சுலைமான் (அலை), ஸபா நாட்டின் அரசி பல்கீஸிக்கு அனுப்பிய கடிதத்தை ஹுத்ஹுத் பறவை அரசி பல்கீஸ் பார்க்கும் வகையில் சேர்ப்பித்துச் சென்றது.
உடனே தன் அரசவையைக் கூட்டி, சுலைமான் (அலை) அனுப்பிய கடிதத்தில் உள்ளவற்றை அவையிலுள்ள பிரமுகர்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, அது பற்றிய ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அவர்களின் கருத்துக்கேற்ப முடிவு செய்யப்படுமென்றும் அறிவித்தார்
அவையோரில் சிலர் “அவர் சொன்னதற்காக நமது நம்பிக்கையை, நம் வழக்கத்தின் வணக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாது” என்றனர்.
இன்னும் சிலர் “நாம் அவர் சொல்வதைக் கேட்காவிட்டால், நம்மீது அவர் போர் தொடுக்கக் கூடும்” என்றனர்.
அதற்கு மற்றவர்கள் “நாங்கள் பலசாலிகள், கடினமாகப் போர் செய்யக் கூடியவர்கள். அவர்களை வீழ்த்திவிடுவோம். ஆதலால், அரசியே நீங்களே முடிவு செய்யுங்கள். நல்ல சிந்தித்தெடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்” என்றனர்.
அரசி பல்கீஸ் ஆலோசனையாளர்களிடம் “அரசர்கள் ஒரு நகரத்திற்குள் படையெடுத்து நுழைவார்களானால் அதனை அழித்து விடலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் அப்பாவி மக்கள்தான். என் மக்களை அந்நிலைக்கு ஆளாக்க நான் தயாராக இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
உடனே அவையோர் “பிறகு என்ன முடிவு எடுக்கலாம், நீங்களே சொல்லுங்கள் அரசி” என்றனர்.
“நாம் நிறைய விலையுயர்ந்த பொருட்களைக் கடிதம் அனுப்பிய சுலைமான் (அலை) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பலாம். பொருட்களைப் பார்த்த பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறார், அதைக் கொண்டு செல்பவர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு முடிவெடுப்போம்” என்றார்.
அவையோர்களும் அதனை நல்ல யோசனையென்று வரவேற்றனர்.
அரசியின் கட்டளையின்படி பல விலையுயர்ந்தப் பொருட்கள் அவருடைய மேற்பார்வையில் தயாரானது. நம்பிக்கைக்குரியவரிடம் வாகனத்தில் அப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சுலைமான் (அலை) பொருட்களை ஏற்றுகொள்வார் என்று நம்பிக் காத்திருந்தனர்.
திருக்குர்ஆன் 27:29-35
Leave A Comment