தாய்மைக்குப் பின் திருமணம்

உலகத்தில் இந்தப் பகுதியில் வாழ்வதால் நிறையவே கலாச்சார அதிர்வுகளைச் சந்தித்துள்ளேன். நேற்றும் இப்படித்தான், என் பிலிப்பினோ தோழி ஷேன் தாயாகவிருப்பதைச் சொன்னாள். என்னையும் மீறிய கலவரம் முகத்தில் தொற்றிக் கொண்டதை அவள் கவனித்திருக்கக்கூடும் அதனால் அவளாகவே “ஷேனுக்கு அடுத்த வாரம் திருமணம். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களெல்லாம் சரியாகிவிட்டது, அதனால் பிரச்சனையில்லை” என்றாள். அவளே மறுபடியும் “ஷர்மாவின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்தாயா? மணப்பெண் அழகாக இருந்தாளல்லவா?” என்று தொடர்ந்தாள்.

எங்களுடன் வேலை பார்த்த ஷர்மாவுக்கு மூன்று வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் திருமணப் படத்தை முகநூலில் பதிந்திருந்தார். அதில் அவருடைய மணப்பெண் நிறைமாத கர்ப்பிணி. இரண்டு வாரத்திற்கு முன்பு குழந்தை பிறந்ததையும் பதிவிட்டிருந்தார். இந்த வாரம் முழுவதும் தந்தையான மகிழ்வைப் பகிர்ந்திருந்திருந்தார். திரைப்படம் போல எல்லாம் சட்டென்று நகர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. குடும்பப் பொறுப்பை ஏற்க, இல்லற வாழ்க்கையில் தன்னை ஒப்படைக்க முடிவு எடுப்பதற்கே அவருக்கு 8-9 மாதமாகியுள்ளது என்ற எண்ணங்களை அசைபோட்டபடி வாழ்த்தும் அனுப்பியிருந்தேன். இவர் இந்தியர், அந்த அம்மணி ஐரோப்பாவைச் சேர்ந்தவர். சரி அதெல்லாம் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பகுதி அதைப் பற்றிய சிந்தனை நமக்கெதற்கென்று விட்டுவிட்டேன். இப்போது இவள் இது பற்றிச் சொன்னதும் எல்லாச் சிந்தனைகளும் மீண்டும் எட்டிப் பார்த்தது.

அனிச்சையாக நான் “இப்போதெல்லாம் தாய்மைக்குப் பின் திருமணம் நவநாகரீகமாகிவிட்டது போலும்” என்றேன் எள்ளலாக.
அவளுக்குக் கோபம் வந்துவிட்டது… “இதில் என்ன தவறு? எங்க ஊரில் இதெல்லாம் தவறில்லை. நான் கூடத் தாய்மைக்குப் பின் தான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார் கூட முகம் சுழிப்பதில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் இந்தியக் கலாச்சாரத்தில் குடும்ப அமைப்பில் இதற்கான ஒப்புதல் இல்லை என்பதை அறிவேன். நேற்று ஒரு செய்தி படித்தேன் – ‘மகள் கர்ப்பமானதை அறிந்த தந்தை மகளை வெட்டிக் கொன்றதாக’. ஏன் இப்படி?” என்றாள் எரிச்சலுடன்.

என்னைப் பேச விடாமல் அவளே மறுபடியும் “எங்க ஊரில் கர்ப்பமாகியவன் திருமணம் செய்து கொள்ள முன் வராவிட்டாலும் அவள் கருவைச் சிதைப்பதில்லை. அதில் அவளுக்கும் பங்குள்ளது என்பதால் மனதார அந்தக் கருவைச் சுமப்பாள். காதலில்லாமல் கருவுற்றாலும் அப்படித்தான். ஒற்றைத் தாயாக இருப்பதில் அவளுக்குப் பிரச்னையிருக்காது. உற்றார் உறவினர்களும் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். அவள் வீட்டார் அவன் ஓடிவிட்டான் என்பதைக் கூடப் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் கருச்சிதைவை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நாங்கள் ‘அவல் போட்டு மெல்பவர்களுக்குப்’ பயப்படுவதில்லை மாறாக ஒர் உயிர்கொலைக்குப் பயப்படுகிறோம்” என்றாள்.

என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவள் சொல்வதிலும் நியாயமிருப்பதாகவே தோன்றியது. ஷேனை அழைத்து வாழ்த்துத் தெரிவித்தேன்.

By | 2016-12-20T18:18:19+00:00 September 22nd, 2014|அனுபவம்/ நிகழ்வுகள்|0 Comments

Leave A Comment