இவ்வுலகத்திற்கு ஏராளமான இறைத்தூதர்களை, அவரவர் சமூகத்தாருக்கு விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே போதிக்கவும் மக்களை நல்வழிப்படுத்தவும் இறைவன் அனுப்பி வைத்தான்.
ஆனால் திருக்குர்ஆனில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. சில இறைத்தூதர்களின் வரலாறு முழுமையாகக் கூறப்பட்டுள்ளது. சில இறைத்தூதர்களின் பெயர்களோடு சில குறிப்புகள் மட்டுமே காணப்படுகிறது.
நபி இல்யாஸ் (அலை) அவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் நபி ஹாரூன் வழி வந்தவர்; ஷாம் அதாவது சிரியா நாட்டிற்கு நபியாக அனுப்பப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவர்களுடைய சமூகத்தார் ‘பஅல்’ என்னும் கற்பனை தெய்வத்தை வணங்கி வந்தனர். அதனால் அந்த நகரம் ‘பஅலபக்’ என அழைக்கப்பட்டது. இன்று இந்த நகரம் லெபனானில் உள்ளது.
இல்யாஸ் (அலை) அவர்கள் மக்களிடம், “படைப்பாளர்களில் எல்லாம் மிகச் சிறந்தவனான அல்லாஹ்வை விட்டுவிட்டு உங்கள் கற்பனை தெய்வத்தை வணங்கி உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள். இறையச்சம் கொள்ளுங்கள். அல்லாஹ்தான் உங்களுடைய இறைவனும், உங்களுக்கு முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்” என்றார்கள். அதற்கு மக்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால் மறுமையில் இறைவன் இவர்களைத் தண்டிப்பான்.
இறைவன் ஒருவன், அவன் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் என்று நம்புபவர்களுக்கு நற்கூலியுண்டு.
இறைவன் அவனுடைய தூதர்களை உலகத்திலுள்ள அனைவரை விடவும் மேன்மையாக்கியுள்ளான்.
இல்யாஸ் (அலை) அவர்களைப் பற்றி வேறு எந்தக் குறிப்பும் திருமறையில் இல்லை.
இல்யாஸ் (அலை) மீது ஸலாமுண்டாவதாக.
திருக்குர்ஆன் 14:4, 38:45-48, 6:84-85, 37:123-131
Leave A Comment