இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களிடம் “கண்ணியத்திற்குரியவர் யார்? ” என்று கேட்கப்பட்ட போது, அவர்கள் “மனிதர்களிலேயே அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தாம்” என்றார்கள். “அப்படியானவர் யார்?” என்று வினவப்பட்ட போது, நபிகள் நாயகம் (ஸல்), “இறையச்சம் நிறைந்தவருடைய மகனுடைய இறையச்சம் நிறைந்தவருடைய மகனுடைய இறையச்சம் நிறைந்தவருடைய மகன் யூசுப்” என்றார்கள். யூசுப் நபிகளைத் தவிர வேற எந்த ஒரு நபிக்கும் நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து நபித்துவத்தை இறைவன் கொடுத்ததில்லை.
கண்ணியத்திற்குரிய யூசுப் (அலை) வசீகரிக்கக்கூடிய அழகுடன் தம் வாலிபப் பருவத்தை அடைந்தார். எகிப்து நாட்டு அமைச்சர் வீட்டில் அவரை ஒரு விருந்தினர் போலவே நடத்தினார்கள். அந்தச் சூழலில் அவர் இறைவனின் அருளினால் போதிய ஞானத்தையும், கல்வியையும் பெற்றார். அந்நாட்டில் பேசும் மொழியையும் கற்றார். உண்மையாளராகவும் நேர்மையானவராகவும் திகழ்ந்ததால் மக்கள் அவருடைய ஆலோசனைகளுக்கு மதிப்பளித்தனர்.
வசீகரிக்கும் யூசுப் (அலை) மீது, அழகும் அதிகாரமும் நிறைந்த அமைச்சரின் மனைவி ஸுலேக்கா விருப்பங்கொண்டார். நெருங்கிப் பழக நினைக்கும் ஸுலேக்காவிடமிருந்து விலகி நடந்து கொண்டார் யூசுப் (அலை). வாய்ப்புக்கு எதிர்பார்த்துக் கார்த்திருந்த அமைச்சரின் மனைவி, அமைச்சர் இல்லாத நேரம் பார்த்து யூசுப் (அலை) அவர்களைத் தம் அறைக்கு அழைத்து, கதவுகளைத் தாழிட்டு, காதல் வார்த்தையில் மயக்கப் பார்த்தார். அவள் அவரைத் திடமாக விரும்புவதை வெளிப்படுத்தினார்.
யாருமில்லாத தருணம், அழகு நிறைந்த பெண் தன் ஆசையை வெளிப்படுத்துகிறார், இருப்பினும் அவருடைய மனசாட்சி அது தவறான செயல் என்று அவரை எச்சரிக்கிறது. யூசுப் (அலை) இறையச்சமில்லாதவராக இருந்திருந்தால் அந்நொடியில் இணங்கி இருந்திருக்கக் கூடும். ஆனால் அவள் கண்களிலிருந்து தம் பார்வையைத் திருப்பிக் கொண்டு, “அல்லாஹ்! இத்தீய செயலிலிருந்து என்னைக் காத்தருள்வானாக” என்று சொல்லி அவளை மறுத்தவராக “உன் கணவர் என் முதலாளி. என்னை இந்த இடத்தில் கண்ணியமாக வைத்திருக்கிறார். நான் ஒருபோதும் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்” என்று கதவை திறக்கச் சென்ற போது, ஸுலேக்கா அவரைப் பின் தொடர்ந்து, யூசுப் (அலை) அவர்களைத் தடுக்க முற்பட்டு அவர்களைப் பிடிக்கும் போது யூசுப்பின் சட்டை கிழிந்துவிடுகிறது.
அதனைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து வெளியேற, தாழிட்ட கதவைத் திறக்கும்போது அங்கு அமைச்சர் நின்றிருக்கிறார்.
எதிர்பாராவிதமாக, தன் கணவரைப் பார்த்தவுடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள “உங்கள் மனைவியிடம் தவறாக நடக்க இருந்த இவரைச் சிறைப்படுத்துங்கள், கடுமையாகத் தண்டியுங்கள்” என்று ஒரு நொடிக்கு முன்பு இனிமையான காதல் வார்த்தை பேசிக் கொண்டிருந்த ஸுலேக்கா அப்படியே மாற்றிப் பேசி விஷத்தைக் கக்கினாள்.
யூசுப் (அலை) அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்கள். அவள்தான் தம்மை மானக்கேடான செயலில் ஈடுபட வற்புறுத்தியதைக் கூறினார்கள். இதற்கிடையில் பேச்சுச் சத்தம் கேட்டு அந்த இடத்தில் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கூடிவிட்டனர். அதில் ஒருவர் “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறார், ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருக்கிறது, ஆகவே இவள்தான் பொய் சொல்கிறாள்” என்று பயப்படாமல் உண்மையை உரைத்தார்.
அமைச்சரும் யூசுப் (அலை) அவர்களின் சட்டை பின்புறமாகக் கிழிந்திருப்பதைக் கண்டார்கள். தம் மனைவிதான் தவறிழைத்துவிட்டார் என்பது அவருக்கு விளங்கியது. அவர் தம் மனைவியை யூசுப்பிடம் மன்னிப்பு கேட்கும்படி சொன்னார்கள். தம் மனைவியிடம் “நீ தவறு செய்துவிட்டாய், உன் பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்” என்றார் அமைச்சர் மிகப் பொறுமையாக.
இறைவன் நம் மனதில் இருக்கிறான். எப்போதும் எது சரி, எது தவறு என்று நம் உள்மனது நமக்குச் சொல்லவே செய்கிறது. அதனை அறிந்து அலட்சியப்படுத்தாமல் நல்வழியைத் தேர்ந்தெடுத்தால் இறைவன் நம்மைக் காத்தருள்வான். யூசுப் (அலை) தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்ததாலேயே யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றை அழகானது என்று இறைவனே வர்ணிக்கிறான்.
ஸஹீஹ் புகாரி 4:60:3374, திருக்குர்ஆன்: 12:22-29
Leave A Comment