ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களை சூனியக்காரன் என்று நிரூபிக்கத் தம் நாட்டில் உள்ள எல்லாச் சூனியக்காரர்களையும் அழைத்தான். எல்லாரும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்திருந்தனர். போட்டிக்கான நாள் வந்தது. சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் எப்போதும்போல் ஃபிர்அவ்னே கடவுளாக வணங்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஃபிர்அவ்னின் அரச அவையில் மக்கள் திரண்டிருந்தார்கள். என்ன நடக்கப் போகிறது என்ற ஆவல் எல்லோரின் மனதிலும் இருந்தன.
ஹாரூன் (அலை) மூஸா (அலை) அவர்களுடன் வந்திருந்தார்கள். கூடியிருந்த சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னை நோக்கி “நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?” என்று கேட்டனர். “ஆம் நிச்சயமாக. நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகிவிடுவீர்கள். வேறு என்ன வேண்டும்?”என்றான் ஃபிர்அவ்ன்.
சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் பரிசை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மூஸா (அலை) பரிசையோ கூலியையோ எந்தவொரு பிரதிபலனையோ தனக்காக எதிர்பார்க்கவில்லை என்பதைப் பற்றி ஃபிர்அவ்ன் சிந்திக்கவே இல்லை. மூஸா (அலை) மட்டுமல்ல மக்களுக்காகத் தோன்றிய எந்தவொரு இறைத்தூதரும் மக்களை நல்வழிப்படுத்த நினைத்தார்களே தவிர அதற்கான கூலியை அவர்கள் எந்தக் காலகட்டத்திலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மூஸா (அலை) சூனியக்காரர்களை நோக்கி “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவனுடைய வேதனையிலிருந்து உங்களால் மீளவே முடியாது, நீங்கள் அழிந்துவிடுவீர்கள். பொய் என்றும் வெற்றி் பெறாது” என்று எச்சரிக்கை விடுத்தார்கள்.
சூனியக்காரர்களுக்குக் கொஞ்சம் பதட்டமாகிவிட்டது. தங்களுக்குள் இரகசியமாக விவாதித்துக் கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஹாரூன் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் இறைத்தூதராக இருக்க முடியாது என்று நினைத்த சூனியக்காரர்கள் “இவ்விருவரும் சூனியக்காரர்கள். அவர்களின் சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறப்பான உங்கள் மார்க்கப் பாதையையும் வழிமுறைகளையும் அழிக்க நினைக்கின்றனர்” என ஃபிர்அவ்ன் தரப்போகும் பரிசுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, பனூ இஸ்ராயீலர்களை நோக்கிக் கூறினர். “வாருங்கள், யார் வெல்கிறார்கள் என்று பார்த்துவிடுவோம். உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள். அணிவகுத்து வாருங்கள்” என்று மூஸா (அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்களையும் அழைத்தனர்.
“மூஸாவே! நீர் எறிகின்றீரா? இல்லை நாங்கள் முதலில் எறியட்டுமா?” என்று சூனியக்காரர்கள் கேட்டனர்.
“நீங்களே முதலில் எறியுங்கள்!” என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் பாம்பாகி சீறுவதைப் போலவும், நெளிவதைப் போலவும் மூஸா (அலை) அவர்களுக்குத் தோற்றமளித்தது. அதைக் கண்டு அவர்கள் பயந்தார்கள்.
அப்போது அல்லாஹ் மூஸாவிடம் “பயப்படாதீர்கள். நிச்சயமாக நீங்கள்தான் வெல்வீர்கள். சூனியக்காரன் செய்வது வெறும் சூழ்ச்சியே. அவன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” என்று உறுதியளித்தான்.
மூஸா (அலை) தமது வலது கையில் உள்ள கைத்தடியை எறிந்தார்கள். அதிலிருந்து வெளிப்பட்ட பாம்பு அவர்கள் செய்த சூனியங்கள் யாவற்றையும் விழுங்கிவிட்டது.
இதைக் கண்ட மறுநொடியே எல்லா சூனியக்காரர்களும் ‘ஸஜ்தா’ செய்தனர். அதாவது இறைவனுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் மண்டியிட்டுத் தம் நெற்றித் தரையில் படும்படி சிரம் தாழ்த்தி “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறோம்” என்றனர்.
அதைக் கேட்டுக் கோபம் தலைக்கேறிய ஃபிர்அவ்ன் “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவோ? உங்களை மாறுகால் மாறுகை வாங்கி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை அப்போது அறிந்துக் கொள்வீர்கள்” என்று கூறினான்.
“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும்விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள். இவ்வுலக வாழ்க்கையில்தான் நீ தீர்ப்பு அளிக்க முடியும். எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பான். எங்கள் இறைவனை நாங்கள் நம்புகிறோம். அல்லாஹ்வே சிறந்தவன், நிலையானவன்.
இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே, அதில் அவன் சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான். நல்லறங்கள் புரிந்து நம்பிக்கைக் கொண்டவராக அவனிடம் வருவோருக்கு உயர்வான பதவிகள் உள்ளன. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி” என்று சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னின் தண்டனைக்குப் பயப்படாமல் உறுதிப்படக் கூறினார்கள்.
இறைவனை நம்பிவிட்ட பின் இறைவன் அவர்களைக் காத்தருள்வான். நம்பிக்கையாளர்களை என்றும் அல்லாஹ் கைவிடுவதில்லை.
Leave A Comment