இறைநம்பிக்கையாளர்களையும், தமக்கு முழுமையாகக் கட்டுப்படுபவர்களையும் இனம் கண்டுகொண்ட தாலூத் இறை நம்பிக்கையாளர்களுடன் ஆற்றைக் கடந்தார்கள்.
படைகளை நோக்கி முன்னேறும்போது “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக. எங்களை உறுதியாக்குவாயாக. இக்கொடிய மக்களை எதிர்கொள்ளும் சக்தியை எங்களுக்குத் தந்தருள்வாயாக. எங்களுக்கு வெற்றியை நல்கி உதவி புரிவாயாக” எனக் கூறி தாலூத் பிரார்த்தித்தார்.
மோதல் ஆரம்பமானது. படையோடு படையாகப் போரிடாமல் வலுவானவர் முன் வந்து எதிரிப் படையில் இருக்கும் வலுவானவரோடு போராட வேண்டும் என்று முடிவானது. இப்படியே மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஜாலூத் படைகளுக்கு முன்னால் தோன்றி “என்னை எதிர்கொள்ளும் வலிமையும் துணிவும் உங்களில் யாருக்கு உள்ளது” என்று ஆணவத்துடன் கேட்டான்.
அவன் உருவத்தைக் கண்டவுடன் எல்லோருமே பின்வாங்கினார்கள். ஆனால் மிகச் சிறிய உருவமான தாவூத் (அலை) அரசர் தாலூத்திடம் அனுமதி பெற்று முன்வந்தார்கள் “நான் இருக்கிறேன் உன்னை வீழ்த்த” என்று நம்பிக்கையுடன் முழங்கினார்கள்.
தாவூத் (அலை) அவர்களைக் கண்ட ஜாலூத் உரக்கச்சிரித்தான் “நீ என்னை வீழ்த்துவதா? போய் உன் வீட்டின் பெரியவர்களை வரச்சொல்” என்றான். தாவூத் (அலை) மனம் தளராமல் “உனக்கு என்னைக் கண்டு பயமா?” என்று கேட்டார்கள்.
கோபம் தலைக்கேறிய ஜாலூத் காளையைப் போல் சீறிப் பாய்ந்து வந்தான்.
பழங்களையும் சிறு விலங்குகளையும் அடித்து உண்ணப் பயன்படுத்தும் உண்டிகோலை சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்த தாவூத் (அலை), ஜாலூத்தின் நெற்றிப்பொட்டை சரியாகக் குறி பார்த்து ஓங்கி அடித்தார்கள். அதைச் சிறிதும் எதிர்பாராத ஜாலூத்தின் தலையில் கல் மோதி அவன் உயிரற்றுக் கீழே சாய்ந்தான். இதைக் கண்ட அவனது படையினர் பயந்து ஓடலானார்கள். இஸ்ராயீலர்கள் அந்தப் படையை மிகச் சுலபமாக வென்றுவிட்டார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வின் அருளைக் கொண்டு ஜாலூத்தின் படையை இஸ்ராயீலர்கள் முறியடித்தார்கள். தாலூத் தந்திருந்த வாக்கின்படி தனது அரசுரிமைகளில் பாதியை தாவூத் (அலை) அவர்களுக்குத் தந்துவிட்டார்கள். அல்லாஹ் தான் நாடியவருக்கு அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்து தான் விரும்பியவற்றையெல்லாம் கற்றுத் தருகிறான்.
மக்களில் நன்மை செய்ய விரும்பும் ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, தீமை செய்யும் மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால் உலகம் சீர்கெட்டிருக்கும். அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான் ஆனால் அதனைப் பெரும்பாலானோர் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:250-251
Leave A Comment