நூஹ் வம்ச வழியிலே பத்தாவது தலைமுறையில் ஆஸர் என்பவரின் மகனாக பாபிலோன் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்கள் நபி இப்ராஹீம் (அலை). இப்ராஹிம் அவர்களின் சகோதரர் இறந்த பிறகு அவருடைய குழந்தைகளான லூத் மற்றும் சாராவையும் அழைத்துக் கொண்டு அவர்கள் கன்னான் என்ற பகுதிக்கு (இன்று சிரியா, ஜோர்டான் இருக்கும் இடம் ) குடிப்பெயர்ந்தார்கள்.
தன்னுடைய வாழ்வும் மரணமும் ஒரு மனிதரிடமோ, சிலைகளிடமோ, சூரியன், சந்திரன், நெருப்பு, நட்சத்திரம் என்று எதன் கைகளிலும் இல்லாதபோது தான் ஏன் இதற்கு முன்பு நின்று சிரம் தாழ்த்த வேண்டும், அடிபணிய வேண்டுமென்று தன் சிறு வயதிலேயே கேள்விகளை எழுப்பியவர்கள் இப்ராஹிம் (அலை). சிந்திக்கத் தொடங்கிய அவர் “இறைவனுக்கு இணை வைக்கும் ஒவ்வொன்றையும் விட்டு நான் விலகி விட்டேன்” என்று உறுதியுடன் கூறி இறைவனிடம் தன்னை வழிநடத்த வேண்டுமென்று பிரார்த்தித்ததோடு, மக்களிடமும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.
இப்ராஹிம் நபிகளின் தந்தை ஆஸர் புரோகிதராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சிலைகளை வடிவமைப்பவரும் கூட. மதகுரு குடும்பத்தில் வந்தவர்கள் என்பதால் அவர் வெவ்வேறு அளவில் வடிவமைத்த சிலைகளை அவர் தெய்வங்களென்று மக்களை நம்ப வைத்து அதனை வியாபாரமாக்கினார். இது தவறென்றும் படைத்த இறைவன் ஒருவன் இருக்க அவனுக்கு இணைவைக்கும் சிலைகளை தெய்வமாக்கலாமா, நியாயமா என்று கேள்வி கேட்டார் இப்ராஹிம். தந்தை ஆஸருக்குக் கோபம் வந்து “எனது தெய்வங்களை நீ அலட்சியப்படுத்தினால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். என்னை விட்டு விலகிச் செல்” என்று மகனை விலக்கி வைத்தார்.
“சிலைகளை முட்டாள்களே வணங்குவார்கள்“ என்று சொல்லி ஊரில் உள்ள எல்லா மக்களிடமும் கெட்ட பெயரையும் வெறுப்பையும் சம்பாதித்த இப்ராஹிம் (அலை), நாட்டின் மன்னனாக இருந்த நம்ரூத்தையும் சந்தித்து ஏகத்துவம் பற்றி விளக்கினார்கள்.
ஒருநாள் நம்ரூதின் அரண்மனைக்கே இப்ராஹிம் (அலை) நேரடியாகச் சென்று சத்திய மார்க்கத்தைப் பற்றி விளக்கி விவாதிக்கத் துணிந்தார்கள். “என் இறைவன் உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹிம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன், மரணிக்கச் செய்வேன்” என்று நம்ரூத் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். அதனை நீ மேற்கில் உதிக்கச் செய்!” என்று இப்ராஹிம் (அலை) சொன்னார்கள் . ஏக இறைவனை மறுத்த அவன் வாயடைத்துப் போனான்.
இன்னொரு சமயத்தில் ஒரு திருவிழா வந்த போது மக்கள் அனைவரும் ஊருக்கு வெளியே சென்று விட்டனர். அத்தருணத்தில் இப்ராஹிம் (அலை) அவர்கள் சிலைகள் இருக்கும் இடத்திற்கு வந்து கோடாரியைக் கொண்டு அங்கிருந்த ஒரு பெரிய சிலையைத் தவிர்த்து மற்ற எல்லாச் சிலைகளையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள். நடுவில் நின்ற பெரிய சிலையின் கழுத்தில் அந்தக் கோடாரியை மாட்டினார். திரும்பி வந்த மக்கள் சிலைகள் உடைந்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தனர். நம் தெய்வங்களைப் பற்றி அவதூறாகப் பேசித் திரிந்த இப்ராஹிம்தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்து அவரை அழைத்தார்கள்.
