யூசுப் (அலை) அவர்களது 30-ஆவது வயதிலேயே எகிப்து சாம்ராஜ்யத்தின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக, களஞ்சியத்தின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார்கள்.
இறைவனின் நாட்டப்படியே அவர்கள் கனானிலிருந்து வழி தவறி எகிப்து சென்று, அங்கு அமைச்சராகி விட்டிருந்தார். சில சமயங்களில் வாழ்வின் துயரங்களும் நன்மைக்கு வழிவகுத்துத் தந்துவிடுகிறது.
அறியாத வயதில் யூசுப் (அலை) பாழ்கிணற்றில் இருந்த போதும், சூரியகீற்று கூட அடைய முடியாத இருட்டுச் சிறையில் கிடந்தபோதும் அவர் அரசவையில் உயர் பதவியேற்பார் என்ற எண்ணம் இல்லாமல், இறைவன் மீது பொறுப்பைச் சுமத்தி, நம்பிக்கையோடு காத்திருந்த யூசுப் (அலை) அவர்களுக்கு இறைவன் நல்வழி காட்டி வெற்றியைப் பரிசளித்தான்.
திருக்குர்ஆனில் ‘நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது’ என்று இருமுறை வரும் இந்தச் சொற்றொடர், யூசுப் (அலை) அவர்களின் அழகிய வரலாற்றிற்கு மிகச் சரியாகப் பொருந்தும். அவர்களின் வரலாற்றின் மூலம் நம்பிக்கையாளர்களுக்குப் பலவித நினைவூட்டல்கள் அடங்கியுள்ளன.
யூசுப் (அலை) சொன்ன கனவின் விளக்கத்தின்படியே முதல் ஏழு ஆண்டுகள் நாடு மிகச் செழிப்பாகவும் வளமாகவும் இருந்தது. விளைச்சலை சரியாகச் சிறப்பாகச் சேமித்துப் பஞ்சத்தின் நாட்களில் பயன்படுத்தத் தொடங்கியிருந்தார்கள். எகிப்தில் மட்டுமல்ல சுற்றுவட்டார ஊர்களிலும் பஞ்சம் நிலவியது. ஒட்டகங்களில் வியாபாரிகள் எகிப்திற்குச் சென்று பண்டமாற்று முறையில் உணவுப் பொருட்கள் வாங்கி வந்தார்கள்.
இச்செய்தியை அறிந்த யாகூப் (அலை) தன் மகன்களையும் எகிப்துக்குச் சென்று உணவு வாங்கிவரச் சொன்னார்கள்.
பத்து மகன்களும் – யூசுப் (அலை) அவர்களின் உடன்பிறந்த சகோதரன் புன்யாமீனைத் தவிர – அங்கிருந்து ஒட்டங்களைப் பூட்டிக் கொண்டு எகிப்துக்கு விரைந்தார்கள். நெடும் பயணத்தினால் சோர்வடைந்தவர்களாக எகிப்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வாடிய முகத்துடன் தானியங்களுக்காக நிதி அமைச்சரைத் தேடினார்கள். தம் சகோதரர்களை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாலும், அவர்களைப் பார்த்த உடனேயே தம் சகோதரர்கள் என்று இனம் கண்டு கொண்டார்கள். ஆனால் யூசுப் (அலை) அவர்கள் மீதான பொறாமையில் பாழ்கிணற்றில் தள்ளிவிட்டவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை எகிப்து சாம்ராஜ்யத்தின் களஞ்சியத்தின் அதிபதியாக யூசுப் (அலை) உயர்ந்திருப்பார்கள் என்று.
பழிவாங்கும் உணர்வில்லாமல் தன் சகோதரர்களுக்கு வாரிவழங்கினார்கள் யூசுப் (அலை).
திருக்குர்ஆன் 94:5-6, 12:58
Leave A Comment