மூஸா (அலை) அவர்கள் மறைந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ராயீலர்களை வழி நடத்த யாருமில்லை. இந்தச் சூழலில் ஜாலூத் என்ற கொடியவன் இஸ்ராயீலர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.
அவர்களின் பொருட்களைக் கொள்ளையடித்தும் அதில் முக்கியமாக மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) இஸ்ராயீலர்களுக்குத் தந்திருந்த வேதத்தைப் பொதிந்த கற்பலகையைக் கொள்ளையடித்தும், அவர்களைக் கொன்றும் அக்கிரமங்கள் புரிந்து வந்தான். அதற்காகவே இறைவன் மறுபடியும் இஸ்ராயீலர்களுக்கு ஒரு நபியை அனுப்பி வைத்தான்.அவருடைய பெயர் திருக்குர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இப்னு கஸீர் அவர்களின் குறிப்பில் ஷாமீல் என்றும் அஸ்மவீல் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ராயீலர்கள் திரண்டு வந்து “நபியே, எங்களுடைய பொருட்களை மீட்டு, இப்பூமியில் அமைதியாக வாழ, நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடத் துணிந்துவிட்டோம். அப்போரை மேற்கொள்வதற்காக எங்களுக்கு ஒரு தலைவனாகிய ஓர் அரசனை ஏற்படுத்த இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டனர்.
மூஸா (அலை) ஒரு பூமியைக் காட்டி அதில் அவர்களைத் தங்கும்படியும் அதில் உள்ளவர்களுடன் போரிட்டு அப்பூமியை மீட்கும்படியும் சொல்லும்போது “பலம் கொண்டவர்களை எங்களால் எதிர்கொள்ள முடியாது. நீயும் உம் இறைவனும் போரிடுங்கள், நாங்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறோம்” என்று சொல்லிய அதே இஸ்ராயீலர்கள் நாற்பது வருடங்களுக்குப் பிறகு அந்தப் பூமியை மீட்கப் போரிடத் தயாராகிவிட்டு அதற்காக இறைவனிடம் பிரார்த்திக்கும்படியும் கேட்டார்கள்.
அதற்கு அந்த இறைத்தூதர் “போர் செய்தல் உங்களின் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களே?” என்று முன்னால் நடந்தவற்றை நினைவுகூர்ந்தவராகக் கேட்டார்கள்.
மனம் திருந்திய இஸ்ராயீலர்கள் “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின் எங்களுக்கு இழக்க ஒன்றுமில்லை. அல்லாஹ்வின் பாதையில் போரிட நாங்கள் தயார்” என்றனர்.
அவர்களுக்காக இறைத்தூதரும் இறைவனிடம் சிரம்தாழ்த்தி பவ்யமாகப் பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களுக்கு வழிகாட்டினான்.
திருக்குர் ஆன் 2:246
Leave A Comment