பிர்அவ்ன் தன் சமுதாயத்தாரை பயமுறுத்தி தன்னை வணங்கும்படி செய்தான். ஆனால் மூஸா (அலை) இறைவன் தந்த அத்தாட்சிகளைக் கொண்டும், போட்டியாக நியமிக்கப்பட்ட சூனியக்காரர்களை வீழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தினார்.
சூனியக்காரர்கள் மனம் திருந்தி இறைவழியில் தம் உயிரைத் துறக்கும் அளவுக்கு இறை நம்பிக்கையுடையவர்களாக மாறியதைக் கண்ட மக்கள் குழப்பத்தில் இருந்தார்கள். எங்கு அவர்கள் மனம் மாறிவிடுவார்களோ, தம் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மூஸா (அலை) அவர்களின் பின்னால் சென்றுவிடுவார்களோ என்ற பீதியில் ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களைக் கொல்லத் திட்டம் வகுத்தான்.
ஃபிர்அவ்ன் தம் அரசவையில் கூறினான் “மூஸாவை நான் கொலை செய்தே தீருவேன். அவரை அப்படியே விட்டால் உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் மாற்றிவிடுவார்” என்றான்.
அதற்கு ஃபிர்அவ்னின் குடும்பத்தாரிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அதனை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தவர், மூஸா (அலை) அவர்களைக் கொலை செய்வேன் என்று ஃபிர்அவ்ன் பேசியதைக் கேட்டு தாங்கிக் கொள்ள இயலாமல், அதே சமயம் தனது இறைநம்பிக்கையை வெளிப்படுத்தாதவராக ஃபிர்அவ்னையே எச்சரித்தார்.
“என் இறைவன் அல்லாஹ் என்று கூறிய ஒரே காரணத்திற்காக ஒரு மனிதரைக் கொல்லப் போகிறீர்களா?இறைவனிடமிருந்து தெளிவான சாட்சிகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லி இருந்தால், அந்தப் பொய்க்கான தண்டனையை அவரே அனுபவிப்பார். ஆனால் அவர் உண்மையைச் சொல்லி இருந்தால்? அவர் உங்களை எச்சரிக்கை செய்யும் ஆபத்துகளும் வேதனைகளும் உங்களையும் நம் சமுதாயத்தினரையும் வந்தடையுமே? எப்படிப் பார்த்தாலும் அவரைக் கொலை செய்வது சரியாகப்படவில்லை” என்று தெளிவாகவும் தைரியமாகவும் எடுத்துரைத்தார்.
இதைக் கேட்டு ஃபிர்அவ்ன் கோபமடைந்தாலும் நிதானமாகப் பேசினான் “நான் உண்மையாளனாகவே இருக்கிறேன். உங்களுக்கு நேரான பாதையைத்தான் காட்டுகிறேன். அப்படியிருக்க நமக்கு எப்படி வேதனை வந்தடையும்?” என்று பொய்யுரைத்தான்.
அந்த நம்பிக்கையாளர் மனம் தளராமல் அவையை நோக்கி “சமூகத்தாரே! நமக்கு முன் அழிந்து போனவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள், தீர்ப்பு நாளைப் பற்றியும் சிந்தியுங்கள்” என்றார்
எங்கே தம் சொந்த சமுதாயத்தார் மனம் மாறிவிடுவார்களோ என்று பயந்த ஃபிர்அவ்ன் “என்னுடைய சமூகத்தாரே! இந்த எகிப்தின் அரசாங்கம் என்னுடையதல்லவா? என் மாளிகை அடியில் ஓடிக் கொண்டிருக்கும் நைல் நதியின் இக்கால்வாய்களும் என் ஆட்சிக்கு உட்பட்டவை அல்லவா? அப்படிப்பட்ட நான் எங்கே, தெளிவாகப் பேச இயலாதவராகிய இழிவான அவன் எங்கே? என்னைவிட அவன் மேலானவனாக இருந்தால் ஏன் அவருக்குப் பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது ஏன் வானவர்கள் கூட்டமாக அவருடன் வரவில்லை?” என்று மூஸா (அலை) அவர்களை இழிவாகப் பேசினான். அவன் பேசியதில் நியாயம் உள்ளதென்று அவன் சமூக எகிப்து மக்களும் கீழ்ப்படிந்தனர்.
மூஸா (அலை) அவர்களின் பிரச்சாரம் பரவிக் கொண்டே இருந்தது. அவர்கள் தம் பனூ இஸ்ராயீலர்களிடம் “ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுங்கள், நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் மட்டுமே, மறுமையோ என்றென்றுமிருக்கும் நிலையான இடம். தீமை செய்கிறவர்களுக்கு அதற்கான தண்டனையுண்டு. நல்ல காரியம் செய்கின்றவர்கள் என்றென்றும் சொர்க்கத்தில் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு இணை வைக்காதீர்கள். அவனிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள். அவன் மன்னிப்பவனாக இருக்கின்றான்” என்று சொல்லி பனூ இஸ்ராயீலர்களைத் தம் பக்கம் வைத்திருந்தாலும், ஃபிர்அவ்னின் குறுக்கீடு அவர்களை வழிதவறவே செய்தது.
ஃபிர்அவ்னிடம் ஆட்சியும் அந்தஸ்தும் இருப்பதாலேயே அவர்கள் மிதமிஞ்சி நடக்கிறார்கள். ஆகையால் இறைவனின் சோதனைகளை அவனுக்கும் அவன் சமூகத்தாருக்கும் தரும்படி மூஸா (அலை) அவர்களும் ஹாரூன் (அலை) அவர்களும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
ஃபிர்அவ்ன் திட்டமிட்ட தீமைகளிலிருந்து மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காத்துக் கொண்டான். வேதனைகள் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
Leave A Comment