நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சோதனைக் காலத்தில் யூசுப் (அலை) அவர்களின் பொறுமையையும் இறையச்சத்தையும் குறித்து விளக்குவதற்காகத் திருக்குர்ஆனில் யூசுப் (அலை) அவர்களின் அழகிய வரலாற்றை `வஹீ` என்ற அருள்வாக்கு மூலம் இறைவன்அருளினான்.
யாகூப் (அலை) பயந்தது போலவே யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள், யூசுப் (அலை) அவர்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டினார்கள். “நம் தந்தை யூசுப் மற்றும் புனியாமின் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து நமக்குத் தவறு இழைக்கிறார்கள். நாம் யூசுப்பை கொலை செய்ய வேண்டும் அல்லது கண் காணாத தேசத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயே யூசுப்பை விட்டுவிட்டு வர வேண்டும். அப்போதுதான் தந்தையின் முழுமையான அன்பு நமக்கு மட்டுமே கிடைக்கும்” என்று பொறாமையின் வெளிப்பாட்டினால் தவறு இழைக்கத் துணிந்தனர். சகோதரர்களில் ஒருவர் குறுக்கிட்டு “யூசுப்பை கொலை செய்ய வேண்டாம், அவரை ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்றால் நாம் அவரை ஓர் ஆழமான பாழ்கிணற்றில் தள்ளிவிட்டுவிடுவோம். அந்த வழியாகச் செல்லும் பிரயாணிகளில் யாராவது அவரை எடுத்துச் சென்றுவிடட்டும்” என்று சொன்னார். அவர் சொன்ன ஆலோசனையின்படியே செய்யலாம் என்று முடிவானது. தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தந்தை யாகூப்பிடம் சென்று அவர்கள் ஊருக்கு வெளியே வேட்டைக்குச் செல்வதாகவும் தங்களுடன் யூசுப்பை அனுப்பும்படியும் கேட்டனர்.
யாகூப் (அலை) அவர்களின் மனம் ஒப்புக் கொள்ளாமல் “நீங்கள் அவரைப் பார்க்காத நேரத்தில் ஓநாய் யூசுப்பை பிடித்துத் தின்றுவிட்டால்?” என்று தன்னுடைய தயக்கத்தைச் சொல்ல, “நாங்கள் வளர்ந்த பலசாலியான அண்ணன்கள் இத்தனை பேர் இருக்கும் போது சின்னத் தம்பியை எப்படி ஓநாய்க்கு இரையாக்குவோம்? நாங்கள் கண்டிப்பாகப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம். எங்களை நம்பி அனுப்புங்கள்” என்று மீண்டும் வலியுறுத்தினர்.
Leave A Comment