அவரிடம் “இப்ராஹிமே! எங்கள் தெய்வங்களை உடைத்தது நீ தானே?” என்று கேட்டார்கள். அவர் மிகவும் தன்மையாக “இந்தப் பெரிய சிலை கழுத்தில் தானே கோடாரியுள்ளது, அதுதான் உடைத்திருக்கக் கூடும். அந்தச் சிலையிடமே கேட்டுக் கொள்ளுங்கள்” என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.
அவர்கள் அவர் சொல்ல வரும் விஷயத்தைப் புரிந்து கொண்டார்கள். நாம்தான் இவற்றை தெய்வங்களாக நம்பி தவறு இழைத்துவிட்டோம் என்று சிலர் சொன்னாலும் அவர்களால் நேரடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அவமானப்பட்டதை மறைக்கும் விதமாக, அதனைத் தவிர்ப்பதற்காக “சிலைகள் பேசாது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா!?” என்று கேட்டனர்.
“ஓ! அப்படியானால் சிலைகள் பேசாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி எந்த நன்மையும் தீமையும் அளிக்காதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்? இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனுக்கு இணை வைக்கிறீர்கள். அது உங்களுக்குக் கேடுதான் என்று உணர்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய நாடினால் இவைகளை நெருப்பிலிட்டு எரியுங்கள்” என்று கூறினார்.
அவர் பேசியதை மக்கள் ஏற்க முடியாமல் அவர் மீது கோபம் கொண்டனர். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்ராஹிம் (அலை) அவர்களைத் தீர்த்துக் கட்ட முயற்சித்தான் நம்ரூத்.
இப்ராஹிமுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவரை நெருப்புக் குண்டத்தில் தூக்கியெறிய வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். அப்படியான தண்டனை என்று கேட்டதும் இப்ராஹிம் தான் கூறியது தவறு என்று மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்தார்கள்.
நெருப்புக் குண்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களைக் குண்டுக்கட்டாகக் கட்டி நெருப்பில் தூக்கி எறிந்தார்கள். அவர்கள் தீயில் கருகி சாம்பலாகிவிடுவார், பொசுங்கியவுடன் அவர் பிரச்சாரம் செய்த விஷயங்களும் மறைந்துவிடும் என்று ஆவலுடன் நம்ரூத் எதிர்பார்த்தான். ஆனால் அங்கு காட்சி மாறியது. அல்லாஹ் அந்த நெருப்புக் குண்டத்தையே இப்ராஹிம் (அலை) அவர்களுக்குக் குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் மாற்றினான்.
“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்” என்று இப்ராஹிம் (அலை) நெருப்பிலிருந்தபடி கூறினார்கள்.
இச்சமயத்தில் நம்ரூத் இறை நிராகரிப்பை விட்டுவிட எண்ணினான். ஆனால் அவனை ஏதோ தடுத்தது. நம்ரூத் இப்ராஹீம் (அலை) அவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். அவ்வாறே இவர்கள் ஸாரா, லூத் ஆகியோர்களுடன் வெளியேறினார்கள். அதன் பிறகு ஸாராவை பின்னாட்களில் மணம் முடித்துக் கொண்டார்கள். லூத்தை இறைவனின் கட்டளைப்படி வேறு நாட்டுக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் தம் மனைவி சாராவுடன் மிஸ்ர் நாட்டுக்கு சென்று அங்கு தங்கினார்கள்.
திருக்குர்ஆன்: 19:46, 2:130, 2:258, 21:58-69, 6:76-83
ஸஹிஹ் புகாரி 4564.
[அலை: “அலை ஹிஸ்ஸலாம்” அல்லது “அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்” என்பதன் சுருக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்) தவிர மற்ற நபிமார்களைப் பற்றிக் கூறும்போது இவ்வாறு பயன்படுத்தி வருவது வழக்கமாகவுள்ளது. அவர் மீது இறைவனின் சிறப்பருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள். அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் தான் அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்பதற்கும் பொருளாகும்.]
Leave A Comment