று இப்பிரபஞ்சத்தை ஆளும் சக்தியைப் பற்றிச் சிந்திப்பவர்களாக, தம்மைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துபவராகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். வியாபாரம் செய்து வந்த நபி (ஸல்) வருடத்தில் சில காலம் இப்படியிருக்கவே விரும்பினார்கள். 

தமது முப்பத்தி ஏழாம் வயதிலிருந்தே நபி (ஸல்) மலைக் குகைக்குச் சென்று தனிமையில் இவ்வுலகத்தை இயக்கும் மறைபொருளை குறித்த தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்று சொல்வதை விட நபித்துவத்தை ஏற்க தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்கள் என்பதே சரியாக இருக்கும். 

(ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:1:1, சீறா இப்னு ஹிஷாம்)

By | 2017-03-25T14:17:20+00:00 October 3rd, 2016|0 Comments

Leave A Comment