அல்லாஹ்வையும், அவன் அருளிய வேதத்தையும், அவனுடைய தூதராகிய இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை) அவர்களின் சந்ததியர் மீது அருள்புரிந்தவற்றையும், அவர்களுக்குப் பின் தோன்றிய மற்ற நபிமார்களையும் அவர்கள் மூலமாக இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையெல்லாம் நம்பிக்கை கொள்வதும், அவர்களில் எவரையும் பிரித்து வேற்றுமை பார்க்காமல் நம்பிக்கை கொள்பவர்களே சிறந்த முஸ்லிம் என்கிறது திருக்குர்ஆன்.
யாகூப் (அலை) அவர்கள் ஹனான் பகுதியில் மக்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் வணங்கக் கூடாது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும், தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பதோடு ஜகாத் என்கிற கடமையான தர்மத்தையும் சரியாகச் செய்யவேண்டுமென்று போதித்து வந்தார்கள். தன் மாமாவின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் ஆடுகளையும் மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். யாகூப் (அலை) அவர்களின் முதல் மனைவி லியாவுக்கு வரிசையாகத் தொடர்ந்து ஆண் குழந்தைகளாகப் பிறக்கிறது. தனக்குக் குழந்தையே இல்லை என்று வருத்தத்திலிருந்த தனது அன்பு மனைவி ராஹிலுக்காகப் பிள்ளை செல்வம் வேண்டி யாகூப் (அலை) அவர்களும் ராஹிலும் இறைவனிடம் உருக்கமாகப் பிரார்த்திக்கிறார்கள். இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு நன்கொடையாக உலகில் உள்ள மொத்த அழகில் பாதி அழகைத் தந்தது போல் மிகவும் அழகான ஆண் குழந்தையைத் தந்தான். அந்தக் குழந்தைக்கு யூசுஃப் என்று பெயர் வைக்கப்பட்டது.
இப்படியாக யாகூப் (அலை) அவர்கள் ஆடு மெய்த்துக் கொண்டு இருபது வருடங்கள் ஹரன் நிலப்பரப்பில் குடும்பத்துடன் இருந்தார்கள். யாகூப் (அலை) அவர்கள் தனது குடும்பத்தினரைப் பார்க்க செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொண்ட லபான் “நீங்கள் எனக்குப் பல வருடங்களாக உழைத்து எனது செல்வத்தைப் பெருக்கிவிட்டீர்கள், உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்” என்றார். யாகூப் (அலை) அவர்கள் குறிப்பிட்ட சிறந்த வகை ஆடுகளைக் கேட்கிறார்கள். இறையச்சம் இல்லாத லபான் அதை யாகூப் (அலை) அவர்களுக்குக் கிடைக்கப் பெறாமல் செய்யத் திட்டம் தீட்டியும், அது முறியடிக்கப்படுகிறது. யாகூப் (அலை) மாமாவிடம் சொல்லாமலே செல்ல எத்தனிக்கும் போது லபான் மனம் மாறி அவர்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும், மாடுகளையும், கழுதைகளையும், அடிமைப் பெண்களையும் தந்து வழியனுப்பி வைக்கிறார்.
யாகூப் (அலை) தனது பதினோரு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு மனைவிகள், இரண்டு அடிமைப் பெண்கள், வேலையாட்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் என்று மிகவும் செழிப்பாக அங்கிருந்து வெளியேறி தமது சொந்த ஊருக்குச் செல்லும் முன்பு, இறைவன் அவருக்கு அருளிய அந்த இடத்தில் வைத்த கல் அடையாளத்தைப் பார்த்து அங்கு இறை வணக்கம் செலுத்த ஒரு பள்ளி வாசலை எழுப்புகிறார்கள். அதுதான் பிற்காலத்தில் ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளியானது.
தமது சகோதரன் ஈசுவுக்குத் தம் மீது கோபம் தணிந்துவிட்டதா என்று பார்க்க ஆள் அனுப்புகிறார்கள். சகோதரன் ஈசு இன்னும் யாகூப்(அலை) அவர்கள் மீது கோபமாகவே உள்ளார், அங்கு சென்றால் கொலை செய்துவிடுவார் என்று அஞ்சி, இறைவனிடம் தனக்கு எல்லாக் காரியங்களையும் லேசாக்கி தரும்படியும், தன் சகோதரனின் கோபம் தணியும்படியும் பிரார்த்திக்கிறார்கள். பிறகு ஒருவரிடம் பல ஆடுகளையும், மாடுகளையும், கழுதைகளையும், பரிசுப் பொருட்களையும் தன் சகோதரனுக்கு அனுப்பி வைக்கிறார்கள். “என் சகோதரர் ஈசு உம்மை யார் என்று கேட்டால் ‘நான் உங்கள் அடிமை என்று சொல். இதையெல்லாம் யார் கொடுத்தனுப்பியது என்று கேட்டால் ‘உங்களுடைய மற்றொரு அடிமை யாகூப்’ என்று சொல்” என்றார்கள். அதன்படியே நடந்தது. ஈசு தன் தம்பி யாகூப்பை மன்னித்துவிட்டார். யாகூப் தம் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குத் திரும்பி தன் சகோதரர் ஈசுவிடம் ஏழு முறை முழுமனதாக மன்னிப்பு கேட்கிறார்கள். ஈசுவும் மன்னித்துத் தம்பியை கட்டித் தழுவிக் கொள்கிறார்கள்.

Leave A Comment