சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னை எதிர்த்துப் பேசியதையும், மூஸா (அலை) ஹாரூன் (அலை) அவர்களுடன் சேர்ந்து இறைவனின் துதி பாடியதையும் மக்கள் பார்த்த வண்ணம் இருந்தார்களே தவிர அவர்களால் தைரியமாக ஃபிர்அவ்னை எதிர்த்து நிற்க முடியவில்லை.
கண் முன்பே எது சரி எது தவறு என்று தெரிந்தும் அவர்களால் தம் விடுதலைக்காகப் பேச முடியவில்லை. சம்பந்தமில்லாத ஒருவர் வந்து தம்மைத் தம் அரசவையிலேயே அவமானப்படுத்திவிட்டதாக ஃபிர்அவ்ன் உணர்ந்தான். தான் காலங்காலமாகக் கட்டிக்காத்த மரியாதை தகர்ந்து தான் பொய்யன் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதை ஃபிர்அவ்னால் ஏற்க முடியவில்லை.
மூஸா (அலை) அவர்களின் பின்னால் பலர் சென்றதை ஃபிர்அவ்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவசரமாகத் தன் அமைச்சர்களை அழைத்தான். தம்மைத் துரத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் குறித்துத் தமது மந்திரியிடம் வினவினான் “ஹாமானே! நான் என்ன பொய்யனா?” உடனே ஹாமான் திகைப்புடன் அவரது முழங்காலில் நின்று “அரசே, உங்களைப் பொய்யர் என்று சொல்ல இங்கு யாருக்குத் தைரியம் உள்ளது” என்று கேட்டார்.
“அண்டசராசரத்தையும் காக்கின்ற இறைவன் இருப்பதாக மூஸா சொன்னாரே!?” என்று ஃபிர்அவ்ன் முடிக்கும் முன்பு, ஹாமான் “மூஸாதான் பொய் சொல்கிறார்” என்று ஃபிர்அவ்ன் எதிர்பார்த்த பதிலைத் தந்தார். திருப்தியடைந்த ஃபிர்அவ்ன் “ஆமாம். மூஸா பொய்யர் என்று எனக்கும் தெரியும்” என்று யோசனையில் ஆழ்ந்தார்.
“ஹாமானே, உயரமான ஒரு கோபுரத்தை எனக்காகக் கட்டுங்கள். அதன் மேலே நான் ஏறி மூஸாவின் இறைவனைப் பார்க்கப் போகிறேன். அப்போது யார் பொய் சொல்கிறார் என்று தெரிந்துவிடும்” என ஃபிர்அவ்ன் ஆணவத்தினால் தமது தீயச் செயல்களையும் அழகாக்க முற்பட்டான்.
ஃபிர்அவ்னின் கட்டளையின்படி மிக வேகமாகக் கோபுரம் எழுந்தது. கோபுரத்தில் ஏறியெல்லாம் இறைவனை அடைய முடியாது என்று ஹாமானுக்குத் தெரிந்தே இருந்தது. இருப்பினும் ஃபிர்அவ்னை திருப்திப்படுத்தும் வகையிலும் முதல் முறையாக அரசரை மறுத்தும் ஹாமான் “மாட்சிமை பொருந்திய அரசே, உங்களால் வானத்தில் எதையும் யாரையும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் உங்களைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று சொன்னதை எதிர்பார்த்தவனாக ஃபிர்அவ்னும் ஏற்றுக் கொண்டான்.
மூஸா (அலை) அவர்களின் பின்னால் சென்றவர்களின் கதி இதுதான் என்று மக்கள் அச்சம் கொள்வதற்காக, இறைவனை நம்பிச் சென்ற சூனியக்காரர்களை மக்கள் முன்னிலையில் சிலுவையில் அறைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனம் திருந்திய சூனியக்காரர்கள் அதற்கெல்லாம் பயமில்லாமல் “கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள். எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய். எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!
நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்” என்று தங்களது கடைசி ஆசையைச் சொல்லிவிட்டு, இறைவனுக்காக, தம் உயிரைத் துறந்தனர்.
அதைக் கண்டு மக்கள் பீதியில் இருந்தனர்.
“இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உங்களையும் உங்கள் கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?” என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். வழக்கம்போல் மக்கள் பயத்தில் அமைதியாக உறைந்து நின்றனர்.
“மூஸாவை இறைத்தூதர் என்று நம்பி அவரின் இறைவனை வழிபடுபவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் மக்களைக் கற்பழித்து உயிருடன் விட்டு விடுவோம். நாம் உங்கள் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்கள்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாத மூஸா (அலை) மிகவும் பொறுமையாக “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று தமது சமுதாயத்திடம் கூறினார்.
ஆனால் மக்களோ இந்த முறை மூஸா (அலை) அவர்களைக் குற்றம்சாட்டினார்கள் “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். நீர் எங்களிடம் வந்த பின்னரும் துன்புறுத்தப்பட்டே வருகின்றோம்” என்று கூறினர்.
அதற்கு மூஸா (அலை) அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக “நம் இறைவன், நம்முடைய எதிரிகளை அழித்து, பூமிக்கு உங்களை வழிதோன்றல்களாக்கி வைக்கக்கூடும். அதன்பிறகு நீங்கள் எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதையும் அவனே கவனிப்பான்” என்று கூறினார்.
மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு எதிராக வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று ஃபிர்அவ்ன் யோசிக்கும் முன்பே, இறைவன் ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களுக்குத் தொடர்ந்து தண்டனைகளை வழங்கினான்.
Leave A Comment