பல்கீஸ் அரசியின் பிரமுகர்கள் சுலைமான் (அலை) அவர்கள் மறுத்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஸபாவிற்குத் திரும்பிச் சென்றார்கள். ஸபாவின் அரசி பல்கீஸ் தனது அரண்மனையில் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். திரும்பி வந்த தமது பிரமுகர்களைக் கண்டு “என்ன நடந்தது?” என்று விசாரித்தார். அவர்கள் அங்கு பார்த்ததையும் கேட்டதையும் விவரிக்கும்படி கேட்டார் அரசி.
வார்த்தை மாறாமல் சுலைமான் (அலை) அவர்கள் சொன்னதை அப்படியே விவரித்தார்கள் பிரமுகர்கள். “ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கோருகிறார். நாம் இந்நாள் வரை நம்பிக்கொண்டிருந்த தெய்வங்களைக் கைவிடச் சொல்கிறார்” என்ற விபரத்தையும் சொன்னார்கள்.
விபரங்களைக் கேட்டறிந்த அரசி பல்கீஸ், பிரமுகர்களிடம் “இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சி மிகவும் சக்தி வாய்ந்ததென்று புரிந்து கொள்கிறேன். உங்களுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டார்.
“நீங்கள் சொல்வது சரிதான் அரசி. அவர்களை எதிர்க்கும் பலம் நமக்கில்லை என்றே தோன்றுகிறது” என்று பிரமுகர்களும் ஆமோதித்த பிறகு, மிகுந்த யோசனைக்குப் பின், தான் உடனே அரசர் சுலைமானைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டவர், தம் வருகையைக் குறித்துச் சுலைமான் (அலை) அவர்களுக்குச் செய்தியை அனுப்பி வைத்தார்.
வைரத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட தமது விலையுயர்ந்த அரியணையை ஓர் அறையிலிட்டுப் பூட்டி காவலாளிகளைப் பாதுகாப்பிற்கு வைத்துவிட்டு தமது சேனைகளுடன் புறப்பட்டார் அரசி பல்கீஸ். பல நாள் பிரயாணத்திற்குப் பிறகு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
திருக்குர்ஆன் 27:35-37
Leave A Comment