இஸ்ராயீலர்களுக்காக இறைத்தூதர் அஸ்மவீல் பிரார்த்தித்தவுடன் இறைவன் தாலூத் என்பவரை அவர்களுக்கு அரசனாக்கக் கட்டளையிட்டான்.
இந்த சுப செய்தியை உடனே இறைத்தூதர் மக்களிடம் தெரிவிக்க, மக்களுக்கோ அதில் திருப்தியில்லை. “தாலூத் ஒரு சாதாரணமானவர், வறுமையான நிலையில் உள்ளவர் அவர் எங்கள் மீது எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அவரைவிட நாங்கள் தகுதியுடையவர்கள்” என்று இஸ்ராயீலர்கள் கூறினார்கள்.அதற்கு இறைத்தூதர் “அல்லாஹ் அவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களைவிட மேலானவராகவும் உடல்வலிமை மிக்கவராகவும் இருக்கும் அவரை நியமித்துள்ளான். எல்லாம் அறிந்தவன் இறைவன் அதனால் அவன் தேர்ந்தெடுத்தவர் மீது உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
உடனே ஒருவர் “இறைவன் தாலூத்தைதான் தேர்ந்தெடுத்துள்ளான் என்று எப்படி நாங்கள் அறிந்து கொள்வது?” என்று கேட்டார்.
அதற்கு இறைத்தூதர் “உங்களுக்கு ஒரு தெளிவான அத்தாட்சி வந்து சேரும். உங்களிடம் ஒரு பேழை வரும் அதில் உங்களுக்கு உங்கள் இறைவன் மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவற்றை, அல்லாஹ் உங்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவே வானவர்கள் மூலம் அனுப்பி வைப்பான்” என்றார்கள்.
இறைத்தூதர் சொன்னது போலவே அவர்களிடம் ஒரு பேழை வந்து சேர்ந்தது. அதில் அவர்கள் சொன்னது போலவே இருந்தது. அதன் பிறகு அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. அவர்கள் தாலூத்தை தலைவராக மனதார ஏற்றுக் கொண்டார்கள்.
திருக்குர்ஆன் 2:247-248
Leave A Comment