நபிகளார் வருகையில் மனம் மகிழ்ந்த மதீனாவாசிகள்

நபிகளார் வருகையில் மனம் மகிழ்ந்த மதீனாவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் நபி முஹம்மது (ஸல்) தங்கவேண்டுமென விரும்பினர். ஆனால் நபிகளாரின் வாகனம் ஒவ்வொரு வீடாகக் கடந்து சென்று இறுதியில் ஓர் இடத்தில் மண்டியிட்டது. நபிகளார் ஒட்டகத்திலிருந்து இறங்கினார்கள். 

அபூ அய்யூப் (ரலி) என்பவர் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாகனத்திலிருந்து அவர்களின் உடைமைகளை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். நபிகளாரும் அபூ அய்யூப்பின் வீட்டிலேயே தங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். மதீனாவை அடைந்ததும் ஒட்டகம் மண்டியிட்ட இடத்தில்தான் நபி (ஸல்) அவர்களின் ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசல் நிறுவப்பட்டது. 

நபிகளார் மதீனாவிற்கு வந்து சேரும் முன் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்துவிட்டவர்களைச் சந்தித்தார்கள். அப்போதுதான் அய்யாஷ், ஹிஷாம் மற்றும் ஹிஜ்ராவின் போது அபூ ஜஹல் பிடியில் சிக்கியவர்களுக்காக அல்லாஹ்விடம் அவர்களின் நலன்வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். அத்தோடு குறைஷிகளில் சிலரைக் குறிப்பிட்டு “இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக” என்றும் பிரார்த்தித்தார்கள். அதற்கு விடையாக அல்லாஹ் ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனும் இறைவன் வசனம் அருளப்பட்டது. 

மதீனாவில், மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்த முஸ்லிம்கள், நபிகளாரையும் இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையும் அறிந்து இஸ்லாமை விரும்பி ஏற்றவர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள், யூதர்களென்று எல்லாம் கலந்த பலதரப்பட்ட நகரமாக விளங்கியது. அவர்களுக்கு, கல்வி அறிவில்லாத நபி முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து இறைத்தூதராக அனுப்பி, மக்களுக்கு ஒழுக்கம், கல்வி, சட்டத்திட்டம், வியாபார அறன், ஈகை பண்பென்று எல்லாவற்றையும் கற்றுத் தந்து நெறிப்படுத்திச் செயல்படுத்த வைத்தான் இறைவன். 

“எழுத்தறிவில்லா அரபு மக்களிடம் அவர்களில் ஒருவராகத் தமது இறைத்தூதரை அனுப்பி, அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, மிகவும் தவறான பாதையில் இருந்தவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார்” என்ற இறை வசனமும் அப்போது அருளப்பட்டது. 

ஸஹீஹ் புகாரி 5:65:4560, திருக்குர்ஆன் 3:128, 62:2 

By | 2017-03-25T14:17:18+00:00 January 22nd, 2017|0 Comments

Leave A Comment