இனிதே மலரும் ஈகைத் திருநாள்

புண்ணியங்களின் பூக்காலமான புனித ரமதான் மாதத்தில் நோன்பு நோற்று, தவறாமல் திருக்குர்ஆன் ஓதி, இரவுகளில் நின்று வணங்கி, இறைவனை அதிகமதிகம் நினைத்துக் கொண்டு, இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான ‘ஸகாத்தையும்’ நிறைவேற்றி, படைத்த இறைவனுக்காகப் பசித்து, தனித்து, விழித்திருந்து புனித ரமதான மாதம் முடிந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான்  ஈகைத் திருநாளாகக் (‘ஈத் அல் ஃபித்ர்’) கொண்டாடுகிறோம். இதையேதான் நோன்புப் பெருநாள் என்றும் அழைக்கிறோம்.

பெருநாளில் குளித்து, புத்தாடை உடுத்தி, பெருநாள் தொழுகைக்கு முன்பே ‘ஸதகத்துல் ஃபித்ர்’ என்ற தானத்தைச் செலுத்திவிட்டுத்தான் பெருநாள் தொழுகைக்கே செல்ல வேண்டும்.

ஈத் அல் பித்ர் அன்று நோன்பு நோற்கக் கூடாது. ரமதானில் எடுத்துக் கொண்ட புலனடக்கப் பயிற்சியை அதன் பின்வரும் நாட்களிலும் பேணுதல் அவசியம்.

நோன்பு நோற்றுப் பழகிய உடலுக்கு நோன்பு அல்லாத பெருநாளை அடையும் போது வெறும் வயிற்றில் தொழுகைக்குச் சென்றால் தொழுகையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்குப் பசிக்க ஆரம்பித்துவிடும். அதனால் தொழுகைக்குச் செல்லும் முன்பு ஏதேனும் சாப்பிட்டுவிட்டுச் செல்வது நல்லது. 

இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் காலையில் தொழுகைக்குச் செல்லும் முன்பு சில பேரீச்சம்பழங்களை உண்ணாமல் புறப்பட மாட்டார்கள். 

“ரமதான் மாதம் நோன்பு நோற்று பெருநாளுக்குப் பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) கூறியுள்ளார்கள். பெருநாள் முடிந்த உடனேயே அந்த ஆறு நோன்பை தொடர வேண்டுமென்ற அவசியமில்லை, ஷவ்வால் மாதத்தில் ஏதேனும் ஆறு நோன்பை நம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ளலாம். இது பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்கானது என்ற தவறான கூற்று நிலவுகிறது. மாறாக இது எல்லாருக்குமானது, கடமையான நோன்பில்லாவிட்டாலும் இந்த உபரியான நோன்பை கடைபிடிப்பது சிறப்பானது.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் பள்ளியில் தொழாமல் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதலில் தொழுகையைத் துவக்கி நிறைவேற்றிவிட்டே மக்களுக்குப் போதனைகள் செய்வார்கள். ஆனால் நபிகளாரின் காலத்திற்குப் பிறகு, தொழுகை நடத்துபவரின் போதனைகளுக்காகக் காத்திராமல், தொழுகை முடிந்ததும் மக்கள் கலைந்து சென்றுவிடுபவர்களாக இருந்ததைக் கண்டதால் நடைமுறையை விளங்கிக் கொண்டு தொழுகைக்கு முன்பே உரையை நிகழ்த்தும் பழக்கத்தை இமாம்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.

ஈகைப் பெருநாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப்போல் நம்முடைய சமுதாய மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட நாம் கடமையான ஸக்காத்தை தர்மத்தை முழுமையாக, சரியாகச் செய்வோம். நாம் செய்யும் சிறிய தர்மத்தால் ஒரு சிலராவது பயன்பெறுவார்கள்.

ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதனை மனதில் நிறுத்திக் கொண்டு பிறருக்கு நன்மைகளைச் செய்து நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் சமாதானம் நிலவ சகல மக்களும் சகோதர பாசத்துடன் வாழ எல்லாம் வல்லோனைப் பிரார்த்திப்போம்.

ஸஹிஹ் முஸ்லிம் 13:2159, ஸஹிஹ் புகாரி 2:30:1995, 13:953, 13:956, 1:2:11

By | 2017-03-25T14:22:31+00:00 July 4th, 2016|0 Comments

Leave A Comment