கொடியவன் ஜாலூத்தை கொன்றதால் தாவூத் (அலை) இஸ்ராயீலர்களிடம் மிகவும் பிரபலமடைந்து பெரும் மதிப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தார்கள். இருப்பினும் புகழாலும் அங்கீகாரத்தாலும் ஈர்க்கப்படாத தாவூத் (அலை) இறைவனின் அன்புக்கு அடிமையாக அவனைத் தனிமையில் தொழுது வணங்குவதையே விரும்பி வந்தார்கள்.
தாவூத் (அலை) அரசராகப் பொறுப்பேற்றார். இறைவன் தாவூத் (அலை) அவர்களுக்கு ஞானத்தை விசாலமாக்கித் தந்தான், தெளிவான சொல்லாற்றலை அளித்தான். அவர்களுடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்திக் கொடுத்தான். தாவூத் (அலை) அவர்களை நபியாக்கி அவர்களுக்கு ‘ஜபூர்’ என்ற வேதத்தையும் அளித்தான்.
தாவூத் (அலை) அரசராக இருந்தும் அவர்கள் தம் கையால் உழைத்து உண்பதையே விரும்பினார்கள். இறைவன் தாவூத் (அலை) அவர்களுக்கு, போரிடும் போது தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதையும் கற்றுக் கொடுத்தான். இரும்பையே மிருதுவாக்கும் தன்மையைத் தாவூத் (அலை) பெற்றிருந்தார்கள்.
உழைப்பை மதித்த தாவூத் (அலை) தன்னுடைய உபகரணங்களையும், ஆயுதங்களையும் தாமே செய்து மற்றவர்களுக்கும் அளித்து வந்தார்கள்.
தாவூத் (அலை) இறைவனைத் துதிக்க, மக்களுக்கான பணிகள், கோரிக்கைகள் கேட்கும் நேரம், மக்களுக்குப் போதிக்கும் நேரம் என்று அவர்களுடைய நேரத்தை பிரித்துக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவாகச் செய்து வந்தார்கள்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பு. அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று, ஒருநாள் விட்டுவிடுவார்கள். அதேபோல் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகை. அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.
மீண்டும் ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். தாவூத் (அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்களாம். பணியாள் சேணம் பூட்டி முடிப்பதற்குள் வேதம் முழுவதையும் ஓதிவிடுவார்களாம். அவர்கள் வேதத்தை மிகவும் இனிமையாகச் சங்கீதம் போல் ராகத்தோடு ஓதுவார்கள் என்று நபி முஹம்மது (ஸல்) கூறிய குறிப்பு ஸஹிஹ் புகாரியில் வந்துள்ளது.
இவ்வளவு சிறப்புகளுடைய தாவூத் (அலை) அவர்களுக்கு, பொறாமையின் காரணத்தாலேயே பல எதிரிகள் இருந்தார்கள். தாவூத் (அலை) எல்லாவற்றையும் எதிர்கொண்டு மிகவும் சிறப்பாக ஆட்சி புரிந்து அவர்களை வென்றார்.
தாவூத் (அலை) அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவர்தான் சுலைமான் (அலை). தந்தையின் குணநலன்களை, தமது சிறு வயதிலிருந்தே கூர்ந்து கவனித்து வருபவராக இருந்தார்கள்.
அல்லாஹ் தான் நாடியோருக்கு அரசு அதிகாரத்தை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமான கொடையுடையவன், யாவற்றையும் நன்கறிபவன்.
திருக்குர் ஆன் 38:17-20, 17:55, 4:163, 21:80, 34:10 ஸஹிஹ் புகாரி 2:34:2072, 4:60:3420, 5:65:4713, 5:66:5048
Leave A Comment