பொறுத்தார் மட்டுமே பூமி ஆள்வார்

திருக்குர்ஆனில் அல்லாஹ்வே `அழகிய வரலாறு` என்று குறிப்பிட்டிருப்பது நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றைத்தான். இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வரலாற்றின் மூலம் பல சான்றுகள் புலப்படும் என்றும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது.

நபிகள் நாயகம் முகமது (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில், இறைவன் உலகத்தின் மொத்த அழகை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை யூசுப் (அலை) அவர்களுக்குத் தந்து மற்றொரு பாதியை வைத்துத்தான் நாம் உலகில் அழகு என்று சொல்லும் அனைத்து விஷயங்களுக்கும் தந்திருக்கிறான் என்பதாகவும்,  அவ்வளவு வசீகரிக்கும் அழகுடையவர்களாக யூசுப் (அலை) திகழ்ந்தார்கள் என்றும் வர்ணித்திருக்கிறார்கள்.

அழகான சகோதரன், தன் தந்தையின் நெருக்கமான பாசத்துக்குரியவன் என்பதால், தம்பியின் மீதே பொறாமை கொண்டு , தம் தந்தையை ஏமாற்றி,  தம்பி யூசுப்பை தம்மோடு ஊருக்கு வெளியே உள்ள ஒரு காட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள் யூசுப்பின் மற்ற பத்து சகோதரர்கள்.

கள்ளம் கபடமில்லாத யூசுப் (அலை) அவர்களும் சகோதரர்களின் திட்டங்கள் குறித்து எதுவும் தெரியாமல் அவர்களுடன் சென்று விடுகிறார். ஒரு பாழ்கிணற்றுக்கு அருகில் வந்ததும், சகோதரர்கள் எல்லாம் சேர்ந்து யூசுப் (அலை) அவர்களை அவருடைய சட்டையைக் கழற்றி எடுத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக கிணற்றில் தூக்கி எறிகிறார்கள். உள்ளே விழுந்துவிட்டாரா என்பதை உறுதி செய்து கொள்ள எட்டிப் பார்க்கிறார்கள்.

கிணற்றின் உள்ளே விழுந்த யூசுப் (அலை) சில கீறல்களுடன் எழுந்து, குரல் கொடுக்கிறார். வறண்ட கிணறு, ஏறி வர படிகள் இல்லாத கிணறு, இருட்டாக இருக்கிறது. உதவிக்காக தம்பி குரல் கொடுத்தாலும் அதை பொருட்படுத்தாமல், எதையோ சாதித்துவிட்ட மிதப்பில் சிரித்தபடி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள் யூசுப்பின் சகோதரர்கள்.

யூசுப் (அலை) அவர்கள் தனியாக இருந்த போதும் பயந்துவிடவில்லை. தன் சகோதரர்கள் தம்மை ஏமாற்றி அங்குத் தள்ளிவிட்டு சென்றதற்காக அவர்களை மனதிலும் கடிந்து கொள்ளவில்லை, அவர்களைப் பழிக்கவில்லை. மாறாக அவர்கள் இறைவனை நம்பினார்கள். தன்னை இறைவன் காப்பான் என்று அதே இடத்தில் பயமில்லாமல், தன்னோடு இறைவன் இருக்கிறான் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார்கள்.

இதே செயலைப் பற்றி அவர் சகோதரர்களுக்கு ஒரு காலத்தில் யூசுப் உணர்த்துவாரென்றும், ஆனால் அந்த சமயம் அவர்கள் யூசுப்பை அறிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் யூசுப் (அலை) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அருள்வாக்கு வந்தது.

தங்கள் சகோதரனுக்குத் தீங்கிழைத்தது குறித்து எந்தப் பயமுமில்லாமல், எந்தக் குற்றவுணர்வுமில்லாமல் தம் தந்தையை எப்படி ஏமாற்றலாம் என்பதைப் பற்றிப் பேசி  முடிவெடுத்தார்கள் யூசுப்பின் மற்ற பத்து சகோதரர்கள்.

ஓர் இளம் ஆட்டை வெட்டி அதன் இரத்தத்தை யூசுப்பின் சட்டையில் தோய்த்து அழுது கொண்டே வீடு திரும்பினார்கள். “தந்தையே, நீங்கள் பயந்தது போல நடந்துவிட்டது. நாங்கள் எங்கள் உடமைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஓட்டப் பந்தயத்தில் ஈடுப்பட்டிருந்த போது கணப்பொழுதில் ஓநாய்க்குத் தம்பி பலியாகிவிட்டான்” என்று பொய்க் கண்ணீர் சிந்தினார்கள்.

யாகூப் (அலை) அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவர் அந்தக் கதையை நம்பத் தயாராக இல்லை. இறைவன் மீது நம்பிக்கை வைத்து அனுப்பிய மகனை இறைவன் பாதுகாப்பான் என்று உறுதியாக இருந்தார்கள். அவர்கள் அழுது புலம்பி காட்டிய இரத்தம் தோய்ந்த சட்டையைப் பார்த்தார்கள். `ஓநாய் யூசுப்பின் சட்டையைக் கிழிக்காமல் மிருதுவாகவா விளையாடியிருக்கும்` என்று நினைத்துக் கொண்டார்கள்.

தன் மகன்களிடம் திரும்பி “உங்கள் மனம் ஒரு தீய காரியத்தை உங்களுக்கு நல்லதாகக் காண்பித்துவிட்டது. இந்நிலையில் எனக்கு அழகிய பொறுமையை மேற்கொள்வதே சிறந்தது. அல்லாஹ் எனக்கு உதவுவான்” என்று  திண்ணமாகச் சொல்லி, அவர்கள் தம்மைத் தொழுகையில் ஈடுபடுத்திக் கொண்டார்கள். மகன்களுடன் பேசவும் அவர்கள் விருப்பப்படவில்லை.

யாகூப்பின் அன்பு அவர்களுக்கு மட்டுமே கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்த்து அவர்கள் செய்த இழி காரியம் தவறாகிப் போனது. தியானத்திலும் தொழுகையிலும் அதிக நேரத்தை தந்தை யாகூப் செலவு செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாகூப் (அலை) தன் மகன் யூசுப்பை காத்தருளும்படி இறைவனிடம் மன்றாடினார்கள். அவருக்கு யூசுப் கண்ட கனவு நினைவுக்கு வந்தது. யூசுப் எங்கேயோ நலமாக இருக்கிறான். இறைவன் அவனுக்கு நற்பதவி தரவும் பிற நல்ல காரியம் செய்யவும்தான் இந்தப் பிரிவை தந்துள்ளான் என்று பொறுமை காத்தார்கள்.

யூசுப் (அலை) அவர்களும் இறைவன் உதவுவான் என்று பாழ்கிணற்றில் பொறுமை காத்தார்கள். `பொறுத்தார் பூமி ஆள்வார்` என்ற நன்மொழி அங்கு உண்மையானது.

திருக்குர்ஆன் 12:1-18, ஸஹிஹ் முஸ்லிம் 1:74:259

By | 2017-03-25T14:20:34+00:00 May 4th, 2016|0 Comments

Leave A Comment