யாகூப் நபிகளின் காத்திருப்பு

இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த நன்மைகளின் காரணமாக அவர்களின் சந்ததியரான இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை) என்று அவர்கள் பின் வரும் சந்ததிகள் அனைவரையும் இறைவன் நேர்வழிப்படுத்தி நற்கூலி வழங்கியுள்ளான் என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

யாகூப் (அலை) அவர்களுக்கு இறைவன் அருளிய மகிழ்ச்சியில் ஹரன் என்ற ஊருக்கு தன் மாமாவைத் தேடி வருகிறார்கள். தனக்குச் செல்வ வளம் கூடும் காலம் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மருமகன் வந்து சேரவே லபானுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகிவிடுகிறது. 

மாமாவுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்தவர் லியா, இளையவர் ராஹில். யாகூப் (அலை) அவர்களுக்கு ராஹிலைப் பிடித்துவிடுவதால் மாமாவிடம் நேரடியாக அவளை மணம் முடிக்கக் கோருகிறார்கள். மாமா தன் மருமகனை வைத்து தன் வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணத்தில் தன் காட்டில் ஏழு வருடங்கள் வேலை செய்து தனது ஆடுகளை மேய்த்து பராமரிக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைக்கிறார். அதனை ஒப்புக்கொண்டு பூர்த்தி செய்து மகளையும் கரம்பிடிக்கிறார் யாகூப்(அலை). நல்ல முறையில் திருமணம் முடிகிறது. ஆனால் மறுநாள் காலையில்தான் தெரிகிறது அவர் மணம் முடித்தது லியாவை என்று.

மாமாவிடம் வந்து தன்னை ஏமாற்றியதாகச் சொல்கிறார்கள் யாகூப் (அலை). மூத்தவள் இருக்கும் போது இளையவளை மணம் முடித்துத் தருவது தமது பண்பாடில்லை என்ற லபான், இளைய மகள் ராஹிலையும் திருமணம் செய்து  தருகிறேன் ஆனால் மேலும் ஏழு ஆண்டுக் காலம் தனது ஆடுகளைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்கிறார். அதற்கும் ஒப்புக் கொண்டு நிபந்தனையை நிறைவேற்றி தன் மனதுக்குப் பிடித்த ராஹிலையும் திருமணம் செய்து கொள்கிறார்கள் யாகூப் (அலை). அந்தக் காலகட்டத்தில் சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டதாக இருந்திருக்கிறது

லபான் தன் இரு மகள்களுக்கும் ஆளுக்கொரு அடிமைப் பெண்களை வேலைக்காகத் தருகிறார். லியாவுக்குத் தரப்படும் அடிமைப் பெண் ஸில்ஃபா. ராஹிலுக்குத் தரும் அடிமைப் பெண்ணின் பெயர் பில்ஹா. அந்தக் காலகட்டத்தில் அடிமைப் பெண்களும் உடமைகள் போல் கருதப்பட்டனர். 

யாகூப் (அலை) அவர்களின் உழைப்பினாலும், இறைவனின் கருணையினாலும் அவர்கள் வாழ்வு செழிப்பாக மிளிர்கிறது. இதன் காரணமாகவே மாமாவும் மருமகனை அங்கிருந்து கிளம்பவிடாமல் ஏதேனும் காரணம் சொல்லி அவர்களை அங்கேயே தங்க வைக்கிறார்கள். யாகூப் (அலை) அவர்களும் ஏக இறைவன் கொள்கையை அந்த இடத்தில் பரப்பி வந்தாலும் மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டுமென்று காத்திருக்கிறார்கள். 

திருக்குர்ஆன் 6:84

By | 2017-03-25T14:20:34+00:00 April 29th, 2016|0 Comments

Leave A Comment