பறவைகள், மிருகங்கள், பூச்சிகள் என்று எல்லா உயிரினங்களின் மொழியறிந்திருந்த சுலைமான் (அலை), ஜின்களை வசப்படுத்தியிருந்ததால் ஜின்களும் அவர்களுக்குப் பணி செய்யக் காத்து நின்றன. எக்காலத்திலும் எவருமே அடைய முடியாத ஒரு பெரிய அரசாங்கத்தையே ஆட்சி செய்து வந்தார்கள் சுலைமான் (அலை).
ஒருநாள் சுலைமான் (அலை) தனது படை பரிவாரங்களுடன் புறப்பட்டபோது, வெயிலுக்கு நிழலாக ஆயிரக்கணக்கானப் பறவைகள் தமது சிறகுகளை விரித்து நிழலாடச் செய்து, படைக்கு நிழல் தந்தன. ஓர் இடத்திற்கு வந்தபோது அங்கு எறும்புகள் தமது புற்றிற்கு உணவு சுமந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளின் தலைவி, சுலைமான் (அலை) அவர்களின் படை நெருங்குவதைக் கண்டவுடன், “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் சீக்கிரம் சென்று நுழைந்து கொள்ளுங்கள். சுலைமான் (அலை) அவர்களும் அவருடைய சேனைகளும் நம்மை நெருங்கி வருகிறார்கள். அவர்கள் தெரியாமல், நம்மைக் கவனிக்காமல் நம்மை நசுக்கிவிடக் கூடும்” என்று கூறி தம் கூட்டத்தாரை எச்சரிக்கை செய்தது
இதைக் கேட்ட சுலைமான் (அலை) புன்னகை செய்தார்கள். தமது சேனைகளைத் தாமதப்படுத்தச் சொன்னார்கள். எறும்புகள் கடக்கும் வரை காத்து நின்றார்கள். “என் இறைவா! எனக்கும், எனது பெற்றோருக்கும் நீ அளித்துள்ள அருட்கொடைகளுக்காக, நான் உனக்குச் சரியான வகையில் நன்றி செலுத்தச் செய்வாயாக. உனக்குப் பிடிக்கும் வகையில் நான் நன்மைகளைச் செய்யவும் எனக்கு அருள்வாயாக!! இறைவா! உன்னுடைய அருளைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களோடு சேர்த்தருள்வாயாக” என்று பிரார்த்தித்தார்கள்
அல்லாஹ் நன்றியுடையோருக்கு நற்கூலியை வழங்குபவன். அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
திருக்குர் ஆன் 27:18-19, 2:243
Leave A Comment