ஸபா நாட்டினருக்கு இறைவன் வளங்களை வாரி வழங்கியிருந்தான். அந்நகரத்தின் இருப்புறங்களிலும் செழிப்பான சோலைகள் வளரச் செய்து, அதில் அவர்களுக்குத் தேவையான காய்கனிகளை அளித்திருந்தான் இறைவன்.
ஒருமுறை கடும் மழை பொழிந்தது. மழை வெள்ளம் பயிர்களை நாசமாக்கியது. அதனால் ஸபா நாட்டின் மக்கள் மழைநீரைத் தேக்கி வைக்க அணை அமைத்தார்கள். மழை இல்லாத காலத்தில் அந்நீரை பயிர் விளைச்சலுக்குப் பயன்படுத்தினார்கள். விளைச்சல் அமோகமாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் வாழ்வு மேம்பட்டது. அவர்களின் வளம் கூடியது.
அவ்வூர் மக்களுக்குத் தேவையான காய் மற்றும் கனி வகைகளும் அவர்களுக்குத் திருப்தியாக அந்நகரத்திலேயே கிடைத்தது. எல்லா வளங்களும் கிடைத்து மகிழ்ச்சியுடன் இருக்கும் மக்களுக்கு இறைவன் பற்றிய நினைவில்லாமல், இறையச்சமில்லாமல் இருந்தனர்.
அந்நாட்டிலுள்ள ஊர்களுக்கிடையில் இறைவன் போக்குவரத்துப் பாதைகளை அமைத்துத் தந்து அவர்களுக்குச் சுலபமாக்கியிருந்தான். அதில் அவர்கள் எந்தப் பயமுமில்லாமல் காலை- இரவு என்று பாராமல் பிரயாணம் செய்தார்கள். ஆனால், அவர்கள் “பிரயாணம் செய்யும் இடங்களுக்கு இடையேயுள்ள தூரம் அதிகமாக இருந்தால், இன்னும் உல்லாசமாக இருந்திருக்கும்” என்று வேண்டி தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
வளங்களையும் நல்ல ஆரோக்கியத்தையும் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த மறந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையைப் புறக்கணித்தார்கள். ஆகவே, இறைவன் அவர்களுக்குத் தக்க தண்டனையை வழங்க அவர்களின் சுவை மிகுந்த கனிகளைக் கொண்ட அவர்களுடைய இரு தோப்புகளும் கடும் கசப்பும், புளிப்பும் கொண்ட பழங்களுடைய மரங்களாக மாற்றினான்.
மக்களால் கட்டப்பட்ட பெரிய அணையை உடைக்கக் கடும் வெள்ளப் பிரவாகத்தை இறைவன் அவர்களுக்குத் தந்தான். அணை உடைந்து அதிலிருந்து நீர் பெருக்கெடுத்தோடி பயிர்கள் நாசமாகியதோடு, வீடுகள் இருந்த சுவடுகள் இல்லாமல் எல்லாமும் அழிந்து அந்த நாடே காணாமல் போனது. தப்பித்த மக்கள் பல இடங்களுக்குச் சிதறிப் போனார்கள். அழகிய நகரம் அழிந்து போனது.
நன்றி மறந்து நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் இத்தகைய கூலியை இறைவன் கொடுப்பதில்லை.
திருக்குர்ஆன் 34:15-19
Leave A Comment