இம்ரான், இப்ராஹிம் (அலை), தாவூத் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்தவர். இம்ரான்- ஹன்னா தம்பதியருக்கு பிறந்த மர்யமை, பைத்துல் முகத்தஸில் தங்கி, சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டுமென்று ஹன்னா நேர்ச்சை செய்திருந்தார்.
ஹன்னா கருவுற்றிருந்தபோதே கணவர் இம்ரான் இறந்து விட்டார். நேர்ச்சை செய்திருந்தபடி தாய் ஹன்னா மகள் மர்யமை தனது சகோதரியின் கணவர் ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஒப்படைத்தார். இறைவனின் விருப்பப்படி ஜக்கரிய்யா (அலை) மர்யமை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
இறைவனிடமிருந்து கனி வகைகளும் உணவும் வரும் அளவுக்கு இறைவனின் அருளைப் பெற்றிருந்தார் மர்யம் (அலை).
ஒருநாள் மர்யம் கிழக்கு பக்கமுள்ள இடத்தில் தம் குடும்பத்தினர் இல்லாது தம்மை மற்றவர்கள் பார்க்காத வண்ணம் ஒரு திரையை அமைத்து தன்னை மறைத்து இருந்தபோது மர்யமிடத்தில் ஜிப்ரீல் (அலை) மனித உருவில் தோன்றினார். ஜிப்ரீல் (அலை) என்பது இறைவனால் அனுப்பப்பட்ட மலக்கு. அவரைக் கண்டதும் மர்யம் (அலை) பயந்தவராக, “நாம் உம்மைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீர் பயபக்தியுடையவராக இருந்தால் என்னை நெருங்காதீர்” என்று எச்சரிக்கைவிடுக்கும் விதமாகக் கூறினார்.
அதற்கு மலக்கான ஜிப்ரீல் (அலை) “மர்யமே! நான் உம்முடைய இறைவனின் தூதன். உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளோம். உங்களுக்கு ஒரு பரிசுத்தமான மகனை அல்லாஹ் உங்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளான், உங்களுக்கு ஒரு மகன் பிறக்கப்போகிறான். உலகத்திலுள்ள பெண்களையெல்லாம்விட நீங்கள் மேன்மையானவராக அல்லாஹ் உங்களையே தேர்ந்தெடுத்துள்ளான்.
உங்களைத் தூய்மையாகவும் ஆக்கியுள்ளான். அந்தக் குழந்தையின் பெயர் மஸீஹ், அதாவது மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கவராகவும் இறைவனுக்கு நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். அவர் ஒரு நபியாக நல்லொழுக்கமுடைய சான்றோர்களில் ஒருவராக இருப்பார். அதுமட்டுமின்றி அவர் குழந்தையாகத் தொட்டிலில் இருக்கும்போதும், பால்யம் தாண்டி முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்” என்று விளக்கினார்.
அதற்கு மர்யம் “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்? என்று கேட்டார்.
அதற்கு ஜிப்ரீல் (அலை), “அல்லாஹ்வுக்கு இது மிகவும் சுலபமானதே. அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகிவிடுகிறது. தாய்- தந்தை இருவருமில்லாமல் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கவில்லையா? அதுபோல் தந்தை இல்லாமல் குழந்தை ஈஸா பிறப்பார்” என்று விளக்கினார்.
மர்யமிற்குத் தேவையான அத்தனையும் மஸ்ஜித்-அல்-அக்ஸாவில் அதாவது பைத்துல் முகத்தஸ் பள்ளியில் கிடைக்கச் செய்தான் இறைவன். மர்யம் எல்லா நேரங்களிலும் இறைவனுக்கு ‘ஸுஜுது’ அதாவது தம் சிரம் தரையில் படும் வகையில் தாழ்த்தி வணங்கிக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தி ருகூஃ செய்து கொண்டும் இருந்தார்கள்.
மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்.
Leave A Comment