பனூ இஸ்ராயீலர்களின் தொடர் கோரிக்கைகள்

பனூ இஸ்ராயீலர்கள் மூஸா (அலை) அவர்களுடன் செங்கடல் பிளந்து அதைக் கடந்து வந்த நினைவுகளில் பூரித்துப்போய் இருந்தனர். இறைவனின் அருளை நினைத்து நன்றி சொல்லிக் கொண்டும் இருந்தனர். இருப்பினும் அவர்கள் விக்கிரகங்களை வணங்குபவர்களைக் கடந்து சென்றபோது “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித் தாருங்கள்” என்று வேண்டினார்கள். காலங்காலமாக விக்கிரகங்களை வணங்கிப் பழகியவர்களுக்கு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி உருவம் இல்லாத இறைவனை வணங்க இயலவில்லை.

அவர்கள் விக்கிரங்களைக் கேட்டவுடன், மூஸா (அலை) “நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தார்” என்றார்கள். “அந்த மக்கள் அறியாமையில் இருப்பதால் விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அது அழியக் கூடியவை, வீணானவை. அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கித்தருவேன்? அல்லாஹ், உங்களை உலகத்தில் உள்ள எல்லா மக்களையும்விட மேலானவர்களாக்கி வைத்துள்ளான்.

ஃபிர்அவ்னிடம் அடிமைகளாகக் கிடந்த உங்களை விடுவித்து, கொடுமைகளிலிருந்து காப்பாற்றினான். உங்கள் ஆண் குழந்தைகளைக் கொலை செய்து, உங்கள் பெண் குழந்தைகளை மானபங்கம் செய்து உங்களைச் சிறுமைப்படுத்தியதிலிருந்து உங்களை விடுவித்தான்” என்று விளக்கினார்கள். அதனைக் கேட்டு, சிறிது காலம் அடங்கி இருந்தனர் பனூ இஸ்ராயீலர்கள்.

தூர் மலை வரை சென்றுவிட்ட மூஸா (அலை) கூட்டத்தினர், உயிரினங்களே இல்லாத பாலைவனத்தில் உண்டு மகிழவும், பருகித் திளைக்கவும் இறைவன் அருளினான். மூஸா (அலை) அவர்கள் பிரார்த்தித்தபோது “உமது கைத்தடியால் அப்பாறையை அடிப்பீராக!” என்ற இறைவனின் கட்டளைக்குப் பணிந்தார்கள் மூஸா (அலை). அப்பாறையிலிருந்து பன்னிரெண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. 
ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடிக்கு ஒரு நீர்த்துறையென்று அங்குத் தங்கி அனுபவித்தனர்.  அதுமட்டுமின்றி மன்னு என்ற உணவுப் பொருளையும் சொர்க்கத்திலிருந்து இறைவன் அவர்களுக்காக இறக்கி அருளினான். அவர்கள் அதற்கு “மூஸாவே! ஒரே விதமான உணவை சாப்பிட்டு அலுத்துவிட்டது. ஏதாவது இறைச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்க, அதற்கும் சளைக்காமல் பிரார்த்தித்தார் மூஸா (அலை). 

இறைவனும் அவர்களுக்கு ஸல்வா என்ற குருவிகளை தினமும் இறக்கினான். அவர்கள் மேலும் பூமி விளைவிக்கும் கீரை வகைகள், வெள்ளரிக்காய், வெங்காயம், பருப்பு, கோதுமை போன்றவற்றை வெளிப்படுத்திட இறைவனிடம் கேளுங்கள்” என்று ஆசைப்பட்டனர். அதற்கு மூஸா (அலை) “நல்லதை விடுத்து மிகத்தாழ்வானதை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒரு நகரத்திற்குச் சென்று விடுங்கள், அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறினார்கள். 

மக்கள் மீண்டும் விக்கிரகங்கள் இல்லையென்றால் நமக்கான சட்டத்திட்டங்களையாவது பெற்று வாருங்கள் என்று ஏதாவது ஒன்றை மூஸா (அலை) அவர்களைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூஸா (அலை) தம் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களை, பனூ இஸ்ராயீலர்கள் வழிதவறிச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மக்களைத் திருப்திப்படுத்த மூஸா (அலை) இறைவனின் குரலை முதன்முதலில் கேட்ட தூர்-சினாய் மலைக்குச் சென்று பிரார்த்தித்தார்கள். 

அவரை முப்பது நாட்கள் இறைவன் நோன்பு இருக்கப் பணித்தான். அவர்களும் நோன்பு இருந்தார்கள். பொதுவாக நோன்பு இருப்பவர்கள் வாயில் வாடை வரும். அந்த வாடையுடன் மூஸா (அலை) இறைவனிடம் பேசத் தயங்கி தம் வாயில் மிஸ்வாக் போன்ற செடியை வைத்து தேய்த்துத் தம் நோன்பை முறித்துவிட்டார்கள். 

மூஸா (அலை) அவர்களிடம் இறைவன் “நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும். தவறிழைத்ததால் இன்னும் பத்து நாட்கள் நோன்பு இருந்துவிட்டு வாருங்கள்” என்று சொன்னான். அவ்வாறே மூஸா (அலை) அவர்களும் இறைவனின் கட்டளைக்குப் பணிந்தார்கள்.

இறைநம்பிக்கை கொண்டவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, வேறு என்னவாக இருந்தாலும் எவர் வழிபாட்டுக்குரியவன் ஒருவன் என்று அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கான நற்கூலியை அல்லாஹ் நிச்சயம் தருவான்.

திருக்குர்ஆன் 7:138-142, 2:60-62.

By | 2017-03-25T14:20:32+00:00 June 14th, 2016|0 Comments

Leave A Comment