வாக்கு தவறிய பனூஇஸ்ராயீல் கூட்டத்தினர்

பனூ இஸ்ராயீலர்கள் கேட்ட சட்ட திட்டங்களுக்காக நாற்பது நாட்கள் நோன்பிருந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்துப் பெற்ற தவ்ராத் வேதத்தை எடுத்துக் கொண்டு பனூ இஸ்ராயீலர்களிடம் திரும்பினார்கள் மூஸா (அலை). 

பனூ இஸ்ராயீலர்கள் ஒரு காளைக் கன்றை தம் கடவுளாக்கி வழிப்படுவதைக் கண்டு கொதித்துப் போனார்கள் மூஸா (அலை). அல்லாஹ் காட்டிய கருணையையும் பொழிந்த அருளையும் மறந்துவிட்டு மீண்டும் விக்கிர வழிப்பாட்டிற்குத் திரும்பியது பற்றி வினவினார்கள்.

“என்னுடைய சமூகத்தவர்களே! நம் இறைவன் நமக்கு ஓர் அழகிய வாக்குறுதியைக் கொடுக்கவில்லையா? அல்லாஹ் உங்கள் மீது அருள் பொழிந்து பல காலமாகிவிட்டது என்று இப்படிச் செய்தீர்களா அல்லது இறைவனுடைய கோபம் நம் மீது இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” என்று கோபமாகக் கேட்டார்கள். 

அதற்குப் பனூ இஸ்ராயீலர்கள் “ஸாமிரி என்பவர் எங்களிடமிருந்த தங்கத்தை வைத்து இப்படியான ஒரு தங்கக் காளையை எங்களுக்குச் செய்து தந்தார். அந்தக் காளையானது சப்தமிட்டது அதனால் அதுதான் நம்முடைய இறைவன் என்று நாங்கள் வணங்க ஆரம்பித்துவிட்டோம்” என்று விளக்கமளித்தனர். 

மூஸா (அலை) அவர்களுக்குக் கோபம் தலைக்கேறியது. எல்லாக் கோபமும் தன் சகோதரன் ஹாரூன் மீது திரும்பியது. ஹாரூன் (அலை) அவர்களைப் பிடித்து “ஏன் நீங்கள் இவர்களைத் தடுக்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு ஹாரூன் (அலை) அவர்கள் தான் எவ்வளவோ தடுத்துப்பார்த்தாகவும், இது இறைவன் நமக்குச் செய்யும் சோதனை என்பது பற்றியும் எடுத்துக் கூறியதையும், அவர்கள் அதைக் கேட்காமல் தனக்கே கொலை மிரட்டல விடுத்ததையும் எடுத்துக் கூறினார்கள். “மூஸா (அலை) எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இந்தக் காளைக்குச் செய்யும் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று கூறி, தனக்குக் கீழ்ப்பணிய மறுத்துவிட்டதை வேதனையுடன் பகிர்ந்தார்கள். 

மூஸா (அலை) மக்களிடம் “எப்படி ஒரு விக்கிரகம் நன்மையையோ, தீமையையோ உங்களுக்குச் செய்ய முடியும்!? அது சக்தியற்ற ஒரு பொருள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்டுவிட்டு ஸாமிரியைத் தேடிச் சென்றார்கள். அவனிடம் “ஏன் இப்படி மக்களைத் திசை திருப்பினாய்?” என்று வினவினார்கள். 

“மக்கள் தந்த தங்க ஆபரணங்களைக் கொண்டு இப்படியொரு காளையைச் செய்தேன். அதனைக் கத்த வைக்க உங்களிடம் தூது வந்த வானவரின் காலடியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து எறிந்தேன்” என்று தான் செய்த, சூனிய தந்திரத்தை விவரித்தான். 

மூஸா (அலை) ஸாமிரியை அங்கிருந்து போய்விடும்படி கட்டளையிட்டார்கள். “மக்கள் அவனைத் தீண்டாதபடியான நோய் அவனுக்கு வரும். மறுமையிலும் அவனுக்கு அதற்கான தண்டனை தொடரும்” என்றும் எச்சரித்து அனுப்பினார்கள். 

மூஸா (அலை) தம் மக்களிடம் “உங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவனே எல்லாப் பொருட்களின் மீது விசாலமான ஞானமுடையவன்” என்று எடுத்துரைத்தார்கள்.

மேலும் “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை வணங்கி உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டீர்கள். அதனால் உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள். பாவ மன்னிப்பு கேட்டபடி நீங்களே ஒருவருக்கொருவர் மாய்த்துக் கொள்ளுங்கள், அதுவே நீங்கள் உங்களைப் படைத்தவனுக்குச் செய்யும் நன்மையாகும்” என்று மிகவும் கோபமாகச் சொல்லி வெளியேறினார்கள். 

மக்கள் அவர்களின் தவறை உணர்ந்து அந்தக் காளை விக்கிரகத்தைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கி அதனைக் கடலில் சேர்த்துவிட்டார்கள். 

இருப்பினும் அந்தக் கூட்டத்தில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உங்களை நம்ப மாட்டோம்” என்றார்கள். 

வீடுகளே தேவையில்லாத அளவுக்கு மேகத்தையே அவர்களுக்கு நிழலாகத் தந்து, சொர்க்கத்திலிருந்து அவர்களுக்கு ஆகாரத்தைத் தந்தருளிய அருளாளின் அருட்கொடையை மறந்து பேசிய அவர்களின் மீது இறைவனின் கோபம் திரும்பியது. 

திருக்குர்ஆன் 20:85-98, 2:54 

By | 2017-03-25T14:20:32+00:00 June 16th, 2016|0 Comments

Leave A Comment