இறை நம்பிக்கையாலும் மன உறுதியாலும் வளர்ந்த இஸ்லாம்

வெவ்வேறு காலகட்டத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு அந்தந்தக் காலத்திற்கேற்ப அதிசயங்களையும் அத்தாட்சிகளையும் இறைவன்  தந்தருளினான்.

கவிதைகள் பிரபலமாக இருந்த அரேபிய மண்ணில் திருக்குர்ஆனின் இறைவசனங்களை அத்தாட்சியாக நபி முஹம்மது (ஸல்) மக்களுக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் இறைமறுப்பாளர்களோ, ‘அது கலப்படமான கனவுகள் என்றும், அது அவருடைய சொந்த கற்பனை என்றும், இவர் ஒரு கவிஞர்தாம் என்றும், இதை முஹம்மதுக்கு ஒரு நபர்தான் கற்றுத் தருகிறார். 

இது இறை வசனங்கள் அல்ல என்றும், இட்டுக்கட்டிய கதையே தவிர வேறில்லை என்றும், இது பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் அவதூறு கூறினர். அதோடு குர்ஆனை முஹம்மது நபி (ஸல்) மற்றவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போதெல்லாம் நிராகரிப்பவர்கள் கூச்சல் குழப்பம் உண்டு செய்து கேட்கவிடாமல் தடுத்தனர்.

வெளியூரிலிருந்து மதுவும் மாதுவும் வரவழைத்து மக்களை வழிகெடுத்தனர். பல வகைகளில் முஹம்மது (ஸல்) அவர்களின் முயற்சியை முறியடிக்க நினைத்தும் நிராகரிப்பாளர்களின் சதித் திட்டங்கள் தோற்றன. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது, ஆகையால் நிராகரிப்பாளர்கள் தமது வீட்டில் எவராவது ஒருவர் இஸ்லாமிற்கு மாறினார் என்றால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். தமக்குக் கீழ் வேலை பார்ப்பவர் இஸ்லாமிற்குத் திரும்பியிருந்தால் அவர்களைச் சித்தரவதை செய்தனர். பண பலமுடையவர் இஸ்லாமிற்கு மாறியிருந்தால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்தனர்.

இஸ்லாமைத் தழுவிய யாஸிர் குடும்பத்தினரை அபூஜஹ்ல் கொடுமைப்படுத்தி முதலில் யாஸிரையும், அதன்பின் அவர் மனைவி சுமைய்யா பின்த் கய்யாத் (ரலி) அவர்களையும் கொலை செய்தான். சுமைய்யாதான் இஸ்லாத்திற்காக உயிர்த்தியாகம் செய்த முதல் பெண்மணி. 

அதன்பின் யாஸிரின் மகன் அம்மாரை கொடுமைப்படுத்தினான் அபூ ஜஹ்ல். நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் தூற்றச் சொன்னான், அபூ ஜஹ்ல் வணங்கி வந்த லாத், உஜ்ஜா என்ற சிலைகளைப் புகழச் சொல்லி வற்புறுத்தினான், சொல்லவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக அம்மாரை மிரட்டினான் அபூ ஜஹ்ல். தனது பெற்றோர் தன் கண் முன் சாகடிக்கப்பட்டதைப் பார்த்த அம்மார் மிரட்டலுக்குப் பயந்து அடிபணிந்தார். 

பின்பு நபிகளாரிடம் சென்று மன்னிப்பும் கேட்டார். அதற்கு நபி முஹம்மது (ஸல்) “நம்பிக்கை கொண்ட பின் அல்லாஹ்வை நிராகரித்தால் அல்லாஹ்வின் கோபம் ஏற்படும். ஆனால் உங்களது உள்ளம் நம்பிக்கை கொண்டு, நிர்ப்பந்தத்தினால் வெறும் வார்த்தையில் நிராகரித்தால் குற்றமில்லை” என்ற இறைவசனத்தை ஓதிக் காட்டி விளக்கினார்கள். அதன்பின் அம்மாரின் மனம் சாந்தியடைந்தது.

இஸ்லாத்தினை ஏற்றதால் கொடுமைக்கு உள்ளான அடிமை வேலைப் பணியாட்களை அபூ பக்ர் (ரலி) விலைக்கு வாங்கி விடுவித்தார்கள்.

பலதரப்பட்டவர்கள் பலவிதமான வேதனைக்குள்ளாக்கப்பட்டாலும் அவர்களது இறைநம்பிக்கையும், மன உறுதியும் அதிகரிக்கவே செய்தது.

குர்ஆன் வசனங்கள் 21:5, 16:103, 25:4-5, 41:26, 31:6, 16:106

By | 2017-03-25T14:17:20+00:00 October 25th, 2016|0 Comments

Leave A Comment