ஃபிர்அவ்னின் கோபமும் ஓரிறைக் கொள்கையும்

மூஸா (அலை) தம் மனைவியை அழைத்துக் கொண்டு எகிப்திற்குப் பல நாள் பயணத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தார்கள். தன்னுடைய வீட்டைக் கண்டுபிடித்து வந்தடைந்து, தன் சகோதரன் ஹாரூனிடம் இறைவனின் கட்டளையைப் பற்றிச் சொன்னார்கள். 

இறைத்தூதர் இருவரும் தம் தாயிடம் விடைபெற்று ஃபிர்அவ்னின் அவைக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் அனுமதி பெற்றுப் பேசினார்கள். இறைவனின் கட்டளையின்படி ஓரிறைக் கொள்கையைப் பற்றி எடுத்துரைத்தார்கள். “நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடுங்கள்” என்று கம்பீரமாகத் தங்கு தடையில்லாமல் சரளமாகப் பேசியவர்களை ஃபிர்அவ்ன் ஆணவத்துடன் ஏளனமாகப் பார்த்தான். 

“என்ன இறைத்தூதரா? நீங்கள் மூஸாதானே? எங்கள் வீட்டில் வளர்ந்த பிள்ளைதானே? ஒரு கொலை செய்துவிட்டு இங்கிருந்து ஓடியவர்தானே? இன்று நன்றி கெட்டவராக வந்து நிற்கிறாயே!?”  என்று கேவலப்படுத்தும் நோக்கில் ஃபிர்அவ்ன் கேட்டான்.

“ஆமாம், கொலை செய்தேன். அது அறியாமையில் நிகழ்ந்தது. நான் நேர்வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன். உங்களுக்கு அஞ்சி ஓடிவிட்டேன். என் இறைவன் என்னை மன்னித்துவிட்டான். எனக்கு ஞானத்தை வழங்கித் தூதர்களில் ஒருவராக என்னை நியமித்துள்ளான். இஸ்ராயீலர்களை நீங்கள் அடிமைப்படுத்த நியாயம் கற்பித்து எனக்குச் செய்தவற்றை நீங்கள் சொல்லிக் காட்டுகிறீர்கள்” என்று வாதாடினார்கள் மூஸா (அலை). 

தம் முன்பு நின்று பேச அஞ்சுபவர்களுக்கு மத்தியில் துணிச்சலாகப் பேசும் மூஸாவைக் கண்டு ஃபிர்அவ்னுக்குக் கோபம் பொங்கி “யார் உன் இறைவன்?” என்று கேட்டான். 

“அண்டசராசரங்களையும் படைத்துப் பாதுகாத்து வரும் அந்த சர்வலோக இரட்சகன்தான் நம் எல்லோருக்கும் இறைவன். அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன். அவன் ஒருவனே. வழிபாட்டிற்குரியவன் அவனைத் தவிர வேறில்லை. எங்களுடைய நல்லுபதேசங்களை நீங்கள் செவிமடுக்காமல் போனால் நீங்களே நஷ்டமடைவீர்கள்” என்று உறுதியாகச் சொன்னார்கள் மூஸா (அலை).

தன்னைச் சுற்றியிருந்தோர்களிடம் ஃபிர்அவ்ன் “இதை நீங்கள் கேட்டீர்களா? நம்மிடம் அனுப்பப்பட்டுள்ள இந்தத் தூதர் பைத்தியக்காரர்தான்” என்று நகைத்தான். தொடர்ந்து கோபமான குரலில் “என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தாலும் உம்மைச் சிறைப்படுத்துவேன்” என்று மிரட்டினான். 

“தெளிவான அத்தாட்சியை நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா?” என்று கூறியபடி, தமது கைத்தடியை எறிந்தார்கள் அது பெரிய பாம்பாக மாறி எல்லாரையும் பயமுறுத்தியது. தமது கையை வெளிப்படுத்தினார் மூஸா (அலை), அது பார்ப்போருக்கு வெண்மையாகவும் பிரகாசமாகவும் தோன்றியது.

உடனே அவையில் இருந்த ஃபிர்அவ்னின் ஆட்கள் “இவர் திறமையான சூனியக்காரர்தான்” என்று சொல்ல, அதற்கு ஃபிர்அவ்ன்  “தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று இஸ்ராயீலர்களையே திசை திருப்பினான்.

இரு சகோதரர்களுக்கும் கொஞ்சம் அவகாசம் அளிப்போம். பல நகரங்களில் இருந்து திறமையான சூனியக்காரர்களையெல்லாம் திரட்டி இவர்களுக்குள் போட்டி வைப்போம். அப்போது உண்மை தெரிந்துவிடும் என்று முடிவானது.

திருக்குர்ஆன் 26:16-37, 7:104-107

By | 2017-05-07T06:50:33+00:00 June 2nd, 2016|0 Comments

Leave A Comment