அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்களின் அழிவு

எகிப்திலிருந்து வெளியேறிய பனூ இஸ்ராயீலர்கள் தங்குவதற்கு வீடே தேவையில்லாத அளவுக்கு இறைவன் மேகத்தை நிழலாக தந்து, சொர்க்கத்திலிருந்து உணவுப் பொருட்களை உட்கொள்ள தந்தும் திருப்தி அடையாத யூதர்கள் வெங்காயம், பருப்பு, வெள்ளரிக்காய், கீரை வேண்டுமென்று கேட்க, அதற்கு `நீங்கள் ஏதேனும் ஒரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள்` என்றார்கள் மூஸா (அலை).

அல்லாஹ், பனூ இஸ்ராயீலர்களின் விருப்பப்படி அவர்களுக்காக விதித்த ஒரு நகரத்தில் நுழைந்து அங்கு அவர்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசிக்கட்டும். அதன் வாயிலில் நுழையும்போது, பணிவுடன் தலைவணங்கி ‘ஹித்ததுன்’ அதாவது ‘எங்கள் பாவச்சுமைகள் நீங்கட்டும்’ என்று சொல்லி நுழையுங்கள் என்று கட்டளையிட்டான். அந்த நகரம் பாலஸ்தீனம் என்று சொல்லப்படுகிறது. 

ஆனால் பனூ இஸ்ராயீலர்கள் அதில் நுழைய மறுத்துவிட்டனர். அதில் ஏற்கெனவே குடியிருப்பவர்கள் மிக பலசாலியாக இருக்கிறார்கள். அவர்கள் எங்களைக் கொலை செய்துவிடுவார்கள் என்று பயப்படுவதாகச் சொல்லி அந்த நகரத்திற்குச் செல்ல மறுத்துவிட்டனர். 

ஆனால் அவர்களைச் சேர்ந்தவர்களில் இருந்தே இரண்டு நபர்கள் “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அந்நகரத்தில் நுழைந்து பார்ப்போம். அந்நகரத்தினரை எதிர்த்து நகரத்தில் வாசல் வரை நுழைய முயற்சிப்போம். அப்படி நம்மால் அங்கு செல்ல முடிந்துவிட்டால் நாம் வெற்றியாளர்களாகிவிடுவோம்” என்றும் சொல்லிப் பார்த்தார்கள்.

அதற்கவர்கள் “அந்நகரத்து மக்கள் அங்கிருக்கும் வரை அங்கு நாங்கள் நுழைய மாட்டோம். மூஸாவே! நீரும், உம்முடைய இறைவனும் சென்று அவர்களுடன் போர் செய்யுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறோம்” என்று நன்றி மறந்து திமிர்பிடித்தவர்களாகப் பேசினர். மூஸா (அலை) அவர்களால் யூதர்களின் பேச்சை சகித்துக் கொள்ள முடியாமல் சோர்ந்துவிட்டார்கள்.

யூதர்களுக்காக சட்டத்திட்டங்களைப் பெற நாற்பது நாட்கள் நோன்பு இருந்து திரும்பி வந்த மூஸா (அலை) அவர்கள், யூதர்கள் காளைக் கன்றை வணங்குவதைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்து, நோன்பிருந்து பெற்று வந்த தவ்ராத் வேதம் வரையப் பெற்றிருந்த பலகைகளை எறிந்துவிட்டார்கள். 

மீண்டும் தம் பிரச்சாரத்தை தொடங்கி மக்களை பாவ மன்னிப்புக் கோரச் சொல்லி, அவர்களை தெளிய வைத்து, எறிந்துவிட்ட தவ்ராத் வேதத்தை எடுத்து, அதனை மக்களுக்காக வாங்கி வந்ததைத் தெரிவிக்கும்போது, “இது இறைவனிடம் இருந்துதான் வந்தது என்று எப்படி நம்புவது?” என்று கேள்வி கேட்டனர். உடனே யூதர்களிலேயே உயர்குலத்தவர்கள் என்று கருதிய மூத்தவர்கள் எழுபது பேரை அழைத்துக் கொண்டு மூஸா (அலை) தூர் சினாய் மலைக்குச் சென்றார்கள். 

அங்கு அவர்கள் மூஸா (அலை) இறைவனிடம் பேசியதை தம் காதால் கேட்டார்கள். இருப்பினும் பேசுவது இறைவன்தான் என்று நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்டார்கள். “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரை உன்னை நம்ப மாட்டோம்” என்று கூறினார்கள். அதே நொடியில் இறைவனின் கோபம் ஓர் இடி முழக்கமாக அவர்களைத் தாக்கியது. அந்த எழுபது பேரும் உயிர் இழந்தார்கள்.

அதைக் கண்டு பதறிவிட்டார்கள் மூஸா (அலை). இவர்கள் எழுபது பேரையும் திரும்பி அழைத்துச் செல்லாவிட்டால் என்ன நேருமோ என்று இறைவனிடம் மன்றாடினார்கள். “என் இறைவா! இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே!? எங்களில் உள்ள அறிவில்லாதவர்கள் செய்த குற்றத்திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்துவிடுகிறாயே. நீ நாடியவர்களை வழிதவறவும் விடுகிறாய், நேர் வழியில் செலுத்தவும் செய்கிறாய். நீதான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு பாவ மன்னிப்பு அளிப்பாயாக. எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்கள்.

இறைவன் மூஸா (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பினான். இறைவன் ‘தூர்’ மலையை அப்படியே அவர்கள் மேல் உயர்த்தினான். அவர்களுக்குக் கொடுத்த வேதத்தை உறுதியுடன் பற்றிக் கொள்ளும்படியும், அதில் உள்ளவற்றை நினைவில் வைத்துக் கொண்டு நன்மைகள் புரியும்படியும் கட்டளை புரிந்தான். அப்படி செய்பவர்களே பயபக்தியுடையவர்கள் என்றும் கூறினான். இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதாக வாக்களித்தார்கள். ஆனால் அவர்களின் வாக்கு நீடிக்கவில்லை மறுபடியும் மாறுசெய்தார்கள்.

பனூ இஸ்ராயீலர்களின் நலனுக்காக இறைவனிடம் மன்றாடிய மூஸா (அலை), இறைவனின் அருட்கொடைகளை மறந்து எதற்கும் திருப்தியடையாத யூதர்களை தாம் கட்டுப்படுத்த முடியாது என்று முடிவெடுத்தார்கள். “யா அல்லாஹ்! என்னையும் என் சகோதரரையும் தவிர வேறெவரையும் நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா (அலை) யூதர்களாகிய பனூ இஸ்ராயீலர்களைவிட்டு விலக இறைவனிடம் வேண்டினார்கள்.

இறைத்தூதரே பிரார்த்தித்த பிறகும் இறைவன் விட்டுவைப்பானா என்ன? உடனே இறைவன் “நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிரந்தர பூமியென்று ஒரு பூமி அமையாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அதுவரை அவர்கள் பூமியில் தட்டழிந்து கெட்டலைவார்கள். நீங்கள் இருவரும் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான். அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். வழிதவறியவர்களை அல்லாஹ் அழித்தான்.

திருக்குர்ஆன் 2:51-62, 5:20-26, 5:49-59, 7:148-155

By | 2017-03-25T14:20:32+00:00 June 17th, 2016|0 Comments

Leave A Comment