வாய்மை என்பது மற்றவர்களுக்கு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதே வள்ளுவர்தான் நல்ல விசயத்திற்காகச் சொல்லப்படும் பொய்யும் கூட உண்மைக்கு ஒப்பானதென்றும் குறிப்பிடுகிறார்.
வாழ்க்கையில் ஒரு மனிதன் எந்தச் சூழலிலும் பொய் சொல்லக் கூடாது. ‘பொய்’தான் தவறான பாதைக்கு முதல் படி என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியுள்ளார்கள்.
ஆனால் இப்ராஹிம் (அலை) மூன்று சூழ்நிலையில் பொய் சொன்னதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.
முதல் பொய்யானது மக்கள் எல்லோரும் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்காக நடத்திய திருவிழாவிற்குச் செல்லும் போது இப்ராஹிம் நபியை தங்களுடன் வரச் சொல்லி அழைத்த போது, இணை வைப்பதை விரும்பாத இப்ராஹிம் நபி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி திருவிழாவிற்குப் போகாமல் இருந்து விடுகிறார்.
இரண்டாவது பொய், இப்ராஹிம் அங்குள்ள எல்லாச் சிலைகளையும் உடைத்த பிறகு, மக்கள் அதிருப்தி கொண்டு இப்ராஹிமிடம் கோபமாக “இது உம்முடைய வேலைதானே?“ என்று கேட்டபோது, இப்ராஹிம் (அலை) “இந்தப் பெரிய சிலைதான் இதைச் செய்தது” என்று `பொய்` சொல்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இப்ராஹிம் (அலை) தன் தாயகத்தைத் துறந்து வேறு ஊருக்கு சென்று தன் மனைவி சாராவுடன் தங்கிவிடுகிறார்கள். அந்த ஊரின் கொடுங்கோல் மன்னனின் வழக்கம் மற்றவரின் மனைவியை அபகரிப்பதே. இப்ராஹிம் (அலை) என்பவர் அவருடைய அழகான மனைவியுடன் அந்த ஊருக்கு வந்திருப்பதை அறிந்த மன்னன், இப்ராஹிமை அழைத்து வரப் பணிக்கிறார்.
இப்ராஹிமிடம் மன்னன் “உன்னுடன் வந்த அந்தப் பெண் யார் எனக் கேட்டதும், இப்ராஹிம் (அலை) சாமர்த்தியமாக, “என் சகோதரி” என்று பொய் சொல்லிவிடுகிறார்கள். இதுவே இப்ராஹிம் சொன்ன மூன்றாவது பொய்.
வீடு திரும்பிய இப்ராஹிம் சாராவிடம் “இந்த ஊரில் உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கையாளர்கள் தற்போது எவரும் இல்லை. கொடுங்கோல் மன்னன் உன்னைப் பற்றிக் கேட்டான். நான் உன்னை என் சகோதரி என்று பொய் சொல்லிவிட்டேன். நீயும் அப்படியே சொல்லிவிடு” என்று கேட்டுக் கொண்டார்கள்.
சாரா (அலை) அவர்களை மன்னன் அழைத்து வரப் பணிக்கிறான். சாரா (அலை) அவனிடம் சென்றபோது, அந்த மன்னன் சாராவைக் கண்டு மயங்கி அவளைத் தொட முயற்சிக்கிறான். அவனுடைய தவறான வினைக்குத் தண்டனையாக உடனே அவன் வலிப்பு நோயால் தாக்கப்படுகிறான்.
அந்த மன்னன் சாரா (அலை) அவர்களிடம் தனக்காகப் பிரார்த்திக்கும்படியும் கைகளைக் குணப்படுத்தும்படியும் கேட்கிறான். அவன் வார்த்தையை நம்பி சாரா (அலை) அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்க, அவன் வலிப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறான். கை சரியான அதே நொடியில் மனதைக் கட்டுப்படுத்த தெரியாத மன்னன் மீண்டும் சாரா (அலை) அவர்களை அணைக்க முயல்கிறான். மறுபடியும் வலிப்பு நோயால் தண்டிக்கப்படுகிறான். அதைவிட மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதால் துடிக்கிறான் மன்னன். “நான் கண்டிப்பாக உனக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன், எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பாயாக” என்று மன்னன் சாராவிடம் கெஞ்சுகிறான். சாராவும் அவன் வலிப்பிலிருந்து விடுபட வேண்டுமென்று அவனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவனுக்குக் கை சரியாகிவிடுகிறது. அவன் தன் பணியாளனை அழைக்கிறான் “நீங்கள் அழைத்து வந்தது ஒரு பெண்ணை அல்ல ஒரு பிசாசை” என்று சொல்லி, அவள் தன்னைச் சரியாக்கிவிட்டதற்காகப் பரிசு பொருட்களும், ஆடுகளும், பணிப்பெண்ணாக ஹாஜிரா என்பவரையும் சாராவிற்குக் கொடுத்து அனுப்புகிறான். அந்த ஊரைவிட்டு அவர்களைக் கிளம்பிடும்படியும் மன்னன் சொல்கிறான்.
சாரா (அலை) வீட்டிற்குள் நுழையும் போது இப்ராஹிம் (அலை) அவர்கள் தொழுது கொண்டு இருக்கிறார்கள். சாராவைக் கண்டதும் தன் கைகளால் சைகை செய்து `என்ன நடந்தது?` என்று கேட்கிறார்கள். அதற்கு சாரா “நிராகரிப்பாளனின் திட்டம் நிறைவேறவில்லை, அந்தத் தீயவனின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டான் இறைவன். அவன் மீதே அவன் சூழ்ச்சியைத் திருப்பி விட்டான் அல்லாஹ்” என்று சொல்லி ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்ததையும் தெரிவிக்கிறார்கள்.
அந்த ஊரைவிட்டு இப்ராஹிம், சாரா மற்றும் ஹாஜிரா வெளியேறுகிறார்கள். வெவ்வேறு ஊருக்குச் சென்று ஓரிறைக் கொள்கை பற்றிப் பிரச்சாரம் செய்கிறார்கள் நபி இப்ராஹிம் (அலை). அமைதியான சூழலில் வாழ்ந்து வந்தாலும் இப்ராஹிம் (அலை) மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. நபி இப்ராஹிம் (அலை) மற்றும் சாரா (அலை) அவர்களுக்கு 20 வருட காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதற்காக இப்ராஹிம் (அலை) இறைவனிடம் “எனக்கு ஸாலிஹான (இறையச்சமுள்ள) ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பதை சாரா (அலை) பார்த்துவிடுகிறார்கள்.
இறைவன் தனக்குக் குழந்தை பாக்கியத்தைத் தராததால், பணிப்பெண் ஹாஜராவை திருமணம் செய்து கொள்ளுபடி இப்ராஹிம் (அலை) அவர்களிடம் சாரா (அலை) சொல்கிறார்கள். சாரா (அலை) சொன்னதையேற்று இப்ராஹிம் (அலை) ஹாஜராவை மணம் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஓர் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைதான் இஸ்மாயில் (அலை) அவர்கள். இவர்களின் தலைமுறையின் கீழ் வந்தவர்கள்தான் நபிகள் நாயகம் முகமது (ஸல்). ஆகையால் ஹாஜிராதான் நம் அனைவரின் தாயாரும்.
Leave A Comment