தாய்- தந்தை இருவருமில்லாமல் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா (ஏவாள்) (அலை) அவர்களை இறைவன் படைத்தான். தந்தை இல்லாமலே மர்யம் (அலை) அவர்களுக்கு ஈஸா (அலை) அவர்களைப் பிறக்கச் செய்தான். அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகிவிடுகிறது.
அப்படிப் படைக்கப்பட்ட ஈஸா (அலை), தன் தாயைப் பற்றி அவதூறு பேசியவர்களின் வாயை மூட, குழந்தையாக இருக்கும்போதே சாட்சியாகப் பேசினார்கள். தாம் ஓர் இறைத்தூதர் என்று பேசியவுடன் மக்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பலர் அக்குழந்தை பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் அந்நாட்டு மன்னன் ஒரு கனவு கண்டதால் பனீ இஸ்ராயீலர்களின் மதகுருக்களை அழைத்து அந்தக் கனவின் பலனை பற்றிக் கேட்டபோது அல்லது வானத்தில் தோன்றிய ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டு அதனைப் பற்றிய பலனை அவர்கள் பார்த்தபோது ‘நல்வழிகாட்டுவதற்காக ஓர் இறைத்தூதர் பெத்லஹெமில் பிறந்துவிட்டார்’ என்று மதகுருக்கள் சொன்னார்கள். அதைக் கேட்ட அந்நாட்டு மன்னன் ஆத்திரமடைந்து, அக்குழந்தையால் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று அஞ்சி, அக்குழந்தையை உடனே கொல்ல உத்தரவிட்டான்.
மர்யம் (அலை) அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி எகிப்துக்குச் சென்றார்கள். சிறு வயதிலேயே சின்னச் சின்ன அற்புதங்களை ஈஸா (அலை) அவர்கள் செய்வதைப் பார்த்த மக்கள், கவன ஈர்ப்பு பெற்றார்கள். சிலர் அதனை அற்புதமென்று வியந்தனர். சிலர் அதனைச் சூனியமென்று விலகினர்.
இறைவன் மர்யம் (அலை) அவர்களுக்கு வாக்களித்தபடி ஈஸா (அலை) அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் அளித்தான். ‘தவ்ராத்’ வேதத்தைக் கற்று வைத்திருந்த ஈஸா (அலை) அவர்கள், வாலிப வயதை அடைந்தபோது அல்லாஹ் ‘இன்ஜீல்’ என்ற வேதத்தை அளித்து நபியாக்கினான். அதுமட்டுமின்றி ஈஸா (அலை) அவர்களுக்கு ‘ரூஹுல் குதுஸி’ என்னும் பரிசுத்த ஆத்மாவைக் கொடுத்து வலிமையாக்கி இருந்தான்.
தமது சொந்த ஊருக்கே மர்யம் (அலை) அவர்களும் ஈஸா (அலை) அவர்களும் திரும்பினர். மர்யம் (அலை) அவர்களின் மீதான மாபெரும் அவதூறு காலம் சென்ற பிறகும் நிலவி வந்தது. மர்யம் (அலை) அவர்களின் மீது காலம் சென்ற பிறகும் அவதூறு பேசியவர்களும் நிராகரிப்பாளர்களும் சபிக்கப்பட்டவர்களானார்கள்.
திருக்குர்ஆன் 3:59, 19:30-38, 3:47-48, 2:87, 4:156
Leave A Comment