தொழுகைக்கு விரைந்து வாருங்கள்!!

நமக்குப் பிடித்தவர் நம் அன்பிற்குரியவர் நம்மை அழைத்தால் உடனே பதில் தருவோமா இல்லையா? செல்பேசியில் தெரிந்தவர்கள் அழைத்தாலோ தெரியாதவர் அழைத்தாலோ உடனே எடுத்து பேசுகிறோமா இல்லையா? ஆனால் நம்மை நேசிக்கும் இறைவனை, நம்மைப் படைத்தவனை வழிபடுவதற்காக அழைக்கப்படும் ‘பாங்கு’ ஒலிக்கு நாம் ஏன் உடனே செவி சாய்ப்பதில்லை?

எவ்வளவுதான் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் நமது மேலதிகாரி அவசரமாக அழைத்தால், உடனே சென்று உடன் முடிக்க வேண்டிய வேலையை மட்டுமாவது முடித்துவிட்டு திரும்புவோம் இல்லையா? ஆனால் கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துவிட்டாலும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு நமக்கு வாழ்வு தந்தவனை வழிபட “தொழுகைக்கு விரைந்து வாருங்கள்” என்று அழைப்பு கேட்கும் போது தொழுகையைத் தள்ளிப் போடுகிறோமே ஏன்?

தொழுகைக்கான நேரங்களில் மக்களைத் தொழுகைக்காக அழைப்பதை அரபி மொழியில் ‘அதான்’ என்றும் தமிழில் அதனைப் ‘பாங்கு’ என்றும் சொல்கிறோம். தொழுகைக்கான அழைப்பை விடுப்பவர், ‘கிப்லா’வை அதாவது மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி நின்றபடி தனது இரு கரங்களையும் தம் செவிகள் வரை உயர்த்தி உரத்தக் குரலில் ‘பாங்கு’ சொல்லுவார். அதனை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். இது பதிவு செய்யப்பட்ட குரல் இல்லை. நவீனமயமான இந்தக் காலகட்டத்தில் பாங்கு என்ற அழைப்பை பதிவு செய்து ஒலிக்கச்செய்யலாம், ஆனால் அப்படிச் செய்வதில்லை. காரணம் நல்லறங்களை நேரடியாகச் செய்தால்தான் நன்மைகளை அடைய முடியும் என்று நபிகளார் பெருமானார் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “ஆட்டையும், பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, பாலைவனத்திலோ இருக்கும் போது தொழுகை நேரம் வந்துவிட்டால் நீங்கள் தொழுகைக்காக பாங்கு சொல்லி அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருட்களும் அதைக்கேட்டுத் தொழுகை அழைப்புக் கொடுத்தவருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன என்றும் இதைத் தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்” என்றும் அபூ ஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்களிடம் கூறியதாக, ஸஹிஹ் புகாரி 819 இல் வந்துள்ளது.

பாங்கின் சத்தத்தைக் கேட்டிருக்கும் நாம் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம்:

அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்  — ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்று ஆரம்பித்து,
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் — ‘இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்’ என்றும்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – ‘முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்’ என்று சொல்லிய பிறகு
ஹய்ய அலஸ் ஸலாஹ் – ‘தொழுகைக்கு விரைந்து வாருங்கள்’
ஹய்ய அலல் ஃபலாஹ் – ‘வெற்றிக்கு வாருங்கள்’
அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லா இலாஹ இல்லல்லாஹு — என்று இறுதியில் மீண்டும் சொல்லி முடிப்பார்கள்.

ஐந்து வேளை தொழுகைக்கும் இப்படியான அழைப்பு விடுக்கப்படும். காலை தொழுகையான ஃபஜ்ர் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும்போது “ஹய்ய அலல் ஃபலாஹ்” என்பதைச் சொல்லிய பிறகு “அஸ்ஸலாத்து கைருன் மினன் நவ்ம்” அதாவது “தூக்கத்தை விடத் தொழுகையே சிறந்தது” என்றும் சேர்த்தே சொல்லி தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படும்.

இதனைப் புரிந்து உடனே அழைப்புக்குச் செவி சாய்த்து கீழ்ப்படிந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிதான்.

“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்கக் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3:31)

By | 2017-03-25T14:22:31+00:00 April 7th, 2016|0 Comments

Leave A Comment